தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையிலான `உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024' இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்றது. இதில், இந்திய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதல் மாநில அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இந்த நிலையில், இரண்டு நாள்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.6,64,180 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் 26,90,657 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.உலக முதலீட்டாளர்கள் மாநாடு
நிகழ்ச்சியில் நன்றியுரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ``இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாகத் தமிழ்நாட்டின் 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு `முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு' என்ற பெயரில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலமாக ரூ.1,90,803 கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டதன் மூலம் 2,80,600 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்பட்டது. ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு நான் பயணம் மேற்கொண்டதன் மூலம் 17,371 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்துகிற வகையில், ரூ.7,441 கோடி மதிப்பிலான முதலீடுகள் பெற்றோம்.
இந்த முதலீடுகள் செயல் வடிவம் பெறுவதைத் தொடர்ந்து நான் கண்காணிப்பேன். அந்த வகையில் ஆட்சிக்கு வந்த நாள் முதல் இதுவரைக்கும் 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். 27 தொழிற்சாலைகளைத் திறந்து வைத்திருக்கிறேன். இதன் மூலமாக 74,757 இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதுபோல இந்த மாநாடு தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக அமையும். உலக அளவில் முதலீட்டுக்கான சிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அன்பு கட்டளையிட்டிருக்கிறேன்.முதல்வர் ஸ்டாலின்
இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் ரூ.6,64,180 கோடி என்பதை இந்தியாவே உற்றுநோக்கும் வகையில் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். இந்த திட்டங்கள் மூலம் நேரடி வேலைவாய்ப்பு என்ற வகையில் 14,54,712 நபர்களுக்கும், மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் 12,35,945 நபர்களுக்கும் என மொத்தம் 26,90,657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மேம்பட்ட மின்னணுவியல் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணிகள், வாகனங்கள், மின் வாகனங்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, தரவு மையங்கள், திறன்மிகு மையங்கள் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பலதரப்பட்ட துறைகள் மூலமாக இந்த முதலீடுகள் வந்திருக்கிறது.
ஈர்க்கப்பட்டுள்ள மொத்த முதலீடுகளில், உற்பத்தித் துறையில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பாக, ரூ.3,79,809 கோடி முதலீடுகள், எரிசக்தித் துறை சார்பாக ரூ.1,35,157 கோடி முதலீடுகள், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பாக ரூ.62,939 கோடி முதலீடுகள், தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பாக ரூ.22,130 கோடி முதலீடுகள், பெருந்தொழிற்சாலைகளுக்கு வலுவான விற்பனையாளர் தளத்தை வழங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக ரூ.63,573 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. சீரான, பரவலான வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்ற விதமாக, இந்த முதலீடுகள் எல்லாம், மாநிலம் முழுவதும் பரவலாக மேற்கொள்ளப்படவிருக்கிறது.
2030-ம் ஆண்டுக்குள், தமிழ்நாடு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்தியப் பொருளாதாரத்துக்கு மிக முக்கிய பங்களிக்கின்ற மாநிலமாகவும் சிறந்திட, பெரும் லட்சிய இலக்கை நிர்ணயித்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம். 20-க்கும் மேற்பட்ட கொள்கைகளை வெளியிட்டு, அந்தத் துறைகளில் உற்பத்தி மட்டுமல்லாமல், ஏற்றுமதியையும் வெகுவாக பெருக்கிடும் வகையில் முதலீடுகளைக் கணிசமாக ஈர்த்து, அதன்மூலம் வேலைவாய்ப்புகளை வெகுவாக அதிகரித்து வருகிறோம். மிகப்பெரும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்போது, அதற்கான முதலீடுகள் முழுவதையும் அரசே மேற்கொள்வது கடினம். கூட்டு முயற்சியில், தனியார் துறைகளோடு இணைந்து செயல்படுவதுதான் நடைமுறையில் சாத்தியம்.
அந்த வகையில், அப்படிப்பட்ட முதலீடுகளை ஈர்க்க, தனியார் மற்றும் அரசுத் துறைகளின் சிறந்த நடைமுறைகளை இணைத்து, பொது-தனியார் கூட்டாண்மைக் கொள்கையையும் (Public-Private Partnership Policy) வெளியிட்டிருக்கிறோம். தமிழ்நாடு அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க ஊக்குவிப்பு நிறுவனமான STARTUP தமிழ்நாடு உருவாக்கியுள்ள டேன்-ஃபண்ட் மூலம் பன்னாட்டுத் துணிகர முதலீட்டு நிறுவனங்களை (Venture Funds) தமிழ்நாட்டின் புத்தொழில் நிறுவனங்களோடு இணைப்பதற்கான தளம், இன்றைக்குத் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. நமது Startup தமிழ்நாடு, உலகளாவிய புத்தாக்கச் சூழல்களை ஆராயும் தரவு மற்றும் ஆலோசனை நிறுவனமான ஸ்டார்ட்அப் ஜினோம் ஆகியவற்றுக்கிடையே ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.Tamil Nadu Global Investors Meet: உலக முதலீட்டாளர்கள் மாநாடு
மாநிலத்திலுள்ள கல்லூரிகள் மூலமும், `நான் முதல்வன்' திட்டம் மூலமும் மாணவர்கள் அதிக அளவில் இந்த மாநாட்டில் பங்கேற்றுப் பயனடைய வாய்ப்பளிக்கப்பட்டிக்கிறது. சுமார் இருபதாயிரம் பிரதிநிதிகள் மற்றும் 39 லட்சம் மாணவர்கள், இதில் கலந்துகொண்டு பயனடைந்திருக்கிறார்கள். எங்களுடைய அரசை பொறுத்தவரைக்கும், நீங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்துப் போடுவதிலிருந்து உங்களுடைய எல்லா செயல்களுக்கும், அதாவது நீங்கள் உங்கள் தொழிற்சாலையை முழுமையாகக் கட்டி முடித்து, உற்பத்தியைத் தொடங்குவதிலிருந்து, அதற்கு பிறகும்கூட, உங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். உங்களுக்குத் தேவையான எல்லா க்ளியரன்சும் - சிங்கிள் விண்டோ சிஸ்டம் மூலமாக, விரைந்து வழங்கப்படும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த, தொழிற்துறை அமைச்சர் தலைமையில் ஒரு சிறப்புக்குழு அமைக்கப்படும்.
உங்களுக்கு எந்த தருணத்திலும், என்னிடம் ஏதாவது தகவல் தெரிவிக்க வேண்டும் என்றால், என்னுடைய அலுவலகத்தை, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். இந்த உறுதிமொழியை நான் தொழிற்துறை அமைச்சர் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலையில் வழங்குகிறேன். அதனால் நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம். இதுவரை, இங்கே முதலீடு செய்யாதவர்களும், எங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய முன்வாருங்கள் என்று அன்போடு அழைக்கிறேன். உங்கள் எல்லோரையும் நான் தொழில்முனைவோராக மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் நல்லெண்ணத் தூதுவர்களாகப் பார்க்கிறேன். எனவே, தமிழ்நாட்டை உலகுக்கு அறிமுகம் செய்யுங்கள். உலக நாடுகளைத் தமிழ்நாட்டுக்கு அழைத்து வாருங்கள்" என்று கூறினார்.உலக முதலீட்டாளர்கள் மாநாடுகளால் தமிழகத்துக்கு இதுவரை கிடைத்தது என்ன?!
http://dlvr.it/T16Cn2
Monday, 8 January 2024
Home »
» TNGIM 2024: `2 நாள்களில் ரூ.6,64,180 கோடி அளவுக்கான முதலீடுகள்..!' - முதல்வர் ஸ்டாலின் தகவல்