தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்மீது நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று அனுப்பிய கோப்பு ஆளுநர் மாளிகையில் அனுமதியளிக்காமல் வைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து, அமைச்சர் ரகுபதி, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகைக்குக் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்துக்கு, ஆளுநர் தனது பதிலை பத்திரிகைச் செய்தி மூலமாக தெரிவித்திருக்கிறார்.
ஆளுநரின் இந்தப் பத்திரிகைச் செய்திக்குறிப்பு குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசும்போது, "நான் அனுப்பிய கடிதத்துக்கு பதில் கடிதம் ஆளுநர் மாளிகையிலிருந்து வரவில்லை. பத்திரிகைச் செய்திதான் வந்திருக்கிறது.
அதில், லீகல் இன்வர்ஸ்டிகேசன் என்று ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது அ.தி.மு.க-வின் இரண்டு முன்னாள் அமைச்சர்களை ஆளுநர் காப்பாற்ற நினைக்கிறார்.
12.9.22 அன்று முன்னாள் அமைச்சர்கள் குறித்த புகாரை நாங்கள் அனுப்பியிருந்தோம். ஆனால், ஆளுநர் அதற்கான முறையான பதிலைத் தராமல் மழுப்பலாக பதில் கூறியிருக்கிறார். ஆளுநர் மாளிகையிலிருந்தே உண்மைக்குப் புறம்பான தகவல் வெளிவருகிறது. தி.மு.க-வுக்கு அவர்தான் எதிர்க்கட்சிபோல் செயல்பட்டு வருகிறார்.
குறிப்பாக ஆளுநர் இரட்டை வேடம் போடுகிறார். ஒருபுறம் நடவடிக்கை எடுக்கத் தடையாகவும், தி.மு.க-மீது நடவடிக்கை எடுக்கும்படியும் செயல்பட்டு தி.மு.க-வை அஞ்சவைக்கலாம் என்று அவர் எண்ணுகிறார். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எதற்கும் அஞ்ச மாட்டார்.
ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நாம் மத்திய அரசிடம்தான் தெரிவிக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு செவிடன் காதில் ஊதிய சங்குபோல் இந்த விவகாரத்தில் இருக்கிறது. ஆளுநர் மாளிகையிலிருந்து வெளிவந்திருக்கும் பத்திரிகைச் செய்தி உண்மைக்குப் புறம்பானது.
இனியாவது ஆளுநர் மாளிகையிலிருந்து உண்மைக்குப் புறம்பான செய்தி வருகிறது என்ற கூற்றை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். கே.சி.வீரமணி வழக்கைப் பொறுத்தவரை, 12.09.2022 விசாரணையின் முழு கோப்பையும் ஆளுநர் மாளிகைக்கு கடிதம் அனுப்பியிருக்கிறோம். அவருடைய வழக்கு தொடர்பாக விசாரணை செய்வதற்கு அனுமதி வேண்டும் என்று... ஆனால், `கோப்பு இதுவரை வரவில்லை' என்று ஆளுநர் பொய்யான தகவலை பத்திரிகைச் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்
எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கைப் பொறுத்தவரை, 12.5.2023 அன்று அரசிடமிருந்து கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டு ஆளுநர் மாளிகையும் கோப்பில் கையெழுத்திட்டு பெற்றிருக்கிறது. அதற்கு அரசிடம் ஆதாரம் இருக்கிறது.
ஆளுநரிடமிருந்து வந்திருப்பது பத்திரிகைச் செய்திதான். தமிழக அரசுக்கு முறைப்படி ஆளுநர் மாளிகையிலிருந்து எந்த விதமான பதில் கோப்பும் இதுவரை சட்டத்துறைக்கு வரவில்லை.
தெலங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். நாங்களும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டுவருகிறோம், முதல்வரின் பொறுமைக்கும் எல்லை உண்டு. இனிமேலும் முதல்வர் பொறுமையாக இருக்க மாட்டார்" என்றார்.
http://dlvr.it/SrpZBL
Friday, 7 July 2023
Home »
» ``முதல்வரின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு..!" - ஆளுநர் விவகாரத்தில் அமைச்சர் ரகுபதி