தொழிற்சாலைகள், கட்டுமான மற்றும் கட்டட பொருள்களுக்கு முக்கிய இடமாகவும், தென் மாவட்டங்களுக்கும், வட மாவட்டங்களுக்கும் செல்ல ஏதுவாக போக்குவரத்துகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என ஏராளமான மிக முக்கியமான பகுதிகளை தன்னகத்தே கொண்டு நகராட்சியிலிருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது திண்டுக்கல்.
அப்படி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டாலும் இன்னும் அதன் உட்கட்டமைப்புகள் ஏதும் பெரிதாக மாற்றம் செய்யப்படதாக தெரியவில்லை. மாநகராட்சியாக தரம் உயர்த்திய பிறகு பேருந்து நிலையம் புதிதாக கட்ட கட்டுமான பணிகள் தொடங்கி, அதுவும் பாதியிலேயே நிற்கிறது.
பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு ஏதுவாக எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல் முன்பு இருந்தது போலவே தற்போதும் திண்டுக்கல் மாநகராட்சி (பேருந்து நிலையம்) விளங்குகிறது.
திண்டுக்கல் மாநகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி, கரூர், கோவை, மதுரை, தஞ்சாவூர் என பல மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பயணிகள் பேருந்துகள் மூலமாக வந்து செல்கின்றனர். அப்படி வரும் பயணிகளுக்காக கழிப்பிட வசதி, குடிநீர், செல்போன் சார்ஜ் போடும் வசதி, காத்திருப்பு அறை, பாலூட்டும் தாய்மார்கள் அறை என எவ்வித அடிப்படை வசதியும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது. பயணிகள் காத்திருப்பு அறை மிகவும் மோசமான நிலையில் தூய்மை படுத்தாமல், அதற்குள்ளேயே சிறுநீர் கழித்து தூய்மையற்ற இருக்கிறது. மேலும் மது அருந்தியவர்கள் போதையில் படுத்து இருப்பதால் அங்கு சென்று அமர பெண் பயணிகள் அஞ்சுகின்றனர். இதனால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் பெரும்பாலும் பணம் கட்டி செல்லும் கட்டண கழிப்பறைகளாகவே இருக்கின்றன. மாநகராட்சி சார்பில் இலவச கழிப்பிட வசதி செய்து தரப்படாலும், அது தற்போது பயன்படுத்தப்பட முடியாத சூழலில் இருக்கிறது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகள் தங்களுடைய இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு கட்டணம் தந்து செல்லும் நிலை தான் இருக்கிறது. அதேநேரம் பல பயணிகள் பேருந்து நிலையத்தில் எதிர்புறம் இருக்கிற இச்சுவர்பகுதியில் சிறுநீர் கழிக்கின்றனர்.
இப்படி தொடர்ந்து காலங்காலமாக சிறுநீர் கழிப்பதால் அங்கு சிறுநீர் சுமார் 800 மீட்டர் தூரத்திற்கு ஆறாய் ஓடுகிறது. அத்தோடு திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு அருகில் பள்ளிகள் கல்லூரிகள் என ஏகப்பட்ட கல்வி நிறுவனங்களும் இயங்குகின்றன. கல்வி நிறுவனங்கள் செல்வதற்கு பேருந்து நிலையத்திற்கு வரும் மாணவ, மாணவிகள் முகம் சுளிக்கும் அளவிற்கு அங்கு சிறுநீர் துர்நாற்றம் வீசுகிறது . அதன் மூலம் உடல் உபாதைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வரும் பெண் பயணிகள் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை துணியால் பொத்திக்கொண்டு செல்லும் அவல நிலையே இருக்கிறது.
பேருந்து நடத்துநர்கள், ஓட்டுநர்கள், வெளியூர் செல்லும் பயணிகள் என பலரும் இப்பேருந்து நிலையத்திற்கு எதிர்புறம் இருக்கும் சுவர் மீது சிறுநீர் கழித்து அந்த இடத்தை மிகவும் மோசமான நிலையில் வைத்துள்ளனர். பயணிகள் அவ்விடத்தை கடக்கும் பொழுது சுவாசிக்க கூட முடியாமல் வாந்தியும், குமட்டலும் ஏற்படுவதாக தெரிவித்தனர். இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் சிறுநீர் கழிக்கும் இடத்திற்கு அருகில் தான் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் வீடும் அமைந்துள்ளது.
யாரேனும் அரசியல் பிரமுகர்கள் அந்த இடத்தை கடக்க நேரிட்டாலோ அல்லது ஏதும் பேரணி நடைபெற்றால் மட்டுமே மாநகராட்சி சார்பில் பொடி தூவிவிட்டு செல்வார்கள். ஆனால் இச்செயல் திரும்ப திரும்ப நடப்பதை தடுக்கும் வழிமுறைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை. அத்தோடு இலவச கழிப்பறையில் சிறுநீர் கழிக்கும் பேசின்கள் உடைந்தும், பராமரிப்பு இன்றியும், அதனை சுத்தப்படுத்தாது மிக மோசமாக துர்நாற்றம் வீசும் அளவிற்கு இருக்கிறது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இதற்கு எடுத்தபாடில்லை.
பேருந்து நிலையத்தில் புதிய தூய்மையான இலவச கழிப்பறைகள், காத்திருக்கும் அறைகள், தூய குடிநீர் இவை மூன்றையும் உடனே வழங்க வேண்டும் என பயணிகள் தெரிவித்தனர். இப்படி திறந்தவெளி சிறுநீர் கழித்தலை திண்டுக்கல் மாநகராட்சி தடுக்க வேண்டும். இல்லையெனில் திறந்த வெளி சிறுநீர் கழித்தலை மாநகராட்சி நிர்வாகமே ஊக்குவித்தது போலாகிவிடும் என பயணிகள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இதுகுறித்து திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் அவர்களிடம் பேசினோம். ``திறந்தவெளியில் சிறுநீர் கழித்தல் என்பது சுற்றுப்புறத்திற்கும், உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது. அதனால் தான் அரசாங்கமே திறந்தவெளியில் சிறுநீர் கழித்தலை ஒழிப்பதற்காக கழிப்பிடங்களை கட்டித் தந்திருக்கிறது. பேருந்து நிலையம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. இலவச கழிப்பிடங்கள் மாநகராட்சி சார்பில் கட்டி தரப்பட்டுள்ளது, இன்னும் கூடுதலாக இலவச கழிப்பிடங்கள் தேவைப்பட்டால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டித் தர ஏற்பாடு செய்யப்படுவதாக” தெரிவித்தார்.
மேலும், `பயணிகள் குறிப்பிடுவது போல பயன்படுத்த முடியாத, சுகாதாரமற்ற முறையில் இருக்கும் கழிப்பறைகளை உடனே விரைந்து மாநகராட்சி பணியாளர்கள் மூலம் சரிசெய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆவன செய்வதாகவும்’ கூறினார்.
மேலும் தொடர்ந்தவர், `பொதுவெளியில் சிறுநீர் கழிக்கும் இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் "இங்கு சிறுநீர் கழிக்கக்கூடாது" என்ற தகவல் பலகையும், அத்தோடு அங்கு சிறுநீர் கழிக்க இயலாதவாறு மாநகராட்சி பணியாளர்கள் மூலம் ஏற்பாடு செய்வதாகவும், திண்டுக்கலை தூய்மையான மாநகராட்சியாக மாற்ற மக்களும், பயணிகளும் தான் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், அதற்கு மாநகராட்சி நிர்வாகம் முழு ஆதரவு அளிப்பதாகவும்’ மேயர் தெரிவித்தார்.
அரசு இது போன்ற சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்ற போதும், பொது மக்களும் பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இவ்விரண்டும் இணையும் இடம் தான், முழுமையான தீர்வுக்கான இடமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/T13tj4
Sunday, 7 January 2024
Home »
» திண்டுக்கல் பேருந்து நிலையம் எதிரே ஆறாய் ஓடும் சிறுநீர் - நடவடிக்கை எடுக்குமா மாநகர நிர்வாகம்?!