விழுப்புரம் மாவட்டம், கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ். தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றிவந்திருக்கிறார். இவர், நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது, "என்னுடைய அப்பா மோகன், எங்கள் ஊராட்சி செயலாளர் லட்சுமணனிடம் `ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் வீடு வேண்டுமென்று கேட்டதற்குச் சரியான தகவல் வழங்கவில்லை. அதனால், நான் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலைக் கேட்டிருந்தேன். அதில், "திரு.மோகன் த/பெ பூங்கான் என்பவர் பெயரில் 2017-2018-ம் ஆண்டில் `ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் வீடு ( TN2254633 ) வழங்கப்பட்டது" என்று தகவலைக் கொடுத்தார்கள். இந்தத் தகவலை நான் பார்த்தவுடன் பெரும் அதிர்ச்சியடைந்தேன். புகார் அளிக்க வந்த சுபாஷ்
நாங்கள் கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் பலமுறை நேரில் சென்று கேட்டோம். அப்போது, அங்கு பணிபுரிந்த மேனேஜர், முன்னாள் ஊராட்சி செயலாளர் லட்சுமணன் ஆகியோர், "நீங்கள் காலி இடத்தில் கடைக்கால் எடுங்கள். நாங்கள் உங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்து தருகிறோம்" என்று கூறினார்கள். இதை நம்பி நாங்கள் எங்களுடைய நகைகளை வைத்து கடைக்கால் போட்ட பிறகும் எங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. எனவே, ஐயா அவர்கள் இவர்கள்மீது நடவடிக்கை எடுக்குமாறும், எங்களுக்கு வீடு கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தருமாறும் மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் சுபாஷிடம் பேசியபோது, "அந்த வீட்டைக் கட்டுவதற்கான ஆணையை என் அப்பாவின் பெயரையே கொண்ட, அவ்வூரில் அரசு ஆவணங்களே இல்லாத ஒரு நபருக்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு கொடுத்திருக்கிறார். ஆனால், என் தாத்தா பெயர் வேறு, அந்த நபரின் அப்பா பெயர் வேறு. இது குறித்து புகார் தெரிவித்தும், பல வருடங்களாக உரிய நடவடிக்கை இல்லாததால் இன்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துப் புகாரளித்தோம். மாவட்ட ஆட்சியர் அவர்களும், துறை சார்ந்த அதிகாரிக்கு அனுப்பி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கிறார்" என்றார்.மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த சுபாஷ்
இந்தப் புகார் குறித்து கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமாரிடம் விளக்கம் கேட்டோம். "இது குறித்த புகார் எங்களுக்கு வந்தது. வங்கிக் கணக்கு எண் மட்டும் மாறி, வேறொருவர் பெயருக்கு தொகை சென்றிருக்கிறது. உடனே சம்பந்தப்பட்ட கிராமச் செயலாளரை அழைத்துப் பேசினோம். 'உங்கள்மீது புகார் வந்திருக்கிறது. உடனே சம்பந்தப்பட்ட நபருக்கு உரிய பணத்தைச் சேருங்கள். இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்திருக்கிறோம். அவரும், உடனே பணத்தைத் தந்துவிடுவதாகக் கூறியிருக்கிறார். எனவே, அவரிடமிருந்து புகார்தாருக்கு உரிய பணத்தைச் சேர்த்துவிட்டு, வீடு கட்டும் பணியைத் தொடங்க ஏற்பாடு செய்திடலாம்" என்றார்.
http://dlvr.it/SqH9lk
Wednesday, 7 June 2023
Home »
» RTI மூலம் தெரியவந்த அதிர்ச்சித் தகவல்; விழுப்புரம் ஆட்சியரை நாடிய சாமானியர்; நடந்தது என்ன?!