உயர்கல்வி நிறுவனங்களில் பாடப் புத்தகங்களை தமிழாக்கம் செய்வது தொடர்பான பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நீலகிரி மாவட்டம், ஊட்டியிலுள்ள ராஜ் பவனில் இன்று நடைபெற்றது. தமிழகத்திலுள்ள அரசு, தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையேற்றுத் தொடங்கிவைத்தார். துணைவேந்தர்கள்
மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ``இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தது. இதனால் கணினியின் தேவை அதிகரித்தது. இதன் மூலம் கணினி கல்வி கற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்தியாவில் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் வளர்ந்ததால், பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குப் படையெடுத்தன.
காலமாற்றத்துக்கு ஏற்ப கல்வியிலும் மாற்றம் ஏற்பட்டுவருகிறது. நவீன காலத்தில் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால், அதற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும். தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது. தற்போது வளரும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை.
அடிப்படை கல்விக்கு மட்டுமின்றி உயர்கல்விக்கும் தமிழகத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பாலிடெக்னிக், ஐ.டி.ஐ மாணவர்கள், பொறியியல் பட்டதாரிகளைவிட கூடுதல் ஊதியம் பெறுகின்றனர். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு காலத்துக்கு ஏற்ற கல்வி கிடைக்காததால் அவர்கள் திறன் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மாநில மற்றும் தேசிய வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இதனால் கல்வியில் மாற்றம் அவசியம் செய்ய வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கையில், இளைஞர்களுக்கு அவர்களின் திறனுக்கு ஏற்ற கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோருக்கு ஆங்கில திறன் குறைபாடு இருக்கிறது. பள்ளிப்பாட அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் தாய்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டால், மாணவர்கள் பயன் பெறுவார்கள். பொறியியல், அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் மட்டுமே படிக்க வேண்டும் என்ற சிந்தனையை மாற்ற வேண்டும். இந்தப் பாடங்களை தமிழில் படிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சீனா, ஜப்பானில் தாய்மொழியில்தான் படிக்கிறார்கள். இந்தியாவில் இளைஞர்களிடையே ஆங்கில மோகம் அதிகரித்திருப்பதால் அதற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். மாணவர்கள், இளைஞர்கள் ஆங்கில மோகத்திலிருந்து விடுபட வேண்டும். தாய்மொழியில் கற்பதை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
சர்வதேச அளவில் நடைபெறும் புவிசார் அரசியல் மாற்றங்களால் பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன. ஆளுநர் ஆர்.என். ரவி
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் உள்கட்டமைப்பு மேம்பட்டிருக்கிறது. இதனால் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்திருக்கிறது. உலக அளவில் ஸ்டார்ட்- அப் நிறுவனங்களின் வளர்ச்சியில் 3-வது இடத்துக்கு இந்தியா வளர்ந்திருக்கிறது. இந்தியா முழுவதும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. திறன் வாய்ந்த மனித வளத்தை உருவாக்கினால் மட்டுமே அன்னிய முதலீடுகளைக் கவர முடியும். இந்தியாவிலுள்ள பிற மாநிலங்கள் தமிழகத்துடன் போட்டிப் போடும் அளவுக்கு முன்னேறியிருக்கின்றன. இதனால் தமிழ்நாட்டு கல்விமுறை காலத்துக்கு ஏற்ப மாற்றம் பெற்று இளைஞர்கள் திறன் மேம்பாடு அடையும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும். எனவே, தமிழகத்திலுள்ள மாநில அரசு, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் சிறந்த கல்வி மற்றும் திறன் வாய்ந்த இளைஞர்களை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்றார்.சித்தா பல்கலைக்கழக மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காதது ஏன்?!
http://dlvr.it/SqD21L
Tuesday, 6 June 2023
Home »
» "தமிழகத்தில் காலத்துக்கேற்ப கல்விமுறைகளை மாற்ற வேண்டும்!" - துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி