கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சேர்த்தலாவைச் சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். தன்னை ஸ்கின் டாக்டர் என்றும், பழைமையான பொருள்களின் சேகரிப்பாளர், மோட்டிவேசன் ஸ்பீக்கர், தெலுங்கு சினிமா நடிகர் என பெருமையோடு அறிமுகப்படுத்திக்கொண்டு சுமார் 24 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிவந்திருக்கிறாராம். இந்த நிலையில், `புருனே சுல்தானின் கிரீடத்தை விற்பனை செய்ததில் 70,000 கோடி ரூபாய் தனக்கு வரவேண்டியிருக்கிறது. அதற்கு வரி செலுத்த பணம் கொடுத்தால் வட்டி இல்லாமல் நூறு கோடி ரூபாய் லோன் வாங்கித் தருகிறேன்’ என சேர்த்தலாவைச் சேர்ந்த ஷாஜி என்பவரிடம் 6.27 கோடி ரூபாய் வாங்கியிருக்கிறார் மோன்சன் மாவுங்கல். அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்காததால் ஷாஜி கொடுத்த புகாரின் பேரில் கேரள க்ரைம் பிராஞ்ச் போலீஸார் 2021-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 25-ம் தேதி மோன்சன் மாவுங்கல்லைக் கைதுசெய்தனர்.மோசடி வழக்கில் சிக்கிய மோன்சன் மாவுங்கல்
மோன்சன் மாவுங்கல்லைக் கைதுசெய்து விசாரித்தபோதுதான் அவரின் மோசடிகள் ஒவ்வொன்றாக வெளிவந்தன. கொச்சியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்ததுடன், அதில் ஒரு பகுதியை மியூசியமாக்கி, பழங்காலப் பொருள்கள் எனப் பலவற்றைக் காட்சிக்கு வைத்திருந்தார். அதில் பெரும்பாலான பொருள்கள் போலியானவை எனக் கண்டறியப்பட்டன. கேரள முன்னாள் டி.ஜி.பி லோக்நாத் பெகரா உள்ளிட்ட பல வி.ஐ.பி-க்கள் மோன்சன் மாவுங்கல்லின் மியூசியத்துக்குச் சென்றுவந்தது தெரியவந்தது. அது போன்று கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.சுதாகரனும் மோன்சன் மாவுங்கல்லிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டதாக அப்போது சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில், மோன்சன் மாவுங்கல்லின் மோசடி வழக்கில் முன்னாள் ஐ.ஜி லட்சுமணன், முன்னாள் டி.ஜி.பி சுரேந்திரன், கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். அனூப் என்பவர் கிரைம் பிராஞ்ச் போலீஸில் அளித்த புகாரில், மோன்சன் மாவுங்கல் தன்னிடம் 2018-ம் ஆண்டு மோசடியாகப் பெற்ற 25 லட்சம் ரூபாயில், 10 லட்சம் ரூபாயை கே.சுதாகரன் வாங்கிச் சென்றதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்தே காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.சுதாகரன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அவரை கொச்சியில் வைத்து விசாரணை நடத்த கிரைம் பிராஞ்ச் போலீஸார் முடிவுசெய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன்
இந்த வழக்கில் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் கைதுசெய்யப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து கே.சுதாகரன், "எனக்கும் மோன்சன் மாவுங்கல்லின் மோசடிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. என்னை எப்படிக் குற்றவாளியாக்கினார்கள் என்பது குறித்து விசாரித்துவருகிறேன்" என்றார்.
கே.சுதாகரன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டதற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். பினராயி விஜயன் அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க, `கே.சுதாகரனுக்கும் எனது வழக்குக்கும் சம்பந்தம் இல்லை' என மோன்சன் மாவுங்கல் தெரிவித்திருக்கிறார்.
http://dlvr.it/Sqf7zQ
Wednesday, 14 June 2023
Home »
» கேரளா: மாநிலத் தலைவர்மீது மோசடி வழக்கு... `பினராயி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை’ - சாடும் காங்கிரஸ்