எதிர்க்கட்சிகளின் பெங்களூரு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதனடிப்படையில், நாமக்கல் மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. பேட்டியளிக்கும் கே.பி.ராமலிங்கம்
அப்போது பேசிய அவர், "மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்துவரும் நிலையில், கடைமடைப் பகுதி வரை விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைகளுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படும். இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். கர்நாடக மாநிலத்தில் மேக்கேதாட்டூவின் குறுக்கே அணை கட்டுவது, நிலுவையிலுள்ள காவிரி நீரை வழங்க மறுப்பது போன்ற சூழ்நிலையில், அங்கு நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கலந்துகொண்டது முறையான செயல் அல்ல.
காவிரியில் திறந்துவிட வேண்டிய நீர் மற்றும் மேக்கேதாட்டூ அணை விவகாரம் குறித்து அந்த மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் தமிழக முதலமைச்சர் தன்னுடைய நிலையை தெளிவுபடுத்த வேண்டும். ஆனால், அவர் அதைப் பற்றி கோரிக்கை வைக்க மாட்டேன் எனப் பேட்டியில் முன்கூட்டியே கூறியது, தமிழக மக்களை ஏமாற்றும் செயலாக இருக்கிறது. ஆனால், தமிழகத்திலிருந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் கர்நாடகா செல்லும்போதெல்லாம் தமிழகத்தின் கோரிக்கை குறித்து தெளிவுபடுத்தி வந்தனர். கரூர்: கணவரோடு தொடர் சண்டை; இரண்டு குழந்தைகளோடு இளம்பெண் எடுத்த `துயர' முடிவு!
ஆனால், தாங்கள் செய்கின்ற தவறுகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக இது போன்ற கூட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்திவருகின்றன. மேக்கேதாட்டூவில் அணை கட்ட முடியாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர், கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோதே நாடாளுமன்றத்தில் இது குறித்து தெளிவுபடுத்தியிருக்கிறார். அணை கட்டும் விவகாரத்தில் தமிழக பா.ஜ.க-வும் அதை எதிர்த்தது. வருகின்ற 23-ம் தேதி தமிழகம் முழுவதும் ஊழல் தி.மு.க அரசு மற்றும் ஊழல் தி.மு.க அமைச்சர்களைக் கண்டித்தும், ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டியும், ஊராட்சிகள், நகராட்சிகள் வார்டுகள் வாரியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. தமிழக வரலாற்றில் வார்டுகள் வாரியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
அமலாக்கத்துறை மற்றும் ஆளுநர் ஆகியோரின் செயல்பாடுகள் மறைமுகமாக தி.மு.க-வுக்குப் பிரசாரமாக அமையும் என தமிழக முதல்வர் கூறியிருப்பதை பொதுமக்கள் உட்பட யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அமைச்சர்கள்மீது தவறு இருந்து சிறைச்சாலை வரை சென்று அவர்கள் அடைக்கப்பட்ட நிலையிலும் அவர்களை அமைச்சராக நீடிக்கச் செய்வது அரசியல் மாண்பு இல்லை. பேட்டியளிக்கும் கே.பி.ராமலிங்கம்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளிநாடு சென்று வந்தது, அமலாக்கத்துறையின் தொடர் சோதனைகள் போன்றவற்றின் தொடர்ச்சியாக பல ஊழல்கள் வெளிவரும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. செந்தில் பாலாஜி போன்ற ஊழல்வாதிகளைக்கொண்ட தி.மு.க-வினர் ஊழல் குறித்துப் பேச தகுதியில்லை. அ.தி.மு.க உள்ளிட்ட 30 கட்சிகளோடு பா.ஜ.க கூட்டணி பலமாக இருக்கிறது. நாங்கள் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி என்பதை அறிவித்து வருகிறோம். ஆனால், எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் பிரதமர் வேட்பாளர் யார் என்றுகூட கூற முடியாத நிலையில் இருக்கின்றனர்.
தி.மு.க மட்டுமல்லாது, அ.தி.மு.க அமைச்சர்கள் மீதும் உள்ள வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது. எந்த அரசியல் ஆதாயத்துக்காகவும், எந்த வழக்குகளையும் பா.ஜ.க இதுவரை வாபஸ் பெறவில்லை. பா.ஜ.க மத்திய அமைச்சர்கள்மீது எந்தவிதமான குற்ற முகாந்திரமும் இல்லை என வழக்குகளிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், அரசியல் ஆதாயங்களுக்காக அவர்கள்மீது பொய்யான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன" என்றார்.
தொடர்ந்து சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.ராமலிங்கம், ``தமிழகத்துக்குப் பாசனத்துக்காக மூன்றேகால் லட்சம் ஏக்கருக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. மேட்டூர் அணையில் 73 அடியில், 46 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே இருக்கிறது. குறுவை முழுமையாக விளைச்சலுக்கு வந்து சேருகின்ற வரை பாசனத்துக்கு 331 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். இப்போது தமிழக அரசு 10,000 கனஅடி நீரை பாசனத்துக்கு விடுவிக்கிறது. பாசனத்துக்கு இன்னும் 25 நாள்களுக்கு மட்டுமே தண்ணீர் விடுவிக்க முடியும். குடிநீர்த் தேவை இன்னும் நூறு நாள்களுக்கு மட்டுமே பூர்த்தியாகும். எந்த அளவுக்கு அவசர சூழ்நிலை என்பதை தமிழக முதலமைச்சர் உணரவில்லை” என்றார்.
மேலும் தொடர்ந்தவர், ``தமிழக முதல்வர் நியாயமாகப் பதவி விலக வேண்டும். சட்டத்துக்கு எதிராகச் செயல்பட மாட்டோம் என்று ஆட்சிப் பொறுப்பேற்ற தமிழக முதல்வர், குற்றவாளியைப் பாதுகாக்கலாமா... அவருக்கு ஆதரவாகச் செயல்படலாமா... குற்றவாளி விசாரணைக் கைதி, சிறையில் அடைக்கப்பட்ட பிறகும், அமைச்சராக வைத்திருக்கிறார் என்றால் இந்தக் குற்றத்துக்கு முதல்வர் துணை போகிறார் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. குற்றவாளியைப் பாதுகாக்கின்ற முதலமைச்சர், குற்றத்தின் பின்னணியில் தமிழக முதல்வரும் இருக்கிறாரா என்று சந்தேகம் எழுந்திருக்கிறது. செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடந்தபோது தமிழக முதல்வர் எவ்வாறு துடித்தார்... ஆனால், பொன்முடி வீட்டில் சோதனை நடக்கும்போது அவ்வாறு துடிக்கவில்லை. இந்த வழக்கு பொன்முடியுடன் செல்கிறது. ஆனால், செந்தில் பாலாஜியின் வழக்கு தமிழக முதல்வர் வீடு வரை செல்கிறது. செந்தில் பாலாஜி வழக்கின் ஆணிவேர் முதல்வர் குடும்பத்துக்குள் இருக்கிறது” என்றார்.
http://dlvr.it/SsPJjD
Wednesday, 19 July 2023
Home »
» ``செந்தில் பாலாஜிக்காக துடித்த முதல்வர், பொன்முடிக்காக துடிக்கவில்லையே... ஏன்?’ - கே.பி.ராமலிங்கம்