`தமிழக அரசுக்கு ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டுவர உரிமையில்லை’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு வாதம் வைத்திருக்கிறது. தமிழக அரசு இன்னும் தன் வாதங்களை முன்வைக்காத நிலையில், இது குறித்து விளக்கமளிக்க சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். இது குறித்துப் பேசிய அவர், “கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஆன்லைன் விளையாட்டுக்கு எதிராகச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதற்கு தடைவிதித்த நீதிமன்றம் சில வழிமுறைகளைப் பின்பற்றச் சொன்னது. அதனடிப்படையில்தான், ஆன்லைன் தடைச் சட்டத்தை தமிழக அரசு இயற்றியது.
இந்த நிலையில், ’இணைய வழி சூதாட்ட தடைச் சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை’ என்னும் வாதத்தை மத்திய அரசு வைத்திருக்கிறது. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் சார்பாக ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விதிகள்தான் கொண்டுவரப்பட்டதே தவிர, சட்டம் இயற்றப்படவில்லை.சட்டத்துறை அமைச்சர் ரகுபதி - ஆன்லைன் சூதாட்டம்
அந்த விதிகளும் இணைய வழி சூதாட்டத்துக்குப் பாதுகாப்பான விதிகளாக இருக்கிறது, எதிராக இல்லை. குறிப்பாக, வருவாய் ஈட்டுகின்ற நோக்கத்தில் அந்த விதிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அதனால், மாநிலப் பட்டியலில் இருக்கும் பிரிவுகளில் தடைச் சட்டம் தமிழக அரசால் இயற்றப்பட்டது. விளையாட்டுகள் முழுமையாகத் தடை செய்யப்படவில்லை. அதிர்ஷ்ட விளையாட்டு, திறனை வெளிப்படுத்தும் விளையாட்டு என்று வித்தியாசப்படுத்தி, ஆன்லைன் சூதாட்டங்கள் மட்டுமே தடை செய்யப்பட்டிருக்கின்றன.
நேரில் (ஆப்லைனில்) விளையாடும்போது யாருடன் மற்றும் எவ்வாறு விளையாடுகிறோம் என்பது தெரிந்து விளையாட வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஆன்லைனில் (இணைய வழியில்) விளையாடும்போது, அந்த விளையாட்டை உருவாக்கியவர் பதிவு செய்யும் செயல்திட்டத்தின் (புரோகிராம்) அடிப்படையில் விளையாடப்படுவதால், ஏமாற்றும் மற்றும் பணத்தைச் சுரண்டும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதன் அடிப்படையிலேயே ஆன்லைன் விளையாட்டுகளைத் தடைசெய்ய அவசரச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த வித்தியாசங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். பா.ஜ.க -ஆன்லைன் சூதாட்டம்
42 தற்கொலைகள் நடந்திருப்பது பற்றி தெளிவாக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, விளையாட்டு நிறுவனத்திடமும் கருத்து கேட்டிருப்பதையும் குறிப்பிட்டிருக்கிறோம். அனைத்தும் முறைப்படிதான் இயற்றப்பட்டது.
மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் ஒழுங்குமுறை விதிகளில் பாதுகாப்பில்லை. எனவே, தனியாகச் சட்டம் இயற்றியிருக்கிறோம். அவை வருமான நோக்கத்துக்காக மட்டுமே இயற்றப்பட்டிருக்கிறது” என்றார்.
மேலும், சமீபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு வரி அதிகரிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே என்னும் கேள்விக்கு, “ஆன்லைன் விளையாட்டுகளே வேண்டாம் என்னும் நிலைப்பாட்டில் இருந்துகொண்டு, ஏன் ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டது என கேட்பது நியாயமில்லை. அப்படியான விளையாட்டுகள் வாயிலாக கிடைக்கும் பாவப்பட்ட பணம் தேவையில்லை” என்றார். நடைமுறைக்கு வந்த ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் - இந்த முறை கைக்கொடுகுமா?!
அன்று நாடாளுமன்றத்தில், மாநில அரசுகளுக்கு சட்டமியற்ற உரிமை இருக்கிறது என அமைச்சர் சொல்லியிருக்கிறார். தற்போது உரிமையில்லை என மாற்றிப் பேசுகிறார்களே என்னும் கேள்விக்கு, ``மாறுப்பட்ட கருத்துகளின் ஒட்டுமொத்த வடிவம் தான் பா.ஜ.க. அதையெல்லாம் முன்வைத்து வழக்குகளை எதிர்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.
http://dlvr.it/SsVvqM
Friday, 21 July 2023
Home »
» ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராகச் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உரிமையில்லையா?- அமைச்சர் விளக்கம் என்ன?