தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 13 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை, புலனாய்வுப் பிரிவு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையிலும், தமிழக அரசு அளித்த அறிக்கையின் அடிப்படையிலும், முடித்துவைத்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், தான் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையிலிருக்கிறது. கடந்த முறை, வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை தமிழக அரசுக்கு வழங்கப்பட்டிருக்கிறதா என பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.மு.க.ஸ்டாலினுடன் நீதிபதி அருணா ஜெகதீசன்
இன்று, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றத்திலிருந்து பெற்ற அறிக்கையைத் தவிர, தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடமிருந்து அறிக்கை ஏதும் கிடைக்கப்பெறவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மனுதாரர் ஹென்றி திபேன், மனித உரிமைகள் ஆணைய சட்டப்படி, அறிக்கையை சம்பந்தப்பட்ட அரசுக்கும், புகார்தாரர்களுக்கும் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த சி.பி.ஐ., தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமலை என்பவரை மட்டும் வழக்கில் சேர்த்திருப்பதாகக் குறிப்பிட்டார்.சென்னை உயர் நீதிமன்றம்
துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், 17 அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்ததாகவும், அந்த அறிக்கையை ஏற்று அரசாணை பிறப்பித்த தமிழக அரசு, அதனடிப்படையில் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 17-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
http://dlvr.it/SyMkV0
Saturday, 4 November 2023
Home »
» தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: `அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?' - விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு!