புதுச்சேரி மாநில அ.தி.மு.க துணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான வையாபுரி மணிகண்டன், டெல்லி சி.பி.ஐ இயக்குநருக்கு மனு ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், ``புதுச்சேரி மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துகள், கோயில் சொத்துகள் மற்றும் ஆதரவற்ற ஏழை மக்களின் சொத்துகள் அனைத்தையும் போலி பத்திரங்களைத் தயாரித்து கொள்ளையடித்து வருகிறார்கள். புதுச்சேரியில் பிரசித்திபெற்ற காமாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து தனியார் நிறுவனத்துக்கு விற்று, பின்னர் அதைப் பலருக்கும் வீட்டுமனைப் பட்டாக்களாக மாற்றி பத்திரப்பதிவு செய்திருக்கின்றனர். இதில் சார் பதிவாளர் உட்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இதில் முக்கிய குற்றவாளிகளான அப்போதைய பதிவாளர், தாசில்தார் உட்பட பலர் தலைமறைவாகியிருக்கின்றனர். நிலத்தை விற்றவர்களை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.புதுச்சேரி அ.தி.மு.க துணைச் செயலாளர் வையாபுரி மணிகண்டன்
இதன் பின்னணியில் ஆளுங்கட்சிக் கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவருக்குத் தொடர்பு இருக்கிறது. அவர் சட்டசபையில் தன்மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தருவதாக வாக்குமூலம் அளித்தார். தற்போது அவரின் குற்றம் நிரூபணமாகியிருக்கிறது. அதேபோல வில்லியனுரில் மணக்குள விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை பொதுப் பாதையாகக் காட்டி, சுமார் 500-க்கும் மேற்பட்ட மனைகளை ரூ.100 கோடிக்கு மேல் விற்றிருக்கின்றனர். இதிலும் ஆளுங்கட்சியில் முக்கியப் பதவியில் இருப்பவர்களுக்குத் தொடர்பிருக்கிறது. தற்போது மணக்குள விநாயகர் கோயில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுத்தாலும், கோயில் நிலத்தை பொதுப்பாதையாக ஏமாற்றி விற்றிருக்கின்றனர். மனைகளை வாங்கிய 500-க்கும் மேற்பட்டவர்கள் பாதையின்றி கடும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர்.
எனவே, கோயில் நிலத்தைப் பொதுப் பாதையாகக் காண்பித்து மக்களை ஏமாற்றி, மோசடி செய்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள்மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வில்லியனூர், கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயப் பெண்மணி தவமணியின் நிலத்தை, புதுச்சேரி உப்பளம் தொகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் அரசியல்வாதியும், அவரின் குடும்பத்தினரும் அபகரிப்பு செய்திருக்கின்றனர். இந்த நிலத்தை மீட்டுத்தரும்படி புதுச்சேரி சட்டசபை வளாகத்தில், முதலமைச்சர் முன்பு தவமணியின் குடும்பத்தினர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைசெய்ய முயன்றனர். இந்த நில அபகரிப்பு தொடர்பான குற்றவாளிகள்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள்மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி: முதல்வரின் பேனர்கள்; பூதக்கண்ணாடியுடன் புகார்... ஆட்சியருக்கு அதிர்ச்சி அளித்த அதிமுக
இந்த நில அபகரிப்பு மோசடிகளில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்குத் தொடர்பு இருப்பதால், நில அளவைத்துறையில் இரண்டு ஆண்டுகள் பட்டா பெயர் மாற்றம் செய்த பதிவுகள் கணினியிலிருந்து மாயமாகியிருக்கின்றன. புதுச்சேரி அரசியல்வாதிகளின் அழுத்தத்துக்கு அடிபணியாமல், ஆட்சியாளர்களின் மோசடிகளுக்குத் துணை போகாமல் வழக்கு விசாரணை நடைபெற வேண்டும் என்றால், சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும். சி.பி.ஐ விசாரணை நடத்தினால்தான் உண்மையான தகவல்கள் முழுமையாக வெளிவரும். புதுச்சேரியில் நிலவும் இந்த நில அபகரிப்பு மோசடிப் புகார்கள் தொடர்பாக சி.பி.ஐ உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
http://dlvr.it/SrldvH
Thursday, 6 July 2023
Home »
» புதுச்சேரி: ``கோயில் நிலத்தை வளைத்து ரூ.100 கோடிக்கு விற்பனை!” – சி.பி.ஐ தலைமைக்கு அதிமுக புகார்