தி.மு.க இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு வருகின்ற டிசம்பர் மாதம் சேலம் மாவட்டத்தில் நடைபெறவிருக்கிறது. இது தொடர்பாக நேற்று மாலை திருவாரூர் மாவட்டம் காட்டூர் பகுதியில் அமைந்திருக்கும் கலைஞர் கோட்டத்தில் திருவாரூர் மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி, ``தி.மு.க-வில் சுமார் 23 அணிகள் இருக்கின்றன. ஆனால், தலைமைக் கழகம் சொல்வதை உடனடியாக நிறைவேற்றக்கூடிய ஓர் அணி நம்முடைய இளைஞரணிதான். கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு வருகின்ற டிசம்பர் மாதம் சேலம் மாவட்டத்திலே தி.மு.க இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டுக்கு கலைஞர் பிறந்த மாவட்டமான திருவாரூரிலிருந்து, லட்சக்கணக்கான இளைஞர்களும், கழக உடன்பிறப்புகளும் தங்களுடைய குடும்பத்தோடு வந்து பங்கேற்க வேண்டும்.
சேலத்தில் நடக்கவிருக்கும் இந்த இளைஞரணி மாநில மாநாடு தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். குறிப்பாக சமீபத்தில் மதுரையில் நடந்த அ.தி.மு.க-வின் மாநாடு மாதிரி கேலிக்கூத்தாக நம்முடைய இளைஞரணியின் மாநாடு நிச்சயம் இருக்காது. ஒரு மாநாடு எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு மிகப்பெரிய உதாரணமாக சமீபத்தில் மதுரையில் நடந்த அ.தி.மு.க-வின் மாநாடு இருந்தது. நாட்டிலுள்ள மக்கள் பிரச்னைகளைப் பற்றியோ, நாட்டு மக்களின் மீதோ கொஞ்சம்கூட அக்கறை இல்லாமலும், வெறும் ஆடல், பாடல் கலைநிகழ்ச்சி என்று ஒரு கேவலமான மாநாட்டை அ.தி.மு.க நடத்தியிருக்கிறது. நேற்று காலையில்கூட ஒருவர், அ.தி.மு.க மாநாட்டுக்குச் சென்ற என்னுடைய மனைவியைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தாக செய்தி வந்தது.
அம்மையார் ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்துக்குள் வரவில்லை. அவர் இறந்த பிறகுதான், அ.தி.மு.க-வின் அடிமைகள் கூட்டம் நீட் தேர்வை தமிழகத்தில் கொண்டுவந்தது. கிட்டத்தட்ட 21 மாணவர்கள் இந்த நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இவை அனைத்தும் தற்கொலைகள் அல்ல..! திட்டமிட்டு செய்யப்பட்ட கொலைகள்..! குறிப்பாக, தமிழ்நாட்டில் பா.ஜ.க-வும், அ.தி.மு.க-வும் இணைந்து கிட்டத்தட்ட 21 மாணவர்களைக் கொலை செய்திருக்கின்றன. நீட் தேர்வை ரத்துசெய்வதற்கான எல்லா முயற்சிகளையும் உண்மையாக தி.மு.க அரசாங்கம் செய்துவருகிறது. ஏ.கே.ராஜன் தலைமையில் நீட் தேர்வு பற்றி ஆய்வுசெய்ய குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கையின் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டு முறை நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
ஆனால், இன்றுவரை அந்தத் தீர்மானத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தராமலே இருந்துவருகிறது. சமீபத்தில் வெளியான சி.ஏ.ஜி-யின் அறிக்கையில் பாசிச மோடி அரசாங்கத்தின் உண்மையான ஊழல் முகம் வெளிவந்திருக்கிறது. அந்த அறிக்கையில் ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம், இறந்துபோன, கிட்டத்தட்ட 88,000 பேருக்கு இன்ஷூரன்ஸ் தொகை வழங்கியதாகக் கூறி கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றிருக்கிறது. மேலும், "பாரத் மாலா" என்கிற திட்டத்தின் மூலம் ரோடு போடுவதற்காக சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு, பல கோடி செலவு செய்தாக, கணக்கு காட்டப்பட்டு மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா காலத்தில் பி.எம் கேர்ஸுக்கு அளிக்கப்பட்ட பணம் இதுவரை எவ்வளவு செலவானது என்றுகூட ஒன்றிய மோடி அரசாங்கம் சொல்ல மறுக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டால்கூட, இதைப் பற்றி கேட்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என கூறப்படுகிறது.
பிரதமர் மோடி நாட்டில் எங்கு பொதுக்கூட்டத்துக்குச் சென்றாலும் தி.மு.க-வைப் பற்றியும், தலைவர் ஸ்டாலினைப் பற்றியும்தான் திட்டி பேசுகிறார். ஆனால், நம்முடைய இந்திய நாட்டிலுள்ள மணிப்பூர் என்கிற மாநிலம் சுமார் மூன்று மாதங்களாகப் பற்றியெரிந்துகொண்டிருக்கிறது. அதைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு நேரமில்லை. உலக வரலாற்றிலேயே ஒரு பிரதமரை நாடாளுமன்றத்துக்கு வரவைப்பதற்குக்கூட போராட்டம் நடத்த வேண்டிய அவல நிலை நம்முடைய இந்திய நாட்டில்தான் உள்ளது. தமிழ்நாட்டில் கலைஞர் குடும்பம் மட்டும்தான் செழிப்பாக வாழ்ந்து வருவதாக பிரதமர் மோடி கூறி வருகிறார். ஆம், தமிழ்நாட்டிலுள்ள அத்தனை மக்களும் கலைஞரின் குடும்பம்தான். ஆனால், பிரதமரால் இந்திய நாட்டில் ஒரே ஒரு குடும்பம் மட்டும்தான் சொகுசாக வாழ்ந்து வருகிறது. அது அதானியின் குடும்பம் மட்டும்தான்...! இந்திய நாட்டையே பங்கு போட்டு, அதானிக்கு மோடி அரசாங்கம் விற்று வருகிறது. அதானி, இந்திய நாட்டிலுள்ள, ரயில்வே, துறைமுகம், சாலைப் போக்குவரத்து போன்ற, அவர் கால் பதிக்காத துறையே இல்லை. இதை அனைத்தையும் அதானிக்கு தாரை வார்த்தது இந்திய பிரதமர் மோடிதான்.
எனவே, இவற்றுக்கெல்லாம் முடிவுகட்ட இளைஞரணியைச் சேர்ந்த இளைஞர்கள் வீடு வீடாகச் சென்று ஒன்றிய மோடி அரசாங்கத்தைப் பற்றியும், அடிமை அ.தி.மு.க-வைப் பற்றியும் மக்களுக்கு எடுத்துக் கூறி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் `இந்தியா' கூட்டணி வெற்றிபெற உழைக்க வேண்டும். எப்படி 2021-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை தி.மு.க கூட்டணி பெற்றதோ..! அதே போன்ற ஒரு வெற்றியை வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் `இந்தியா' கூட்டணி பெற வேண்டும். அதற்கு நமது இளைஞரணியைச் சேர்ந்த தம்பிகள் அயராது உழைக்க வேண்டும்” என்றார்.
http://dlvr.it/SvDXgm
Sunday, 27 August 2023
Home »
» ``அதிமுக மாநாடு கேலிக்கூத்தானது; இளைஞரணி மாநாடு நிச்சயம் அப்படி இருக்காது!” - உதயநிதி ஸ்டாலின்