பா.ஜ.க ஆளும் மணிப்பூரில் பழங்குடிப் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், மூன்று மாதங்களாக நடந்துகொண்டிருக்கும் வன்முறை விவகாரம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்திவந்த எதிர்க்கட்சிகள், பா.ஜ.க அரசு ஒத்துழைக்காததால் அரசுமீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தன. அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீதான விவாதம் நேற்று தொடங்கி இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றது.ராகுல் காந்தி
இருப்பினும், நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அதன் பிறகு இன்றுவரை நாடாளுமன்றத்துக்கு வரவில்லை. இன்றைய விவாதத்தில் முதல் ஆளாக உரையாற்றிய ராகுல் காந்தி, ``பிரதமர் ஏன் இன்னும் மணிப்பூருக்குச் செல்லவில்லை. பிரதமரைப் பொறுத்தவரை, அவருக்கு மணிப்பூர் இந்தியாவில் இல்லை. மணிப்பூரில் பாரத மாதாவை எரித்துவிட்டீர்கள் நீங்கள் (பா.ஜ.க). நீங்கள் தேசத்துரோகிகள்" என்று கடுமையாகச் சாடினார்.
இந்த நிலையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீதான விவாதத்தில் மணிப்பூர் வன்முறைப் பற்றி உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``மணிப்பூரில் வன்முறை நடந்ததை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால், இது போன்ற சம்பவங்களில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது வெட்கக்கேடானது. இந்த வன்முறையில் 152 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும், மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்தது துரதிர்ஷ்டவசமானது. ஒட்டுமொத்த சமூகத்துக்கும் ஏற்பட்ட அவமானம் இது.அமித் ஷா
ஆனால், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் இந்த வீடியோ வெளியானது ஏன்... அந்த வீடியோ யாரிடமாவது இருந்திருந்தால், அதை அப்போதே டி.ஜி.பி-யிடம் கொடுத்திருக்க வேண்டும். அப்படிக் கொடுக்கப்பட்டிருந்தால் சம்பவம் நடந்த அன்றே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். இப்போது ஒன்பது பேரை நாங்கள் அடையாளம் கண்டு கைதுசெய்திருக்கிறோம். மேலும், மணிப்பூரில் மூன்று நாள்கள் நான் இருந்தேன். அந்தச் சமயத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல், இந்த விவகாரத்தில் முதல் நாளிலிருந்தே விவாதத்துக்கு நான் தயாராக இருந்தேன். ஆனால், எதிர்க்கட்சிகள் விவாதத்தை விரும்பவில்லை. நான் பேசுவதைக்கூட அவர்கள் விரும்பவில்லை. இருப்பினும் அவர்கள் என்னை வாயடைக்க முடியாது.மணிப்பூர் வன்முறை - பாஜக
130 கோடி மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். எனவே, நாங்கள் பேசுவதைக் கேட்க வேண்டும். ஒரு மாநில முதல்வர் மத்திய அரசுக்கு ஒத்துழைக்கவில்லையென்றால்தான் அவரை மாற்ற வேண்டும். மணிப்பூர் முதல்வர் அரசுக்கு ஒத்துழைக்கிறார். எனவே, அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டிய தேவை இல்லை. மேலும் குக்கி, மைதேயி சமூகங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் எந்தவொரு பிரச்னைக்கும் வன்முறை ஒருபோதும் தீர்வாகாது. மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவோம் என்று நான் உறுதியளிக்கிறேன். அதேசமயம், இந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்யக் கூடாது" என்றார்.``இந்தியைத் திணிப்பதை நிறுத்திவிட்டு, சிலப்பதிகாரத்தைப் படியுங்கள்!" - மக்களவையில் கனிமொழி காட்டம்
http://dlvr.it/StRrc9
Thursday, 10 August 2023
Home »
» ``மணிப்பூரில் வன்முறை நடந்தது உண்மைதான்; கைகூப்பி கேட்கிறேன், வன்முறையை நிறுத்துங்கள்..!" - அமித் ஷா