காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு முன்னாள் எம்.பி-யுமான ராகுல் காந்தி, அமெரிக்காவுக்கு ஆறு நாள்கள் பயணமாகச் சென்றிருக்கிறார். மே 30-ம் தேதி சான் ஃபிரான்சிஸ்கோவுக்குச் சென்றடைந்த அவர், கலிஃபோர்னியாவின் சான்டா கிளாராவில் இந்திய புலம்பெயர்ந்தோர் கூட்டத்தில் உரையாற்றினார்.ராகுல் காந்தி
தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவரும் அவர், நேற்று வாஷிங்டன் டி.சி-யில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல், ``தற்போது இந்தியாவில் எதிர்க்கட்சிகள் நன்றாக ஒன்றுபட்டிருக்கின்றன. அது மேலும் மேலும் ஒன்றிணைந்து வருகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். அங்கே நிறைய நல்ல வேலைகள் நடக்கின்றன என்று நினைக்கிறேன். எதிர்க்கட்சிகளிடையே போட்டியிடும் இடங்களும் இருப்பதால் இது ஒரு சிக்கலான விவாதம். எனவே, கொஞ்சம் கொடுக்கல் வாங்கல் எல்லாம் இந்த விஷயத்தில் தேவை. ஆனால், அது நடக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
தகுதிநீக்கம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ராகுல், ``நான் ஒரு கேள்வியைக் கேட்டேன்... 1947-க்குப் பிறகு, வரலாற்றில், அவதூறு வழக்குக்காக, இந்தியாவில் அதிக தண்டனை பெற்ற முதல் நபர் நான்தான். முதல் குற்றத்துக்கு அதுவும் அதிகபட்ச தண்டனை யாருக்கும் வழங்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் அதானி குறித்து நான் பேசிய பிறகு தகுதிநீக்கம் நடக்கிறது. இதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை உங்களாலே கணிக்க முடியும்” என்றார்.
உக்ரைன் ரஷ்ய விவகாரத்தை காங்கிரஸ் எப்படிக் கையாண்டிருக்கும் என்னும் கேள்விக்கு பதிலளித்த ராகுல், ``பா.ஜ.க இந்த விவகாரத்தில் செயல்பட்டதைப்போல்தான் நாங்களும் செயல்பட்டிருப்போம். காரணம், இந்தியா ரஷ்யாவுடன் அப்படியான ஓர் உறவைக்கொண்டிருக்கிறது, அதை மறுக்க முடியாது. அதனால் இந்த விவகாரத்தில் எங்கள் கொள்கையும் அப்படித்தான் இருக்கும்” என்றார்.
கேரளாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குடன் (ஐயுஎம்எல்) காங்கிரஸ் கூட்டணி குறித்து ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ``முஸ்லிம் லீக் முற்றிலும் மதச்சார்பற்ற கட்சி” என்றார்.
சீனா விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ராகுல் காந்தி, ``நமது நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்திருக்கிறது, அது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. அவர்கள் 1,500 சதுர கிலோமீட்டர் நிலத்தை ஆக்கிரமித்திருக்கின்றனர், அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால், பிரதமர் மோடி வேறுவிதமாக நம்புகிறார்” என்றார்.
தொடர்ந்து பா.ஜ.க-வின் செயல்பாடுகள் குறித்துப் பேசுகையில், ``பா.ஜ.க சமூகத்தில் வெறுப்பை உருவாக்குகிறது. அவை சமூகத்தைத் துருவப்படுத்துகின்றன. அது அனைவரையும் உள்ளடக்கியவை அல்ல, அனைவரையும் அரவணைப்பதில்லை. அவர்கள் சமூகத்தைப் பிளவுபடுத்துகிறார்கள், இது இந்தியாவை சேதப்படுத்துகிறது” என்றார்.
http://dlvr.it/Sq1cST
Friday, 2 June 2023
Home »
» Rahul Gandhi: `இந்த விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கைதான் எங்களுக்கும்!’ - ராகுல் காந்தி சொல்வதென்ன?