வேலூர் மாவட்டத்தின் சின்னராஜாகுப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பிரபுவின் மகள் விஷ்ணுபிரியா (16) சமீபத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 410 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இருப்பினும், குடிப்பழக்கமுள்ள தன்னுடைய தந்தையால் மன உளைச்சலுக்கு ஆளான விஷ்ணுபிரியா நேற்று முன்தினம், தன்னுடைய அப்பா குடிப்பதை நிறுத்த வேண்டும் எனக் கடிதம் எழுதிவைத்துவிட்டு, வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் பலரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.சிறுமி விஷ்ணுபிரியா
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், `தமிழிளம் தலைமுறையை முழுவதுமாகப் பலி கொடுக்கும் முன்பாக, தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்' என வலியுறுத்தியிருக்கிறார்.
இது குறித்து சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``வேலூரைச் சேர்ந்த பதினாறே வயதான விஷ்ணுபிரியா தனது தந்தையின் குடிப்பழக்கத்தால் சீரழியும் குடும்பத்தின் நிலை கண்டு, மனம் வெறுத்து தற்கொலை செய்துகொண்டிருக்கும் நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
மலிவு விலை மதுக்கடை என்ற பெயரில் தமிழ்க் குடும்பங்களைச் சிறுகச் சிறுகச் சீரழிக்கும் தமிழ்நாடு அரசின் மனச்சான்றற்ற கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று போராடிய தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தாமல் தொடர்ந்து ஏமாற்றிவருவது தமிழிளம் தலைமுறைக்குச் செய்கின்ற பச்சைத் துரோகம். பெண்களுக்கு இலவசப் பேருந்து, குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகை என்று பெண்களின் மேம்பாட்டுக்குப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாகக் கூறும் தி.மு.க அரசு, பல லட்சக்கணக்கான தமிழ்ப் பெண்களின் வாழ்க்கையை நாசப்படுத்தி, அவர்களின் கண்ணீருக்குக் காரணமான மதுக்கடைகளையும் தொடர்ந்து நடத்துவது ஏன்?சீமான்
விஷ்ணுபிரியா போன்று லட்சக்கணக்கான பெண் குழந்தைகளின் குடும்பங்களைச் சீரழிக்கும் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு, பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாக தி.மு.க அரசு பெருமைகொள்வது எவ்வகையில் அறமாகும்... 2018-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்காலத்தின்போது சங்கரன்கோயிலைச் சேர்ந்த 17 வயதான தினேஷ் தந்தையின் குடிப்பழக்கத்தால் தினம் தினம் சீரழியும் குடும்பத்தின் நிலை கண்டு மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தற்கொலை செய்துகொண்டார்.
ஆனால் சிறிதும் இரக்கமற்ற அ.தி.மு.க அரசு மரணத்தை அன்றைக்கு அலட்சியப்படுத்தி மதுக்கடைகளை மூட மறுத்தது. அதன் பிறகு 2021-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் மதுவினால் தமிழ்க் குடும்பங்கள் சீரழியும் கோரக் காட்சிகள் மட்டும் இன்றுவரை நின்றபாடில்லை. இந்த ஆண்டு, ஜனவரி மாதம் ஈரோடு கிழக்குத் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் கார்த்தி, கௌதம் ஆகிய இரு சகோதரர்களும், குடிபோதையிலிருந்த தன் சொந்த தாய்மாமனாலேயே குத்திக் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டனர்.ஸ்டாலின்
மதுக்கடைகளை மூட மறுத்து தினேஷ், கார்த்தி, கௌதம் தற்போது விஷ்ணுபிரியா போன்று இன்னும் எத்தனை இளம்பிள்ளைகளின் மரணத்துக்கு திராவிட அரசுகள் காரணமாகப்போகின்றன... கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள்களை முற்றிலுமாக ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு, கொடிய போதைப்பொருளான மதுவை அரசே விற்பது எவ்வகையில் நியாயமாகும்... கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் உறவினர்களை ஓடோடி நேரில் சென்று பார்த்து, 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கிய தி.மு.க அரசு, தான் விற்கும் மதுவால் நிகழ்ந்திருக்கும் குழந்தைகளின் மரணங்கள் குறித்து வாய் திறவாமல் அமைதி காப்பது ஏன்?
மதுபோதையால் நடைபெறும் கொலைகளாலும், சாலை விபத்துகளாலும் நாள்தோறும் பறிபோகும் உயிர்களுக்கு தி.மு.க அரசு என்ன பதில் கூறப்போகிறது... அல்லது இதுவும் இந்தியாவே வியக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகளா என்பதை தி.மு.க அரசுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். ஆகவே, தி.மு.க அரசு விஷ்ணுபிரியா போன்று இனியும் தமிழிளம் தலைமுறைப் பிள்ளைகளை பலிகொள்வதைக் கைவிட்டு, உடனடியாக அனைத்து மதுக்கடைகளையும் நிரந்தரமாக மூடி, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.டாஸ்மாக்
விஷ்ணுபிரியாவை இழந்து தவிக்கும் அவரின் தாய், தந்தையருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, இந்தப் பெருந்துயரத்தில் பங்கெடுப்பதோடு, விஷ்ணுபிரியாவின் தந்தை இனியேனும் குடிப்பழக்கத்தைக் கைவிட்டு, தங்களுடைய மகளின் இறுதி ஆசையை நிறைவேற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறப்பட்டிருக்கிறது.‘‘இனிமேலாவது குடிக்காத அப்பா...‘‘ - விபரீத முடிவெடுத்த சிறுமி; உருக்குலைந்த குடும்பம்!
http://dlvr.it/Sq8xYk
Monday, 5 June 2023
Home »
» டாஸ்மாக்:``இன்னும் எத்தனை மரணங்களுக்கு திராவிட அரசுகள் காரணமாகப்போகின்றன?'' - சீமான் கேள்வி