சிறை என்றாலே சாப்பாடு மிகவும் மோசமாக இருக்கும் என்று ஒரு கருத்து உண்டு. ஆனால் இப்போது சிறையில் உணவோடு சேர்த்து அசைவ உணவுகளும் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். இது தவிர சிறை கேன்டீனில் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிப் பயன்படுத்திக்கொள்ள முடியும். தண்டனை பெற்ற கைதிகளுக்கு சிறையிலேயே வேலைவாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தில், தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ள முடியும். மகாராஷ்டிரா சிறைகளில் இருக்கும் கேன்டீன்களில் இதுவரை சோப்பு, பிஸ்கெட் போன்ற சொற்ப பொருள்களே கிடைக்கும். அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறைத்துறை முடிவுசெய்தது.
இதையடுத்து கைதிகளுக்கு என்ன பிடிக்கும் என்று அவர்களிடமே கேட்டு, அந்தப் பொருள்களை கேன்டீனில் வைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி கைதிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. கைதிகள் தங்களது விருப்பத்துக்கு ஏற்ப பல்வேறு பொருள்களின் பெயர்களைத் தெரிவித்தனர். `சிறையில் பிறந்தநாள் கொண்டாட கேக் இல்லாமல் இருக்கிறது. எனவே, கேன்டீனில் ஒரு கிலோ கேக் இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று சிலர் தெரிவித்தனர்.
ஆனால் சிறைக்குள் பிறந்தநாள் கொண்டாட அனுமதிக்க முடியாது என்றும், ஒரு கிலோ கேக் விற்பனை செய்ய முடியாது என்றும் கூறிவிட்டனர். ஆனால், சிறிய கேக் விற்பனை செய்யப்படும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து சிறைத்துறை அதிகாரி அமிதாப் குப்தா கூறுகையில்,''கைதிகளின் கருத்துகளைக் கேட்டு பாதுகாப்பு அம்சங்களை கவனத்தில்கொண்டு சிறை கேன்டீன்களில் விற்பனை செய்யப்படும் பொருள்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கூடுதலாக 167 பொருள்களைச் சேர்க்க முடிவுசெய்திருக்கிறோம்'' என்றார்.
ஐஸ்க்ரீம், பானி பூரி, சமோசா, கச்சோரி, கடலை மிட்டாய், பாப்கார்ன், சிறிய வகை கேக்குகள், இளநீர், ஃபேஸ் வாஷ் க்ரீம்கள், மருதாணி போன்ற ஏராளமான பொருள்கள் சிறை கேன்டீனில் விற்பனை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். சிறையில் விசாரணைக் கைதிகளாக இருப்பவர்கள் தங்களது வீட்டிலிருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.3,500 வாங்கி சிறையில் செலவு செய்துகொள்ள முடியும்.மகாராஷ்டிரா சிறை
தண்டனை பெற்ற கைதிகளுக்கு அவர்களின் திறமைக்குத் தக்கபடி வேலை கொடுக்கப்படும். இதற்காக அவர்களுக்கு தினமும் 53 ரூபாயிலிருந்து 94 ரூபாய் வரை சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது. இந்தப் பணத்தைச் சிறையில் செலவு செய்துகொள்ளலாம் அல்லது தங்களது உறவுகளுக்கு அனுப்பிவைக்கலாம். மகாராஷ்டிரா முழுவதும் 60 சிறைகள் இருக்கின்றன.
http://dlvr.it/SzqSlf
Thursday, 7 December 2023
Home »
» `சிறை கேன்டீனில் கைதிகளுக்கு ஐஸ்க்ரீம், கேக், பானி பூரி, இளநீர்..!' - மகாராஷ்டிரா அரசு முடிவு