தற்போதைய நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்பாக மக்களவைப் பொதுத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். அந்த வகையில், 2024-ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால், அதற்கு முன்பாகவே மக்களவைத் தேர்தல் வந்துவிடும் என்கிற பேச்சு அரசியல் வட்டாரத்தில் அடிபட்டுவருகிறது. நாடாளுமன்றம்
இந்த ஆண்டின் இறுதியில், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலுடன் சேர்த்து நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை நடத்த மத்திய அரசு திட்டமிடுவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024, 2019-ல் அடுத்தடுத்து இரண்டு முறை வெற்றிபெற்ற பா.ஜ.க., வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுவிட வேண்டும் என்று நினைக்கிறது. ஆனால், மூன்றாவது முறையாக பா.ஜ.க வெற்றிபெறுவது மிகவும் கடினம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். காரணம், நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம் போல கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் பார்க்கப்பட்டது. ஆனால், கர்நாடகாவில் பா.ஜ.க-வுக்கு படுதோல்வியே கிடைத்தது.மோடி
கர்நாடகா தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க அல்லாத மற்ற கட்சிகளுக்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. இந்தச் சூழலில்தான், இந்த ஆண்டின் இறுதியில் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்தே மக்களவைத் தேர்தலை நடத்திவிடலாம் என்று மத்திய அரசு யோசிக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
கடந்த வாரம், சேலத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலினும், ``நாடாளுமன்ற தேர்தலுக்கு ஓராண்டு இருக்கிறது என நினைக்க வேண்டாம். தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்ற தகவல்கள் வருகிறது” என தொண்டர்களை எச்சரிக்கும் விதமாக பேசினார்.
இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம்.
“அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படவிருக்கிறது. ராமர் கோவிலைத் திறந்துவிட்டு, அதன் பிறகு மக்களவைத் தேர்தலை நடத்தலாமா, அல்லது அதற்கு முன்பாகவே மக்களவைத் தேர்தலை நடத்தலாமா என்று பா.ஜ.க யோசித்துவருகிறது. ராமர் கோவிலை திறந்த பிறகு, மக்களவைத் தேர்தலை நடத்தினால், அந்த சாதனையைச் சொல்லி வாக்கு கேட்பதற்கு பா.ஜ.க-வுக்கு வசதியாக இருக்கும். ஆனால், கர்நாடகாவில் ஏற்பட்ட தோல்வி, பா.ஜ.க-வை மிகவும் யோசிக்க வைத்திருக்கிறது. தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தியும், பிரதமர் மோடியே வீதி வீதியாகச் சென்று பிரசாரம் செய்தும், கர்நாடகாவில் பா.ஜ.க தோற்றுப்போயிருக்கிறது. ப்ரியன்
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே தெலங்கானா உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அந்தத் தேர்தல்களிலும் கர்நாடகாவைப் போல தோல்வியடைந்தால், அது தங்களுக்கு மிகப்பெரிய பலவீனத்தை ஏற்படுத்திவிடும் என்று பா.ஜ.க தலைவர்கள் நினைக்கிறார்கள்.
களத்தைப் பொறுத்தளவில் பா.ஜ.க சற்று பலவீனமாகத்தான் இருக்கிறது. குறிப்பாக, தென் இந்தியாவில் பா.ஜ.க-வின் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் பலமாக இருக்கின்றன. தெலங்கானாவில் பி.ஆர்.எஸ் பலமாக இருக்கிறது. ஆந்திராவில் பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இருக்கிறார். எனவேதான், பா.ஜ.க-வும் தெலுங்கு தேசமும் கைகோத்துவிட்டார்கள்.`டார்கெட் 25' - அமித் ஷா விசிட்... முற்றும் வார்தைப்போர்; அதிமுக - பாஜக உறவில் விரிசலா?!
மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், டெல்லி போன்ற மாநிலங்களில் பா.ஜ.க-வுக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், உ.பி., குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க-வுக்கு சாதகமான சூழல் இருக்கிறது. இப்படியான சூழலில், ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு தோல்வி ஏற்படுமானால், அதன் பிறகு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது பா.ஜ.க-வுக்கு மிகவும் சவாலாக இருக்கும்.
தற்போது, பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டுமென்று எதிர்க் கட்சிகள் கூட்டணி சேரும் முயற்சியில் இருக்கின்றன. அவர்கள் ஒன்றுசேருவதற்குள் தேர்தலை நடத்திவிட வேண்டும் என்று பா.ஜ.க நினைப்பது போலத் தெரிகிறது. மாநிலங்களுக்கும் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்திவிட்டால், இரண்டிலும் வெற்றிபெற்றுவிடலாம் என்று பா.ஜ.க நினைக்கலாம்.மோடி
இத்தனை நாள்களாக கூட்டணிக் கட்சிகளை அமித் ஷா அலட்சியம் செய்துகொண்டிருந்தார். இப்போது அவர், மாநிலம் மாநிலமாகச் சென்று கூட்டணி பேசுகிறார். முன்பு பா.ஜ.க என்று பேசிக்கொண்டிருந்த அவர், தற்போது என்.டி.ஏ என்று பேசுகிறார். கூட்டணிக் கட்சிகளின் தேவை மிகவும் அவசியம் என்று அவர் கருதுகிறார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, மக்களவைத் தேர்தல் முன்கூட்டியே வர வாய்ப்பு இருக்கிறது என்றுதான் தெரிகிறது” என்கிறார் ப்ரியன்.
பத்தாண்டுகளில் ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் மேலோங்கியிருக்கும். எனவே, எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றிபெறுவது அவ்வளவு எளிதானது கிடையாது.
http://dlvr.it/Sqj1qS
Thursday, 15 June 2023
Home »
» நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே நடக்க வாய்ப்பு உண்டா... பாஜக திட்டம்தான் என்ன?!