கலைஞரின் பேனா
கலைஞர் மு.கருணாநிதி அதிகாலை எழுந்ததும் கையிலெடுக்கும் பொருள்களில் முதன்மையானது அவரின் பேனா. இளம் வயதில் நடத்திய 'மாணவ நேசன்' இதழ் தொட்டு, 1942-ல் அவர் தொடங்கிய 'முரசொலி' இதழ் எனத் தொடர்ந்து, ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழுக்காகவும் தமிழக மக்களுக்காகவும் தீராமல் எழுதிக்கொண்டே இருந்தது கலைஞரின் பேனா. கருணாநிதி
இயல், இசை, நாடகம் மட்டுமில்லாமல் சுவைத்தமிழ், வீணைத்தமிழ், கவித்தமிழ், பொங்குதமிழ், பொன்தமிழ் என 92 அடையாளங்களால் தமிழை உருவகப்படுத்தினார். தமிழை மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியங்களையும், தமிழ் ஆளுமைகளையும் கொண்டாடத் தவறவில்லை அவர். ஆட்சிப் பொறுப்பேற்றபோது தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டவர். 1940-கள் வரை 'M' என ஆங்கிலத்தில் தன் முதலெழுத்தை எழுதிய கருணநிதி, பின்னர் அதை தமிழில் 'மு' என எழுதத் தொடங்கினார். பெரும்பாலும் கறுப்பு மையையே பயன்படுத்தினார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் `தமிழ்’
1930-களின் பிற்பகுதியில் திருவாரூரில் பள்ளி மாணவனாக இருந்தபோதே கருணாநிதியின் தமிழ்ப்பணி தொடங்கியது என்கிறார்கள். 1938-ல் ராஜாஜி இந்தியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டுமென முடிவெடுத்ததை பெரியார், அண்ணாதுரை போன்றோருடன் தமிழறிஞர்கள் பலரும் எதிர்த்தனர். அப்போது, 14 வயது சிறுவனான கருணாநிதி, பள்ளி மாணவர்களுடன் இந்தியை எதிர்த்து, கையில் தமிழ்க்கொடியுடன் திருவாரூர் தெருக்களில் ஊர்வலம் வந்தார். ‘வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம் /வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்’ என அவர் எழுதிய வார்த்தைகள், ஊர்வலத்தில் முழக்கமாக எதிரொலித்தது.
இந்தக் காலகட்டத்தில் வீதி பிரசார ஊர்வலம் ஒன்றைத் தலைமை ஏற்று நடத்திக்கொண்டிருந்தபோது, கருணாநிதியின் இந்தி ஆசிரியர் சாலையில் நடந்து சென்றார். தன்னுடைய மாணவர்கள் இந்தி எதிர்ப்பு பதாகைகளையும், சுவரொட்டிகளையும் வைத்திருந்ததை அவர் பார்த்தார். கருணாநிதி தன்னுடைய ஆசிரியருக்கும் ஒரு துண்டறிக்கையை வழங்கினார். இதைப் பற்றி அவர் எழுதியிருக்கும் சுயசரிதையான 'நெஞ்சுக்கு நீதி' எனும் நூலில் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார். தனது இந்தி ஆசிரியரை நேருக்கு நேர் சந்தித்ததில் தனக்கு அச்சம் ஏதும் இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். "இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என்னும் என்னுடைய முழக்கம் என் நரம்புகளில் ஓடிக்கொண்டிருந்த உணர்வு. சிலர் இதை வெறி என்றுகூட சொல்லலாம். ஒருவர் காட்டும் அன்பை வெறி என்று கூறினால் அத்தகைய வரையறையை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை" என்றும் அவர் எழுதியிருக்கிறார்
"இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு" என்று அக்டோபர் 13, 1957-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பேசினார் கருணாநிதி.
முதல் கவிதை - சிதம்பரத்தில் நுழையத் தடை
"பரணி பலபாடிப் பாங்குடன் வாழ்ந்த
பைந்தமிழ் நாட்டில்
சொரணை சிறிதுமில்லாச் சுயநலத்துச்
சோதரர்கள் சிலர்கூடி
வருணத்தை நிலைநாட்ட வகையின்றிக்
கரணங்கல் போட்டாலும்
மரணத்தின் உச்சியிலே மானங்காக்க
மறத்தமிழா! போராடு!
வருணாசிரமம் வீழ்க!"
சிதம்பரத்தில் நடந்த தீட்சிதர் மாநாட்டைக் கண்டித்து எழுதப்பட்ட இந்தக் கவிதை முரசொலி துண்டுப் பிரசுரத்தில் அச்சாகி இருந்தது. முதல் மனைவி பத்மாவதியுடனான திருமணம் முடிந்ததும் இந்தக் காலத்தில்தான். திருமணம் முடிந்து இந்தத் துண்டுப் பிரசுரத்துடன் சிதம்பரத்துக்குள் நுழைய அவருக்கு காவல்துறை தடை விதித்தது. கருணாநிதி 100: `கார் விபத்து; கண்ணில் பாதிப்பு; கறுப்புக் கண்ணாடி’ - கருணாநிதியே பகிர்ந்த அந்தக் கதை
வள்ளுவனும் கருணாநிதியும்...
ஒரு சமூகம் தன்னெழுச்சியோடு, சுயமானத்தோடு நிற்க வேண்டும் என்றால் அது பற்றிக்கொள்ள அடையாளம் ஒன்று வேண்டும். தமிழ்நாடு இன்றைக்கும் இந்துத்துவவாதிகளுக்கும், சனாதன தர்மத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குகிறது என்றால் தமிழ் என்கிற அடையாளத்தைப் பற்றிக்கொண்டதுதான். இப்படித் தமிழர்களுக்கான மிக முக்கியமான அடையாளம் ஒன்றை, கலைஞர் கருணாநிதி உருவாக்கித் தந்திருக்கிறார். அதுதான் திருவள்ளுவர்.திருவள்ளுவர்
1963-ம் ஆண்டு தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது சட்டமன்றத்தில் திருவள்ளுவரின் படத்தை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் கருணாநிதி. கருணாநிதி திருவள்ளுவர் படத்தை வாங்கித் தருவதாக இருந்தால் சட்டமன்றத்தில் வைக்க ஆட்சேபனை இல்லை என்று கிண்டலாக தெரிவித்தார் அப்போதைய சபாநாயகர் கிருஷ்ணராவ். கிருஷ்ணராவ் கிண்டலுக்குச் சொன்னதை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஓவியர் வேணுகோபால் சர்மாவைக் கொண்டு திருவள்ளுவர் படத்தை வரையச் செய்தார். அதற்கு முன்பு வரையப்பட்ட திருவள்ளுவர் படங்களில் எல்லாம் திருவள்ளுவர் மத அடையாளங்களுடன் அமர்ந்திருப்பார்.
திருவள்ளுவரை முன்வைப்பதே இந்து சனாதனத்துக்கு எதிராகத்தான் என்பதால், எந்த மத அடையாளங்களும் இருக்கக் கூடாது என்று முடிவுசெய்தார் கருணாநிதி. அந்த ஓவியத்தை காமராஜர், அண்ணா என இருவரிடமும் காட்டி ஒப்புதலும் பெற்றார்.
திராவிட இயக்கங்களுக்கும் திருக்குறளுக்குமான பந்தம் நீண்ட நெடியது. திருக்குறள் மாநாடு என்று பெரியார் நடத்திய மாநாடு அந்தக் காலகட்டத்தில் முக்கிய விவாதத்தை ஏற்படுத்தியது. பின் நாளில் ஆட்சிக்கு வந்த தி.மு.க-வும் திருக்குறளைக் கொண்டாடியது. அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த கருணாநிதி, பேருந்துகளில் திருக்குறள் திட்டத்தை முழு வேகத்தில் அமல்படுத்தினார். இது மக்கள் மத்தியில் திருக்குறள் ஒரு முக்கிய பேசுபொருளாக மாற அடித்தளமிட்டதுடன், பட்டிதொட்டியெல்லாம் திருக்குறளைக் கொண்டுசேர்த்தது.
1969-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வரானபோது திருவள்ளுவரின் பிறந்தநாளைத் தமிழர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று கருதினார். 1923-ம் ஆண்டு மறைமலை அடிகள் தலைமையில் நடந்த தமிழறிஞர் ஆய்வுக்கூட்டத்தில் கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் திருவள்ளுவர் என்று முடிவுசெய்யப்பட்டிருந்தது. இதை மையமாக வைத்து , திருவள்ளுவர் பிறந்தநாளை பொங்கலுக்கு அடுத்த நாள் என நிர்ணயம் செய்தார் கலைஞர் கருணாநிதி. பொங்கல் என்பது தமிழர் திருநாள், விவசாயிகளின் பண்டிகை. எனினும் பொங்கல் திருநாளை சிலர் இந்துக்களின் திருநாளாக மட்டும் கட்டமைக்க முயற்சிகள் நடந்துவந்தன. இந்தச் சூழலில்தான் பொங்கல் என்பது அனைத்து மதத்தினருக்குமானது என்பதைக் குறிக்க பொங்கல் கொண்டாட்டத்துக்குள் திருவள்ளுவர் தினத்தையும் சேர்த்தார் கலைஞர் கருணாநிதி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.வள்ளுவர் சிலை
அதோடு நில்லாமல் 1974-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார். திராவிடக் கட்டடக் கலையை மையமாகக்கொண்ட வள்ளுவர் கோட்டத்துக்கு பல சிறப்புகள் இருக்கின்றன.
1975-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், `கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும்' என முடிவெடுக்கப்பட்டது. இதற்கு முக்கியக் காரணம், தமிழகத்தின் தெற்கு எல்லையான கன்னியாகுமரியின் அடையாளமாக விவேகானந்தர் பாறைதான் இருந்தது. வடநாட்டவர், அதுவும் ஓர் இந்து மதத் துறவியின் பெயரில் ஒரு பாறையை, தமிழ்நாட்டின் தென்கோடியின் அடையாளமாக வைத்திருந்தனர். இதை முறியடிப்பதற்காகவே பிரமாண்டமான வள்ளுவர் சிலையை அமைக்க முடிவெடுத்தார் கலைஞர். 1976-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு, அந்தப் பணியும் அப்படியே முடங்கிப்போனது. மீண்டும் 1989-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதும் வள்ளுவர் சிலை அமைக்கும் பணியை தீவிரப்படுத்தினார் கலைஞர் கருணாநிதி.
1990 செப்டம்பர் 6-ம் தேதி வள்ளுவர் சிலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. மீண்டும் ஆட்சிக்கலைப்பு, பிறகு ஆட்சி மாற்றம் என்று பலதடைகள் வந்தன. இறுதியாக கலைஞர் ஆட்சியில், 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. 133 அடி உயரத்தில் 7,000 டன் எடையுடன் உருவாக்கப்பட்டதை இந்தியாவே திரும்பிப் பார்த்தது. சுனாமிக்குக்கூட தாக்குப்பிடித்த திருவள்ளுவர் சிலை, இன்று கன்னியாகுமரிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கே அடையாளமாகத் திகழ்கிறது. பட்டேல் உள்ளிட்ட தலைவர்களை அடையாளமாக நிலைநிறுத்த பெரும் சிலைகள் நிறுவப்படும் இந்தக் காலத்துக்கெல்லாம் முன்பாகவே திருவள்ளுவரை அடையாளமாக்கினார் கருணாநிதி.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
தமிழ்த்தாய்க்கு கோயில், தமிழ் வளர்ச்சிக்கென்று தனி துறை, தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடமை ஆக்கம், கட்டாயப் பாடமாக தமிழ், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு இவையெல்லாம் தமிழையும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியையும் இணைக்கும் கூற்றுகளில் சில. அடுக்குமொழி தமிழும் குறும்பு வசனங்களும் கருணாநிதியையும் தமிழையும் பிரிக்க முடியாது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு.
கடவுள் எதிர்ப்பும் ராமானுஜரும்!
"அம்பாள் என்றைக்கடா பேசினாள்? அறிவு கெட்டவனே" என தன் காத்திரமான வசனங்களால் திராவிட சினிமா என்ற வகைமைக்குத் தனித்துவ அடித்தளமிட்டவர் கருணாநிதி. 2018-ம் ஆண்டு நடந்த கோவா திரைப்பட விழாவில் பா.ஜ.க இந்தத் திரைப்படத்தைத் திரையிட தடை விதித்ததில் இருந்தே இந்தப் படம் இன்றளவும் சமகால அரசியலுடன் பொருந்திப் போவதை உணர முடியும். "ஏய்..., பூசாரி.., முதலில் உன் ஜாதகத்தைக் கணித்துக்கொள்" எனக் கொந்தளித்த அதே கருணாநிதிதான் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை தொலைக்காட்சித் தொடராக எழுதினார்.
இது குறித்து பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன், " கலைஞருடைய தொலைக்காட்சித் தொடரைப் பாராட்டி திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து அர்ச்சகர்கள் வந்து சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அவருக்கு மரியாதை செய்த புகைப்படம் ஊடகங்களில் வெளியானது. சுற்றிலும் வைணவ சின்னங்களுடன், பூணூலுடன் பிராமணர்கள் சூழ்ந்திருக்க கலைஞர் நடுவில் வீற்றிருக்கும் காட்சி வரலாற்றின் சுவாரஸ்யமான முரண்களில் ஒன்று எனப் பலரும் கருதலாம்.
திராவிட இயக்கத்தின் இலக்கு, லட்சியம் எல்லாம் சமூகநீதி என்பதற்கும், ஏற்றத்தாழ்வு நீக்கம் என்பதற்கும் அந்தப் புகைப்படத்தைவிட வேறென்ன சான்றாதாரங்கள் தர முடியும்" என்றார். `தென்பாண்டிச் சிங்கம்', `ரோமாபுரி பாண்டியன்', 'பொன்னர் சங்கர்' எல்லாவற்றிலும் வெளிப்படுவது கலைஞரின் போர்க்குணம்தான்.
கலைஞரின் நாடகங்கள்
"ஒரு நாடகம் 100 பொதுக்கூட்டங்களுக்குச் சமம்" என்பார் பெரியார். அதை மெய்ப்பிப்பது போலவே கலைஞர் கருணாநிதியின் நாடகங்கள் அமைந்தன. `நச்சுக்கோப்பை' முதல் `உன்னைத்தான் தம்பி' வரை கலைஞர் எழுதிய 19 நாடகங்களும் அவருடைய தீவிர திராவிட எழுச்சிக்கான செயல்பாட்டின் ஒரு பகுதிதான். படிப்பறிவற்ற மக்களிடம் கலைஞரின் நாடகங்கள் ஏற்படுத்திய தாக்கமே தமிழர்களை திராவிட உணர்வாளர்களாக மாற்றி இயக்கத்தையும், தி.மு.க-வையும் நோக்கிப் படையெடுக்க வைத்தன. `நச்சுக்கோப்பை' நாடகத்தை எழுதியபோது அவருக்கு வயது 18. செல்வ சந்திரா என்ற முதல் கதையை எழுதும்போது அவருக்கு 15 வயது. மாமன்னன் ராஜராஜசோழன்
கலைஞரும் ராஜ ராஜ சோழனும்
தஞ்சை பெருவுடையார் கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவைக்கொண்டாடிய கருணாநிதி, கோயிலின் உள்ளே ராஜ ராஜ சோழனின் சிலையை வைக்கப் போராடி, கடைசியில் கோயிலின் வாயிலில் அதை நிறுவினார். ராஜ ராஜ சோழன் போன்ற பேரரசர்களை தன் கதையின் நாயகர்களாக ஆக்கவில்லை என்பதை உற்றுக் கவனிக்க வேண்டியதிருக்கிறது என்கின்றனர் தமிழறிஞர்கள்.
ஒரு முறை கவிஞர் இளையபாரதி கலைஞர் கருணாநிதியிடம் அவரின் `பச்சைக்கிளி' என்ற கவிதை குறித்து வியந்து பேசியிருக்கிறார். உடனே அறையிலுள்ள கவிதை நூலை எடுத்து வரச் சொல்லி அந்தக் கவிதையை இளையபாரதியை வாசிக்கச் சொல்லியிருக்கிறார். வாசித்து முடித்த பிறகு சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு, "நான் செத்த பிறகுதான்யா பாராட்டுவாங்க. அதுவரைக்கும் யாரும் பேசமாட்டாங்க" என்று கூறியிருக்கிறார்.கலைஞர்
இந்த வார்த்தைகள் கலைஞரின் தமிழுக்கு மட்டுமல்ல அவரது அரசியல் வாழ்க்கைக்கும் பொருந்தும். சாவுக்குப் பிறகும் தன் தமிழால், தான் பேசிய அரசியலால் சண்டை செய்து கொண்டிருப்பவர்தான் கலைஞர் கருணாநிதி.!
http://dlvr.it/Sq4W3m
Saturday, 3 June 2023
Home »
» கருணாநிதி 100: `பராசக்தி’ வசனம் முதல் வள்ளுவர் புகழ் வரை... கருணாநிதியும் தமிழும்!