போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட தி.மு.க சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக், ஜெய்ப்பூர் பங்களாவில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளால் நேற்று கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில், தமிழ்நாட்டின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``தி.மு.க-வை கலங்கப்படுத்த பா.ஜ.க செய்யும் அரசியல் தமிழ்நாட்டிலும், இந்திய அளவிலும் எடுபடாது.சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
பா.ஜ.க அரசின் சர்வாதிகாரப்பிடியிலிருந்து நாட்டை விடுவிக்கவேண்டும் என்பதற்காக, அகில இந்தியளவில் அணி திரட்டுவதில் முக்கியப் பங்கு வகித்த, வகித்துக்கொண்டிருக்கும் தி.மு.க-வை தேர்தல் களத்தில் கலங்கப்படுத்தி, அதன் மூலம் அரசியல் லாபம் பார்க்கலாம் என பா.ஜ.க தப்புக் கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு அ.தி.மு.க-வும் துணை நிற்கிறது. வருமான வரித்துறை, சி.பி.ஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை வரிசையாகக் களமிறக்கிவிட்ட பா.ஜ.க அரசு, தற்போது தி.மு.க அரசை எதிர்க்க என்.சி.பி அமைப்பை இறங்கியிருக்கிறது.
தி.மு.க அரசின் போதைக்கு எதிரான நடவடிக்கையை நீதிமன்றமே பாராட்டியிருக்கிறது. ஆனால், மத்திய பா.ஜ.க அரசு என்.சி.பி-யை வைத்து மிரட்டிப்பார்க்கலாம் என நினைக்கிறது. என்.சி.பி-யின் துணை இயக்குநர் ஞானேஸ்வர்சிங் புலன் விசாரணை முழுமையாக முடிவதற்கு முன்பே அவசர அவசரமாக பத்திரிக்கையாளரைச் சந்திக்கிறார். புலன் விசாரணை முழுமையாக்கப்படுவதற்கு முன்பே செய்தியாளர்களைச் சந்திப்பது இதுவே முதன்முறை. அதன் மூலம் தி.மு.க-வை கலங்கப்படுத்த முயல்கிறார். தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோதுதான், தமிழ்நாட்டில் அமைச்சரே குட்கா வியாபாரிக்குத் துணை போனது குறித்து வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்றமே, துணைபோன அதிகாரிகள் மீது சி.பி.ஐ விசாரணை நடத்தியது.சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தியபோது கிடைத்த ஆவணத்தில், ரூ.85 கோடி எந்தெந்த அமைச்சருக்குத் தரப்பட்டது என்பது குறித்த விவரங்கள் இருந்தன. ஆனால், அது குறித்து அமலாக்கத்துறையோ, வருமான வரித்துறையோ நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. பா.ஜ.க-வை தாங்கிப் பிடிக்கப் புலன் விசாரணை அமைப்புகள் தீவிரமாக முயன்றுவருகின்றன. பிப்-15-ம் தேதி ஜாபர் சாதிக்கைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததாகச் சொல்கிறது என்.சி.பி. ஆனால், பிப்-21 அன்று அவர் மங்கை திரைப்பட வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது என்.சி.பி எங்கே போனது...
2013-லேயே ஜாபர் சாதிக் மீது ஒரு வழக்கு வந்தது. அப்போது ஆட்சியிலிருந்தது அ.தி.மு.க, வழக்கை உறுதியாக நடத்தாமல் கோட்டைவிட்டது. அப்போதே உருப்படியாக நடத்தியிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது. மேலும், அப்போது ஜாபர் சாதிக்குக்காக வாதாடிய வழக்கறிஞர் பா.ஜ.க-வின் வழக்கறிஞர் அணித் தலைவர் பால் கனகராஜ். எங்கள் இயக்கத்தில் 2 கோடிக்கும்மேல் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களில் யார்மீதாவது தவறுகள் இருந்தால், உடனடியாக அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த போதைப்பொருளுக்கு முக்கியக் காரணமாக இருப்பது, குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகம்தான்.எடப்பாடி பழனிசாமி
அங்கேதான், 21 ஆயிரம் கிலோ, 9 ஆயிரம் கிலோ என போதைப்பொருள்கள் கடத்தப்பட்டிருக்கிறது. அதுவும், பாகிஸ்தான் அமைப்புகளுடனெல்லாம் தொடர்பு வைத்துக் கடத்தப்பட்டிருக்கிறது. இந்திய அளவில், குஜராத், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிராவில்தான் அதிக போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் போடப்பட்டிருக்கிறது. எனவே, தற்போது பா.ஜ.க தேர்தலுக்காக தி.மு.க மீது குற்றச்சாட்டைச் சுமத்திவிட முடியாதா எனக் கனவுக் காண்கிறது. தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப்பொருள்கள்கூட தமிழ்நாட்டில் பிடிக்கப்படவில்லை. ஏனென்றால் தமிழ்நாட்டுக்குள் போதைப்பொருள் கடத்துவதைத் தீவிரமாகக் கண்காணித்து ஒழித்து வருகிறோம். இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் விளைவிக்கப்படாத மாநிலம். எனவே, தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்துக்கு தி.மு.க அரசு ஒருபோதும் உறுதுணையாக இருக்காது. தமிழ்நாட்டின் வளர்ச்சி ஏன் வடமாநிலங்களில் இல்லை என வடமாநில மக்கள் அந்தந்த மாநில அரசுகளிடம் கேள்விகேட்கத் தொடங்கிவிட்டார்கள்.முந்த்ரா துறைமுகம்
அதன்காரணமாகதான் தமிழ்நாட்டை போதைப்பொருள் மாநிலமாகச் சித்திரிக்க சதித்திட்டம் நடக்கிறது. இன்றளவும் பா.ஜ.க-வை சேர்ந்தவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், அவர்கள் பா.ஜ.க-வில் இணைந்ததும் புனிதர்களாக மாறிவிட்டார்கள். ஜாபர் சாதிக்குக்கும் தி.மு.க-வுக்கும் எந்த தொடர்புமில்லை. அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும், அ.தி.மு.க, பா.ஜ.க-வில் தான் இருக்கிறார்கள்.
போதைப்பொருள் கடத்தப்பட்டதிலிருந்து கட்சிக்குப் பணம் கொடுத்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். குற்றவாளிக்கு துணைபோகமாட்டோம், குற்றவாளியை தப்பிக்கவும் விடமாட்டோம். எந்த ஆதாரமும் இல்லாமல், குற்றவாளியுடன் தொடர்புப்படுத்தி கட்சித் தலைவர்களை இணைக்கிறார்கள் என்றால், அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்திருக்கிறார். ஜாபர் சாதிக்: `3,500 கிலோ போதைப் பொருள்; சினிமா தொடர்பு... விசாரிக்கப்படும்!’ - அதிகாரி சொல்வதென்ன?
http://dlvr.it/T3sr8P
Sunday, 10 March 2024
Home »
» `அன்று ED, இன்று NCB; ஜாபர் சாதிக்குக்கும் திமுக-வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!' - அமைச்சர் ரகுபதி