பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் ஆகிய துறைகளை கவனிக்கும் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்களில் இன்று காலை 7 மணி முதலே வருமான வரித்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்திவருகின்றனர். சென்னை மற்றும் திருவண்ணாமலையில் மட்டும் அவருக்குத் தொடர்புடைய சுமார் 40 இடங்களில், ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டுவருவதாக முதற்கட்ட தகவல்கள் வருகின்றன.
எ.வ.வேலுவுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மட்டுமல்லாமல், அவரின் உறவினர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரிச் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதோடு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுவருகிறது. வரி ஏய்ப்பு ஏதேனும் நடந்திருக்கிறதா என்ற அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.எ.வ.வேலு - வருமான வரித்துறை சோதனை
ஏற்கெனவே, 2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரிச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. எ.வ.வேலுவின் குடும்ப உறுப்பினர்கள் பெயர்களில் மட்டும் 10 கல்வி நிறுவனங்கள், ஆறாயிரம் ஏக்கர் நிலம், ஸ்பின்னிங் மில், கிரானைட் கம்பெனி, ஃபைனான்ஸ் தொழில் ஆகியவை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்த தி.மு.க-வினர் தொடர்புடைய சொத்துப் பட்டியலிலும், அமைச்சர் எ.வ.வேலுவின் சொத்து மதிப்பு ரூ.5,552.39 கோடி எனத் தெரிவித்திருந்ததும், குறிப்பிட்டத்தக்கது.
இந்த நிலையில், கடந்த மாதம் முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி தி.மு.க எம்.பி-யுமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ரூ.400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத கட்டண ரசீதுகள் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல கடந்த ஜூலை மாதம் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. எ.வ.வேலு
அதற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைதுசெய்தது. அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்தச் சூழலில், தி.மு.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்களுள் ஒருவரான அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுவருவது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.Tamil News Live Today: அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
http://dlvr.it/SyKQft
Friday, 3 November 2023
Home »
» IT Raid: ஐ.டி ரேடாரில் அமைச்சர் எ.வ.வேலு - 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடிச் சோதனை!