முதலாம் உலகப்போரின் அடுத்த மற்றொரு திருப்புமுனை என்று 1915 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற கலிப்பொலி போர்த்தொடர் (Gallipoli Campaign) எனலாம். இது ஜனவரி 1916 வரை நீடித்தது.
ஓட்டோமான் பேரரசு என்றழைக்கப்பட்ட தற்போதைய துருக்கிப் பகுதியில் அமைந்த ஒரு தீபகற்பம் கலிப்பொலி. இது துருக்கியின் ஐரோப்பியப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீபகற்பம் ஆகும். (ஆசியா, ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களிலுமாக அமைந்துள்ளது துருக்கி). இந்தத் தீபகற்பத்தின் மேற்கில் ஏஜியன் கடலும், கிழக்கே டார்டனெல்ஸ் நீரிணையும் அமைந்துள்ளன.
கலிப்பொலி என்பதன் பொருள், இத்தாலிய மொழியில், 'அழகான நகரம்' என்பதாகும். பழங்காலத்தில், இது நீண்ட சுவரால் பாதுகாக்கப்பட்டது. அது பண்டைய நகரமான அகோராவின் அருகே தீபகற்பத்தின் குறுகிய பகுதியில் கட்டப்பட்ட ஒரு தற்காப்பு அமைப்பாகும். நேச நாடுகளால் இந்தப் பகுதியின்மீது நடைபெற்ற தாக்குதலின் நோக்கம் ரஷ்யாவுக்கு ஒரு கடல் பாதையைப் பாதுகாப்பாக அமைப்பதுதான்.கலிப்பொலி போர்த்தொடர் (Gallipoli Campaign)
1915ன் தொடக்கக் காலகட்டத்தில் மேற்கு முனையில் (Western Front) நேச நாடுகள் அணி வெற்றியும் இல்லாத தோல்வியும் இல்லாத இறுக்கமான நிலையை அடைந்திருந்தன. இந்த நிலையில் ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் தலைநகரான கான்ஸ்டான்டினோபிளைக் கைவசப்படுத்த நேச நாடுகள் முயற்சி செய்தன. இதற்கான முதல் முயற்சியாக நேச நாடுகளின் ராணுவம் டர்டெனெல்லஸ் துறைமுகத்தைப் பாதுகாத்த கோட்டைகளின்மீது தாக்குதல் நடத்தத் தொடங்கின. இந்த ராணுவத்தில் ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்துப் படைகளும் இருந்தன. இந்த ஜலசந்தி ஏஜியன் கடலையும் மர்மாரா கடலையும் இணைத்தது. ஒருவிதத்தில் கருங்கடலையும் இவை இணைத்தன.
ஏப்ரல் 25 அன்று தாக்குதல் தொடங்கியது. பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுப் படைகள் கூட்டாக இந்தத் தாக்குதலை நடத்தின. ஆனால் இதில் வெற்றி கிடைக்கவில்லை. எனவே துறைமுகப் பகுதிக்குப் பதிலாக நிலப்பகுதியின் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற முடிவுக்கு அவை வந்தன. நேச நாடுகளின் சார்பில் அங்கு முதன் முதலில் வந்து இறங்கியது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ராணுவங்கள். இவற்றை ANZAC என்று குறிப்பிடுவதுண்டு. (இவையும் பிரிட்டிஷ் காலனியில் அப்போது இருந்ததால் இந்திய ராணுவம் போலவே அவையும் அங்கு அனுப்பப்பட்டன). விரைவில் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ராணுவமும் அங்கு வந்து சேர்ந்தன.போர் மிகவும் மும்முரமாக இருந்தது. ஓட்டோமான் ராணுவத்தினர், முக்கியமாக ANZAC-ஐ பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது. தொற்றுநோய்கள் வேறு வெகுவாக பரவத் தொடங்கி இருந்தன.பிரெஞ்சுப் படைகள்
துருக்கியர்கள், முஸ்தபா கெமெல் தலைமையில் மிகச் சிறப்பாகப் பதில் தாக்குதல் நடத்தினார்கள். எட்டு மாதங்களுக்கு இந்தப் போர் தொடர்ந்து இரு தரப்புக்கும் பலத்த பாதிப்பை உருவாக்கியது. ஒரு வழியாக ஜனவரி 1916 இதான் நேச நாடுகள் கலிப்பொலி போரை நிறுத்திக்கொண்டு தங்கள் ராணுவத்தைப் பின்வாங்கிக் கொள்ளத் தீர்மானித்தன. இந்தப் போரில் நேச நாடுகள் தரப்பிலிருந்து 1,30,000 பேரும் ஓட்டோமான் தரப்பிலிருந்து 86,000 இறந்ததாகக் கூறப்பட்டது.என்றாலும் கலிப்போலி போர்த்தொடர் முதலாம் உலகப்போரில் தன் முத்திரையைப் பதித்தது. நேச நாடுகளைப் பொறுத்த வரையில் இது ஒரு தோல்விதான். அவர்கள் திட்டமிட்டபடி கான்ஸ்டன்டினோபிளை அவர்களால் கைவசப்படுத்த முடியவில்லை. இதனால் ரஷ்யாவுக்கான ஒரு தடையில்லாத தொடர்புப் பாதையையும் அவர்களால் உருவாக்க முடியவில்லை.
எனினும் இதில் போரிட்ட ANZAC ராணுவத்தின் துணிவு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் இதில் மிகப் பெருமை கொண்டன. இந்த இரு நாடுகளிலும் இன்றளவும் ஒவ்வோராண்டும் ஏப்ரல் 25-ம் தேதி ANZAC தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தப் போரில் துருக்கியத் தரப்பு ராணுவ தலைவரான முஸ்தபா கெமல் பெரிதும் பாராட்டப்பட்டார். பின்னர் துருக்கிய சுதந்திரப் போருக்கு இது அஸ்திவாரமாக அமைந்தது. எட்டு வருடங்களுக்குப் பிறகு துருக்கி தன்னை ஒரு குடியரசாக அறிவித்துக் கொண்டது. கலிப்பொலி போரில் துருக்கியின் தலைமை ஏற்ற முஸ்தபா கேமல் பெரும் புகழ் அடைந்து அந்த நாட்டின் தலைவரானார். அவர் பின்னர் 'நவீன துருக்கியின் தந்தை' என்றும் அழைக்கப்பட்டார்.Landing of Australian troops at ANZAC Coveகிழக்கு முனையில் கலிப்பொலி போர் நடந்து கொண்டிருக்க, மேற்கு முனையில் நேவு சாபேலி போர் (The Battle of Neuve Chapelle) நடைபெற்றுக் கொண்டிருந்தது. நேவு சாபேலி என்ற கிராமத்தில் அருகே இந்தப் போர் நடைபெற்றதால் இதற்கு அந்தப் பெயர். பிரிட்டிஷ் ராணுவத்தினரும் ஜெர்மன் ராணுவத்தினரும் இதில் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.
ஜெர்மனி ராணுவம் ஒருங்கிணைந்து செயல்படாமல் அதை உடைக்க வேண்டும், அந்தப் பகுதியிலிருந்த ஆபர்ஸ் ரிட்ஜ் என்ற கிராமத்தைக் கைப்பற்றுவதன் மூலம் அங்கிருந்த ஜெர்மானியப் பாதுகாப்பு அரண்களை இல்லாமல் செய்ய வேண்டும். இதுதான் பிரிட்டிஷ் ராணுவத்தின் நோக்கமாக இருந்தது.
இதில் பிரிட்டிஷ் ராணுவத்தின் சார்பில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட ராணுவப் பிரிவுகளும் கலந்து கொண்டனர். நாயக் தர்வான் சிங் நேகி என்ற ராணுவ அதிகாரி தன் வீரத்தைப் பெரிதும் வெளிப்படுத்தினார். ஜெர்மன் ராணுவ வீரர்களுக்கு மிக அருகில் சென்று சேதத்தை விளைவித்தார். இரு முறை கடுமையான காயங்கள் ஏற்பட்டும் தொடர்ந்து உத்வேகத்துடன் போரிட்டார். போரின் முடிவுக்குப் பின் பிரிட்டிஷ் அரசின் உயரிய ராணுவ விருதான விக்டோரியா கிராஸ் என்பதைப் பெற்ற இரண்டாவது இந்தியரானார்.பிரிட்டிஷ் ராணுவத்தின் சார்பில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட ராணுவப் பிரிவுஊர்தியில் பொருத்தப்பட்ட பெரிய கனரகத் துப்பாக்கிகள் மூலம் பிரிட்டிஷ் ராணுவத்தினர் ஜெர்மனி ராணுவத்தின் மீது குண்டு பொழிந்தார்கள். இதைத் தொடர்ந்து தரைப்படை வீரர்கள் ஜெர்மானிய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். தொடக்கத்தில் இது கணிசமான வெற்றிகளைக் குவித்தது. ஆனால் அந்த வெற்றியை பிரிட்டிஷ் தரப்பால் தொடர முடியாமல் போனது.
ஜெர்மன் ராணுவத்தினர் தங்களை நிலைநிறுத்திக்கொண்டு பதில் தாக்குதல்களை மேற்கொண்டு நேவு சாபேலி கிராமத்தை மீண்டும் தங்கள் வசம் கொண்டுவந்தார்கள். இதில் பிரிட்டிஷ் ராணுவம் 11,000 பேரை இழந்தது. ஜெர்மனி தரப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 10,000. இந்தப் போரின் இறுதியில் இரு தரப்புக்குமே வெற்றி தோல்வி என்று இல்லாமல் போனது. கனரகத் துப்பாக்கிகள் பிரிவினருக்கும் தரைப் படையினருக்கும் இடையே உள்ள ஒன்றிணைக்கும் தகவல் தொடர்பின் அவசியத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டியது.
- போர் மூளும்...
http://dlvr.it/Ss0Jcx
Tuesday, 11 July 2023
Home »
» முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: Gallipoli Campaign - போரின் மாபெரும் திருப்புமுனையில் என்ன நடந்தது?