புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த 2-ம் தேதி தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அதையடுத்து 5-ம் தேதி அதே பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் விவேகானந்தன், கருணாஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து ஒட்டுமொத்த புதுச்சேரியும் போராட்டக்களமாக மாறியிருக்கிறது. அதையடுத்து கொலைசெய்ய காரணமான போதைப்பொருளை கட்டுப்படுத்த தவறிய முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் போராட்டம் இன்று நடந்தது.புதுச்சேரி சிறுமி கொலை
பந்த் போராட்டம் அறிவித்த இந்தியா கூட்டணி கட்சியினர், இன்று காலை 10 மணியளவில் ராஜா தியேட்டர் சந்திப்பில் ஒன்று கூடினர். அப்போது முதலமைச்சர் ரங்கசாமியும், உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். சிலர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் திடீரென இந்தியா கூட்டணி கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தில் தி.மு.க அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேவபொழிலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நேரு வீதி வழியாக வந்த அந்த ஊர்வலத்தை நேருவீதி, மிஷன்வீதி சந்திப்பில் பேரிகார்டு அமைத்து போலீஸார் தடுத்தனர். இதனால் ஊர்வலத்தில் வந்தவர்கள் மிஷன் வீதியில் திரும்பினர். அவர்களை போலீஸார் தடுக்க முயன்றனர். அவர்களை தள்ளிவிட்டு, ஊர்வலத்தில் வந்தவர்கள் மிஷன் வீதி, ரங்கப்பிள்ளை வீதி வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தனர். அங்கு போலீஸார் பேரிகார்டு அமைத்து அவர்களை தடுத்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் குறைவாகவே போலீஸார் இருந்தனர். இதனால் போலீஸாருடன் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெண் போலீஸார் உட்பட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். ஆனாலும் பேரிகார்டுகளை தள்ளிவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், திருநங்கைகள் சிலர் கவர்னர் மாளிகையை நோக்கி சென்றனர். அவர்களை துரத்திச் சென்ற போலீஸார் பாரதிதாசன் சிலை அருகே தடுத்து நிறுத்தினர். பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை கவர்னர் மாளிகை நோக்கி செல்லவிடாமல் சுற்றி வளைத்தனர்.
ஆனால் அவர்களை மீறி திடீரென மீண்டும் அங்கிருந்து கவர்னர் மாளிகை நோக்கி ஓடினர். சிலர் கவர்னர் மாளிகை வாசலில் இருந்த பேரிகார்டுகளை தாண்டி கவர்னர் மாளிகை வாசலுக்கு சென்றனர். கவர்னர் மாளிகை வாசலில் நின்று அவர்கள் கோஷம் எழுப்பினர். போலீஸார் அவர்களை துரத்திப் பிடித்து கைது செய்தனர். இந்த போராட்டத்தால் கவர்னர் மாளிகை வாசல், சுற்றுப்புற பகுதிகள் கலவரமாக காட்சியளித்தது. இதையடுத்து நூற்றுக்கணக்கான போலீஸார் கவர்னர் மாளிகையை சுற்றிலும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி கட்சியினரையும் போலீஸார் கைது செய்தனர். வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, தி.மு.க மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ-க்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கைதுசெய்யப்பட்டனர். போலீஸாருடன் ஏற்பட்ட மோதலில் 3 திருநங்கைகளுக்கு கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டது.புதுச்சேரி கொடூரம்: மாயமான சிறுமி... வேட்டியில் சுற்றி சாக்கடையில் வீசப்பட்ட உடல் - நடந்தது என்ன?!
http://dlvr.it/T3pX3j
Saturday, 9 March 2024
Home »
» புதுச்சேரி: சிறுமி கொலைக்கு நீதி கேட்டுப் போராட்டம்; ஆளுநர் மாளிகையை நெருங்கியதால் போலீஸ் தடியடி!