மகாராஷ்டிரா மாநிலம் கொங்கன் பகுதியிலுள்ள ராய்கட் மாவாட்டத்தில் இருக்கும் இர்ஷல்வாடி என்ற மலைக் கிராமத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். மீட்புப் படையினர் இரண்டு நாள்களாகத் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால் மழையும் விடாது பெய்து வருவதால், மீட்புப் பணியை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. இதுவரை 122 பேர் உயிரோடு இருக்கின்றனர். 22 பேரின் உடல்கள் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டிருக்கின்றன. மும்பையில் கனமழை
மேலும் 86 பேர் இன்னும் இடிபாடுகளில் சிக்கியிருக்கின்றனர். அமைச்சர்களும் அதிகாரிகளும் மீட்புப் பணிகளை நேரில் கண்காணித்து வருகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்ட கிராமத்துக்கு அருகிலுள்ள நாடல் என்ற கிராமத்தில் வசிக்கும் ஹுரு பஸ்மா என்ற பெண் தனது உறவினர்களைத் தேடி இர்ஷல்வாடி கிராமத்தில் காத்துக்கிடக்கிறார். இது குறித்து அவர், ``3 நாள்கள் ஆன பிறகும் எனது மைத்துனர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஏழு பேர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை'' என்று கவலையோடு தெரிவித்தார். மும்பை அருகிலுள்ள பத்லாப்பூரில் வசிக்கும் காந்தா என்ற பெண் இது குறித்து, ``நிலச்சரிவு ஏற்பட்ட கிராமத்தில் வசித்துவந்த என்னுடைய உறவினர்கள் 10 பேரைக் காணவில்லை. அவர்களில் மூன்று பேர் குழந்தைகள். அவர்களைப் பற்றிய தகவல் ஏதாவது கிடைக்குமா என்று காத்திருக்கிறேன்'' எனத் தெரிவித்தார்.மீட்கப்பட்ட ஜெயபிரகாஷ்
அனைத்து உடல்களும் மீட்கும்வரை பணிகள் தொடரும் என்று தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்திருக்கின்றனர். உள்ளூர் மக்கள் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துவருகின்றனர். உயிரோடு இருப்பவர்கள் தங்குவதற்கு கண்டெய்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தற்காலிகமாக பள்ளி ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட இர்ஷல்வாடி இப்போது சுற்றுலா மையமாக மாறியிருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட மறுநாளிலிருந்து இந்தக் கிராமத்துக்கு ஏராளமானோர் வந்துகொண்டிருக்கின்றனர். தொண்டு நிறுவனத்தினர், தன்னார்வலர்கள், மீட்புக் குழுவினர் என 5,000 பேர் வந்திருக்கின்றனர். ஏராளமானோர் நிவாரணப் பொருள்களைக் கொண்டுவருகின்றனர். இது தவிர மீட்புப் பணிகளைப் பார்வையிட 15,000 பேர் இந்தக் கிராமத்தில் குவிந்திருக்கின்றனர். இதனால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.
பேரிழப்பைக் காண சுற்றுலா வந்திருப்பதாக அதிகாரிகள் விமர்சனம் செய்திருக்கின்றனர். மேற்கொண்டு இது போன்று தேவையில்லாமல் கிராமத்துக்கு வருபவர்களைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு போலீஸார் பணியில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரையும் முழுமையாக சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர். இதனால் வெளியிலிருந்து வருபவர்கள் நேரடியாக வராமல் வேறு வழியாக கிராமத்துக்கு வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. மும்பையில் இரண்டு நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதோடு புறநகர் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருக்கிறது. சயான், அந்தேரி, கொலாபா, குர்லா, செம்பூர் உட்பட முக்கியமான இடங்களில் சாலையில் தண்ணீர் இடுப்பளவுக்குத் தேங்கியிருக்கிறது. இதனால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே ஒரு குழந்தை உட்பட இரண்டு பேர் நீரில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்ட நிலையில், அம்பர்நாத்தில் ஜெயபிரகாஷ் என்பவர் மழை வெள்ளத்தில் சாக்கடையில் அடித்துச் செல்லப்பட்டார். ஆனால், அவரை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். வரும் 23-ம் தேதி வரை மும்பையில் கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. அதோடு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெற்றோரை இழந்த குழந்தைகள் அனைவரையும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தத்து எடுத்துக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக சிவசேனா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``நிலச்சரிவில் பெற்றோரை இழந்தை குழந்தைகளின் படிப்பு மற்றும் இதர செலவுகளை முதல்வர் ஷிண்டேயின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே நடத்தும் தொண்டு நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் குறிப்பிட்ட தொகை வைப்பு நிதியாக வைக்கப்படும்'' என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.மனைவியுடன் வளர்ப்பு நாய்களுக்கும் சேர்த்து ரூ.50000 பராமரிப்பு தொகை; கணவருக்கு மும்பை கோர்ட் உத்தரவு
http://dlvr.it/SsbTC3
Sunday, 23 July 2023
Home »
» மகாராஷ்டிரா நிலச்சரிவு; 22 பேர் பலி... 3-வது நாளாகத் தொடரும் மீட்புப் பணிகள்!