சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் நீட் தேர்வில் போதிய மதிப்பெண் பெறாததால் நேற்று ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இன்று மாணவனின் தந்தையும் துக்கம் தாளாமல் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் மீண்டும் தமிழ்நாட்டில் நீட் விவகாரத்தைக் கிளப்பியிருக்கிறது. நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாக மறுத்திருக்கும் நிலையில், அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் சூடுபிடித்திருக்கிறது.குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு - முதல்வர் ஸ்டாலின்
நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திடாத ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரது தேநீர் விருந்தை ஆளும் அரசான தி.மு.க புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கோரி தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில், `மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலான மருத்துவச் சேர்க்கை, நகர்ப்புற மாணவர்களுக்கும், அதிக கட்டணம் செலுத்தி பயிற்சி பெறக்கூடிய மாணவர்களுக்குமே சாதகமாக இருக்கிறது. அடிப்படையிலேயே ஏழை எளிய மாணவர்களுக்கு எதிரானதாக இந்தத் தேர்வு முறை இருக்கிறது. நீட் போன்ற நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதைவிட ப்ளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெற வேண்டும்.நீட் தேர்வு எழுதும் மாணவர்கள்
நுழைவுத் தேர்வு முறை மாணவர்களுக்குத் தேவையற்ற கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பது தமிழ்நாட்டின் கருத்து. நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை செயல்முறை, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வினால் ஏற்படும் பாதகமான விளைவுகள் ஆகியவை குறித்து ஆராய்ந்திட உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு விரிவான ஆய்வை மேற்கொண்டு, தீர்வுகள் குறித்த தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்தது.
இந்தக் குழுவின் அறிக்கை மற்றும் பல்வேறு விவாதங்களின் அடிப்படையில், தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டமுன்வடிவு, 2021 (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 43/2021), தமிழ்நாடு சட்டமன்றத்தில் 13-9-2021 அன்று நிறைவேற்றப்பட்டது. மேலும், 18-9-2021 அன்று தமிழ்நாடு ஆளுநருக்கும் அனுப்பப்பட்டது. ஆளுநரால் ஐந்து மாத காலத்துக்குப் பிறகு இந்தச் சட்டமுன்வடிவு திருப்பி அனுப்பப்பட்டது. 8-2-2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் இந்தச் சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டு, மறுபரிசீலனைக்குப் பிறகு மீண்டும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கு ஏதுவாக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்பட்டது.நீட் - ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாடு ஆளுநர், இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி, தற்போது நிலுவையில் இருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவு தொடர்பாக, ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 21-6-2022 அன்று கோரியிருந்த விளக்கங்கள், ஒன்றிய உயர்கல்வி அமைச்சகம் 26.08.2022, 15.05.2023 ஆகிய தேதிகளில் கோரியிருந்த விளக்கங்கள், ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் 13.01.2023 அன்று கோரியிருந்த விளக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் மூலம் பெறப்பட்டன.
ஒன்றிய அமைச்சகங்கள் கோரியிருந்த அனைத்து விவரங்களையும் தமிழ்நாடு அரசு விரைவாக வழங்கியது. ஆனால், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுக்கு இதுவரை ஒப்புதல் அளிக்கப்படாததால், நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை முறையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனதில் மிகுந்த கவலையையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.நீட் தேர்வு தந்தை, மகன் தற்கொலை
நீட் தேர்வின் மூலம் சேர்க்கை கிடைக்காத விரக்தியில் மாணவர்களும், சில நிகழ்வுகளில் அவர்களின் பெற்றோர்களும் தற்கொலை செய்துகொள்ளும் பல்வேறு சோகமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அண்மையில்கூட, நீட் தேர்வில் தோல்வியடைந்த மனஉளைச்சலில், சென்னை, குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஒருவரும், அவரின் தந்தையும் தற்கொலை செய்துகொண்டனர். தமிழ்நாட்டில் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்திருக்கிறது.
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, ப்ளஸ் டூ மதிப்பெண்கள் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்திருந்தால், இது போன்ற சோக நிகழ்வுகளை நிச்சயம் தவிர்த்திருக்க முடியும். தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதா, தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கருத்தின் பிரதிபலிப்பு. அதைச் செயல்படுத்துவதில் ஏற்படும் ஒவ்வொரு நாள் தாமதமும், தகுதியான மாணவர்களுக்கு சேர்க்கை கிடைப்பதில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.ஸ்டாலின், ஆர்.என்.ரவி, திரௌபதி முர்மு
அதுமட்டுமல்லாமல், சமுதாயத்தில் விலைமதிப்பற்ற மனித உயிரிழப்புகள் ஏற்படுவதற்குக் காரணமாகவும் அமைகிறது. எனவே, இந்த விவகாரத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்
https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3OITqxsநீட் தேர்வு: தற்கொலை செய்துகொண்ட மாணவரின் தந்தையும் தற்கொலை - சென்னையில் நடந்த சோகம்
http://dlvr.it/Stg0lc
Tuesday, 15 August 2023
Home »
» `16 தற்கொலைகள்; நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளியுங்கள்'- முர்முவுக்கு ஸ்டாலின் கடிதம்