24 நாள்கள், 500 கிலோமீட்டர், கர்நாடகத்தில் ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் வெற்றிக்கு வித்திட்டிருக்கிறது. காங்கிரஸ் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கடந்து வெற்றிப் பாதையில் பயணித்துவருகிறது. இதில் அந்த மாநிலத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் உழைப்பு, பா.ஜ.க மீதான மக்களின் அதிருப்தியைக் கடந்து... ராகுலின் யாத்திரைக்கும் பெரும் பங்கு இருப்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியும்.பாரத் ஜோடோ யாத்திரை
கர்நாடகத் தேர்தல் ’கியர்’ யாத்திரை!
2022-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் குமரியில் ராகுல் காந்தி கையிலெடுத்த பாரத் ஜோடோ யாத்திரை கர்நாடகத் தேர்தலுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்திருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் “I am unstoppable today” என ராகுலின் பாரத் ஜோடோ புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தனர். அதேபோல், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டும், “ ராகுலின் தேச ஒற்றுமை யாத்திரை கர்நாடகத் தேர்தலில், காங்கிரஸுக்கு வெற்றியை அளித்திருக்கிறது. வகுப்புவாத அரசியலை நிராகரித்து, வளர்ச்சி அரசியலை கர்நாடகம் தேர்ந்தெடுத்திருக்கிறது. இது வரவிருக்கும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா தேர்தல்களிலும் எதிரொலிக்கும்” எனக் கருத்து தெரிவித்திருக்கிறார்.அசோக் கெலாட்
தொண்டர்களை ஒன்று திரட்டிய யாத்திரை!
காங்கிரஸ் கட்சிமீது பொதுவாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டாக இருப்பது, ’அடிமட்டத் தொண்டர்கள் வேலை செய்வதில்லை’ என்பதுதான். ஆனால், பாரத் ஜோடோ யாத்திரை கர்நாடகத் தேர்தலில் தொண்டர்களை ஒன்றிணைக்கப் பெரும் தொடக்கமாகவே அமைந்தது. ஆனாலும், ``யாத்திரை முடியும்போது நிர்வாகிகள் காணாமல்போவார்கள். அவர்களைத் தேர்தலில் ஒருங்கிணைத்துச் செயல்பட முடியாது. தலைவர்கள்தான் தேர்தலுக்கு ஆர்வமாகயிருப்பார்கள், அடிமட்டத் தொண்டர்களிடம் அதே ஆர்வத்தையும் ஒற்றுமையையும் எதிர்பார்க்க முடியாது" எனும் விமர்சனங்கள் கர்நாடக காங்கிரஸ்மீது முன்வைக்கப்பட்டன. ஆனால், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை ராகுல் காந்தியின் யாத்திரை ஒருங்கிணைத்தது. அதைத் திறம்பட தேர்தலுக்கும் பயன்படுத்தியிருக்கிறது காங்கிரஸ் கட்சித் தலைமை. யாத்திரையின்போது முன்னெடுத்த சின்னச் சின்ன பிரசாரங்களும் கட்சியினரை ஒருங்கிணைப்பதில் பெரும் பாங்காற்றின. குறிப்பாக, ஏழு மாவட்டங்களிலிருந்து வேலையில்லாத இளைஞர்களை அழைத்து ராகுலுடன் உரையாடவைத்தது பெரும் வெற்றியாக அமைந்தது.சித்தராமையா, டி.கே.சிவக்குமார்
அதேபோல், பா.ஜ.க தலைவர்களால் முன்வைக்கப்பட்ட `சித்தராமையா-டி.கே.சிவக்குமார் மோதல்' என்ற வாதத்தைப் பொய்யாக்கும் வகையில், அவர்களின் ஒற்றுமையையும் இந்த பாரத் ஜோடோ யாத்திரை உறுதிப்படுத்தியது. யாத்திரைக்கும் தேர்தலுக்கும் பெரிய இடைவேளை இல்லாததால், இவர்கள் ஒற்றுமை, தேர்தல் நேரத்தில் கட்சியை பலப்படுத்த பேரூதவியாக இருந்தது. இப்படிச் சரியான திட்டமிடலுடன் காங்கிரஸைத் தேர்தலைச் சந்திக்கவைத்தது ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரைதான்.காங்கிரஸ் கர்நாடகாவின் புதிய முதல்வர் யார்... சித்தராமையாவா, டி.கே.சிவக்குமாரா?!
அதேபோல், ராகுல் கர்நாடகத்திலிருந்த 24 நாள்களில் கர்நாடகத்தின் முக்கியப் பிரச்னைகள் குறித்துப் பேசியிருக்கிறார். பா.ஜ.க அரசின் ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம், பிரிவினைவாத அரசியல், விலைவாசி உயர்வு என கர்நாடகத்தில் இருக்கிற பிரச்னைகளைப் பேசியதும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது தொடங்கிய இந்தச் சூடு, தேர்தல் வரை நீடித்திருக்கிறது. இந்தத் தாக்கம் காரணமாகத்தான் கர்நாடகத்தில் இந்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தலைவர் நட்டா வருகை என அனைத்தையும் கடந்து காங்கிரஸை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்க மக்கள் முடிவுசெய்திருக்கின்றனர்.
இது அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, தேர்தல் நேரங்களில் `மோடி அலை வீசுகிறது' எனச் சொல்லப்பட்டுவந்தது. ஆனால், இந்த முறை கர்நாடகத்தில் மோடி அலையை மொத்தமாகச் சுருட்டியிருக்கிறது ராகுலின் ஜோடோ யாத்திரை சுனாமி.
`இந்தத் தேர்தல் வெற்றி, இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு புது உத்வேகத்தை அளிக்கும். நாடு முழுவதும் இந்த வெற்றியைக் கொண்டாடும் காங்கிரஸ் தொண்டர்களே இதற்கு சாட்சி' என்கிறார்கள் அரசியலை உற்றுநோக்குபவர்கள்.``இதுதான் எனது கடைசி தேர்தல்!" - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா
http://dlvr.it/Sp0yZ6
Sunday, 14 May 2023
Home »
» `Unstoppable' கர்நாடக காங்கிரஸ்; மோடி அலையை விழுங்கியதா ராகுலின் `ஜோடோ’ யாத்திரை?