``இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் அனைத்துச் சமூக மக்களையும் பங்குபெறவைத்து தேரோட்டத்தை நடத்த அரசால் முடியாவிட்டால், துணை ராணுவத்தை அழைக்கலாமா?" என்று உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டதன் மூலம், 20 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டதேவி தேரோட்டப் பிரச்னை மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது.கண்டதேவி கோயில்
இதைத் தொடர்ந்து வரும் ‘ஜனவரி 21-ம் தேதி தேர் வெள்ளோட்டம் விடப்படும்’ என்று சிவகங்கை மாவட்ட நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கும் நிலையில், ‘மாவட்ட நிர்வாகம் உயர் நீதிமன்ற உத்தரவைப் பொருட்படுத்தாமல், ஒரு சார்பாகவே இப்போதும் நடந்துகொள்கிறது’ என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிரஷ்ணசாமி குற்றம்சாட்டியிருப்பது, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கண்டதேவி தேரோட்டத்தில் இந்தப் பகுதியிலுள்ள தேவேந்திர குல வேளாளார் மக்களுக்கும் வடம் பிடிக்க உரிமை கேட்டு 1998-ம் ஆண்டு டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கு தாக்கல் செய்ய, 'கண்டதேவி தேரோட்டத்தில் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்க அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுக்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அதற்குப் பிறகு ஒவ்வோர் ஆண்டும் அனைத்து மக்களும் பங்குபெறும் வகையில், தேரோட்டத்தை நடத்த முடியவில்லை. தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுவந்த நிலையில், தேரோட்ட பிரச்னை தமிழக அரசியல் களத்தில் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. கோயில் குடமுழுக்குப் பணி, அதைத் தொடர்ந்து புதிய தேர் செய்யும் பணியையும் காரணம் காட்டி, 2005-ம் ஆண்டு முதல் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. மதுரை உயர் நீதிமன்றம்
அந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘தேர் தயாராக இருந்தாலும், அந்தப் பகுதியில் மக்களிடம் ஒற்றுமை இல்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்னை இருக்கிறது’ என்று அரசுத் தரப்பு தெரிவிக்க, ’சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்தும், பல பிரிவினரிடையே ஒற்றுமை ஏற்படவில்லை என்ற சூழல் கவலை அளிக்கிறது. பல கோடி ரூபாய் செலவு செய்து தெருவில் நிறுத்திவைக்கவா தேரை உருவாக்கினீர்கள்... அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுகளை அரசு புரிந்துகொண்டு, தேர் வெள்ளோட்டத்தை நடத்த வேண்டும். அரசால் முடியாவிட்டால், துணை ராணுவத்தை வைத்து நடத்த உத்தரவிடலாமா?' என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அரசிடம் கேள்வி எழுப்பியது.
உடனே சிவகங்கை கலெக்டர், சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான அலுவலர்களையும், தேவகோட்டை தாலுகாவிலுள்ள உஞ்சனை, செம்பொன்மாரி, இரவுசேரி, தென்னாலை நாட்டு அம்பலங்களையும் அழைத்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், ``தேரோட்டம் சம்பந்தமாக 1998-ல் வழக்கு தொடர்ந்த என்னை ஆலோசானைக் கூட்டத்துக்கு அழைக்கவில்லை, மாவட்ட நிர்வாகமே புதிய தேரை ஓடவிட்டு வெள்ளோட்டம் பார்க்கலாம். இதற்கு ஏன் ஒரு தரப்பினரிடம் மட்டுமே ஆலோசிக்கிறார்கள்... இது உயர் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத செயல்’’ எனப் பல கேள்விகளை எழுப்பி, சிவகங்கை கலெக்டருக்கு கடந்த நவம்பர் 16-ம் தேதி டாக்டர் கிருஷ்ணசாமி மனு அனுப்பினார்.டாக்டர் கிருஷ்ணசாமி அனுப்பிய மனு
அந்த மனுவுக்கு சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் பதில் அளிக்காத நிலையில், நாம், டாக்டர் கிருஷ்ணசாமியிடம் பேசினோம். ``1997-ம் ஆண்டு நடைபெற்ற தேரோட்டத்தில் வடத்தைப் பிடித்த தேவேந்திர குல வேளாளர் சமுதாய மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் என் கவனத்துக்கு வந்தது. அதோடுதான் அனைத்துச் சமுதாய மக்களும் தேர் இழுக்க உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று 1998-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கில், ‘கண்டதேவி தேரோட்டத்தில் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்துத் தரப்பினரின் பங்கேற்பையும் உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுக்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி லிப்ரான் 1998, ஜூலை 6-ல் தீர்ப்பளித்தார்.
அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகள், உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகும் தேவேந்திர குல வேளாளர் உள்ளிட்ட பிற சமுதாய மக்கள்மீது வன்முறைகள் ஏவப்பட்டு, 1998-ம் ஆண்டு தேரோட்டம் நிறுத்தப்பட்டது. பின்பு இந்து சமய அறநிலையத்துறையின் புதிய உத்தரவுக்கு எதிராக நான் தொடர்ந்த வழக்கில், `அனைத்துத் தரப்பினரின் பங்கேற்போடு தேரோட்டம் நடத்தப்படும்' என்று 1999, ஜூலை 26-ல் இந்துசமய அறநிலையத்துறை உத்தரவிட்டது.
ஆனால், அந்த ஆண்டும் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. இப்படித் தொடர்ச்சியாக உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவிடாமல் இன்னொரு தரப்பினர் பிரச்னை செய்த காரணத்தால், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேரோட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த உண்மையை மறைத்து யாரோ ஒரு நபர் தொடர்ந்த வழக்கில், தேரோட்டத்தை விரைந்து நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. டாக்டர் கிருஷ்ணசாமி
உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தடையாக இருப்பவர்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். எனக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை. கண்டதேவி சுற்றுவட்டாரத்தில் வாழும் அந்தக் கோயிலுக்குப் பாத்தியப்பட்ட தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த ஊர்த் தலைவர்கள் எவருக்கும் முறையாக அழைப்பு வழங்கப்படவில்லை. ஏதோ ஒருவகையில் தெரிந்துகொண்ட ஒருசிலர் மட்டுமே அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். 25 ஆண்டுக்கால கண்டதேவி தேரோட்டப் பிரச்னையை நன்கு அறிந்த மாவட்ட நிர்வாகம், ஒரு சார்பாக நடந்திருக்கிறது.
இந்துசமய அறநிலையத்துறைக்குட்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலை `சமஸ்தானம்' என்ற பெயருடன் குறிப்பிட்டிருந்த தேர் வெள்ளோட்டம் குறித்த மாவட்ட நிர்வாகத்தின் அறிக்கை, அதிர்ச்சியளிக்கிறது.கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில்
நீதிமன்ற உத்தரவுப்படி, தேரின் நான்கு வடங்களிலும் கண்டதேவியைச் சுற்றியிருக்கக்கூடிய தேவேந்திர குல வேளாளர் சமுதாய ஊர்த் தலைவர்கள் உட்பட அனைத்து மக்களும் சமமாகப் பங்கேற்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதுகாப்பு அளிக்கவேண்டிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்துக்கு உண்டு. எனவே, அந்த வட்டாரத்தைச் சேர்ந்த அனைத்து சமுதாயத் தலைவர்களுக்கும் முறையாக அழைப்பிதழ் கொடுத்து, மீண்டும் ஓர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, தீண்டாமைக்கு எந்தவிதத்திலும் இடம் கொடுக்காமல் அந்த முன்னோட்ட தேரோட்ட நிகழ்ச்சியை நடத்த வழிமுறைகளை வகுத்திட வேண்டும். அப்படி நடத்த முயலாவிட்டால், நாங்கள் நீதிமன்றத்துக்குச் செல்வோம்" என்றார்.
இது குறித்து சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத்தை நேரிலும் அலைபேசியிலும் தொடர்புகொண்டபோதும், விளக்கமளிக்க மறுத்துவிட்டார். கலவர மேகம் கலையாத கண்டதேவி!
http://dlvr.it/SzszC3
Friday, 8 December 2023
Home »
» கண்டதேவி கோயில் தேரோட்ட விவகாரம்: `ஒரு சார்பு நடவடிக்கை..!' - அரசை எச்சரிக்கும் கிருஷ்ணசாமி