தமிழ்நாடு, பஞ்சாப், மேற்கு வங்கம், தெலங்கானா போன்ற பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே தொடர்ச்சியான மோதல் போக்கு நிலவிவருகிறது. குறிப்பாக, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதலளிக்காமல் ஆளுநர் வேண்டுமென்றே கிடப்பில் போடுகிறார் என்று, மாநில அரசு குற்றம்சாட்டுகிறது. மசோதாக்கள்மீதான ஆளுநரின் இத்தகைய செயல்களால், தமிழ்நாடு, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கெதிராக மனுக்கள் தாக்கல் செய்திருக்கின்றன.பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
இதில் பாஞ்சாப் மாநில அரசு, `ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வுசெய்கிறேன் என்ற பெயரில், மசோதாக்களுக்கு ஒப்புதலளிக்காமல் காலதாமதப்படுத்துகிறார்' என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது. பஞ்சாப் மாநில அரசின் இந்த மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த திங்களன்று விசாரித்தது.
விசாரணையின்போது, `ஆளுநர் கொஞ்சமாவது மனசாட்சியின்படி நடந்துகொள்ள வேண்டும். அதோடு, தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை ஆளுநர்கள் மறக்கக் கூடாது' என்று மொத்தமாகவே ஆளுநர்களைக் குறிப்பிட்டு கண்டித்த நீதிமன்ற அமர்வு, மசோதாக்கள்மீது பஞ்சாப் மாநில ஆளுநர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.உச்ச நீதிமன்றம்
அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பஞ்சாப் அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ``மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், கடிதங்களைத்தான் எழுதுகிறார் ஆளுநர். ஏழு கடிதங்கள் இங்கு இருக்கின்றன. மேலும், முதலமைச்சரின் எந்த ஆலோசனையும் இல்லாமல் அவையை ஆளுநர் ஒத்திவைக்க முடியுமா... அவ்வாறு செய்ய சட்டமன்ற விதிகளில் ஆளுநருக்கு இடமில்லை. அதோடு, அவையை ஒத்திவைக்க வேண்டுமானால் சபாநாயகருடன் ஆளுநர் கலந்தாலோசிக்க வேண்டும்" என்று வாதாடினார்.
அதைத் தொடர்ந்து பேசிய துஷார் மேத்தா, ``அரசியலமைப்பின்கீழ் இதற்குத் தீர்வு காண்போம். எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள்" என்று தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் கோரிக்கை விடுத்தார். பின்னர் இறுதியாகப் பேசிய சந்திரசூட், ``எந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, சபாநாயகர் அழைத்த அமர்வை செல்லாது என்று நீங்கள் (ஆளுநர்) கூறுகிறீர்... இதைச் சொல்வதற்கு ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது... முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களின் போக்கை திசைதிருப்ப வேண்டாம்.இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்
தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் இவை... அப்படியிருக்க ஓர் ஆளுநர் எப்படி அவ்வாறு சொல்ல முடியும்... நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள். இது மிகவும் தீவிரமான விஷயம். அமர்வு செல்லாது என்பதால், நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று எப்படிக் கூற முடியும்... நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதன் தீவிரத்தை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா..." என்று சரமாரியாகக் கண்டித்தார்.``கழிவுநீர் அகற்றும் பணியின்போது இறந்தால் ரூ.30 லட்சம் இழப்பீடு" - அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
http://dlvr.it/Syfvz1
Friday, 10 November 2023
Home »
» ``நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்..!" - பஞ்சாப் ஆளுநரைக் கண்டித்த உச்ச நீதிமன்றம்