தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் தீவுகளின் காங்கிரஸ் கட்சி தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் பவ்யா நரசிம்மமூர்த்தி நேற்று விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "மணிப்பூர் மாநில கலவரத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகினர். ஆனால் இந்த நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறேன் என கூறும் மோடி ஒருமுறை கூட மணிப்பூர் மாநிலத்திற்கு நேரில் செல்லவில்லை. மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் மற்றும் அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் கூட அவர் கலந்துரையாடவில்லை.செய்தியாளர் சந்திப்பு
அதுபோல 5 மாநில தேர்தல் நடைபெற்ற போது தெலங்கானா, ஹரியானா உள்பட ஏனைய மாநிலங்களுக்கு சென்ற பிரதமர் மோடி மேகாலயாவுக்கு மட்டும் செல்லவில்லை. காரணம், மணிப்பூர் மாநில கலவரத்தை சரியான முறையில் கையாளாத மோடி அரசை விமர்சித்து மேகாலயா முதலமைச்சர் பிரசார மேடையை பிரதமர் மோடியுடன் பகிர்ந்துகொள்ளவில்லை. மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இதை அகில இந்திய காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கண்டிப்பாக மணிப்பூர் மக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி நிற்கும்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் உள்பட ஐந்து அம்ச வாக்குறுதிகளை முக்கியமாக வலியுறுத்துகிறோம். மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. உத்திரபிரதேசத்தில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்பு உடையவராக உள்ளார். பா.ஜ.க.வின் மக்களவை உறுப்பினர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதை விசாரணை நடத்த வேண்டிய மத்திய அரசு, வீரர்-வீராங்கனைகளின் போராட்டங்களை பற்றியோ, புகாரை பற்றியோ கவலைப்படவில்லை.`கோடீஸ்வர’ நண்பர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி - மோடி மீதான ராகுல் சாடலும் பின்னணியும்!
பா.ஜ.க. உறுப்பினர்களின் பாலியல் அத்துமீறல் குறித்து பிரதமர் மோடி ஒரு நாளும் வாய் திறக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகவோ, ஆறுதலாகவோ ஒரு வார்த்தை பேசவில்லை. கடந்த 2014ம் ஆண்டில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 30 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. எனவே பெண்களுக்கு பாதுகாப்பு அளித்து, அவர்கள் பிறர் சார்பற்று பெண்கள் தனித்து இயங்குவதற்கு, கல்வி, பொருளாதார ரீதியாக பெண்களை பலப்படுத்துவதற்கு காங்கிரஸ் மகாலட்சுமி திட்டம் மற்றும் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு திட்டத்தை அறிவித்திருக்கிறது. மத்திய மோடி அரசு, ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும் என வாக்குறுதி அளித்தனர். ஆனால் இதுவரை ஒருவருக்குக்கூட வேலைவாய்ப்பை உருவாக்கி தரவில்லை. மாறாக நாட்டில் வேலையில்லா திண்டாட்டம்தான் உச்சத்தை தொட்டிருக்கிறது.
எனவே இளைஞர்களுக்கு நியாயம் சேர்க்கும் விதமாக 25 வயதுக்குட்பட்ட வேலையில்லா இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கும் திட்டத்தை காங்கிரஸ் வரையறுத்திருக்கிறது. அதுபோல உணவு டெலிவரியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சரியான பணி வரன்முறை, சமூக பாதுகாப்பு, பணி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. அவர்களை பாதுகாக்கும் பொருட்டு உணவு டெலிவரி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கென தனி சட்டம் கொண்டு வந்து அவர்களுக்கான பணி பாதுகாப்பையும், சமூக பாதுகாப்பையும் காங்கிரஸ் உறுதிப்படுத்தும். புலம்பெயர் தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கின் போது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். பல்லாயிரக்கணக்கானோர் சொந்த ஊர் திரும்புவதற்கு போக்குவரத்து வசதியின்றி உணவின்றி செத்து மடிந்தனர். கொரோனா ஊரடங்கு தொடர்பாக பிரதமர் மோடி, நாட்டின் எந்த ஒரு முதலமைச்சருடனும் கலந்தாலோசிக்கவில்லை. பேரிடர் காலத்தை எதிர்கொள்வதற்கு தயார்நிலையில் இருக்கும்படி எந்த முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை.பேட்டி
பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்றப்பின்பு விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய ஆதார விலை நிர்ணயித்து அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்கள். ஆனால் அதற்கு பதிலாக வேளாண் விவசாயிகளின் நலனை கெடுக்கும் விதமாக மூன்று வேளாண் சட்டங்களை வலுக்கட்டாயமாக திணித்தது மத்திய அரசு. இதனால் மோடி அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தில் 750 விவசாயிகள் பலியாகினர். விவசாயிகள் போராட்டத்தின் தொடர் அழுத்தம் காரணமாக மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக மோடி அரசு அறிவித்தது. ஆனாலும் இது இன்று வரை நடைமுறைக்கு வரவில்லை. ஆகவே மீண்டும் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியலின மக்கள், பழங்குடி மக்கள் என அனைத்து வகுப்பு சாதியினரும் ஒருங்கிணைந்த வளர்ச்சி வேண்டும், அனைத்து பிரிவினருக்கும் சம உரிமை, சம கல்வி, சம சமூக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே இந்தியா கூட்டணியின் கொள்கை.
ஆகவே இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்பு இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்ட அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இதுநாள்வரை இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய மோடி அரசு நடத்தாததற்கு பின்புலத்தில் ஆர்.எஸ்.எஸ். ஒளிந்திருக்கிறது. மத்திய மோடி அரசு தேர்தல் பத்திரங்களின் மூலம் பல லட்சம் கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றிருக்கிறது. நன்கொடை கொடுத்தவர்களின் பட்டியலை முழுமையாக வெளியிட பாரத ஸ்டேட் வங்கியை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்த பிறகு தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அந்தவங்கி வெளியிட்டிருக்கிறது. அதன்படி, தேர்தல் பத்திரங்கள் மூலமாக நாட்டிலேயே அதிகம் நன்கொடை பெற்ற கட்சி பா.ஜ.க. என்பது தெரியவந்துள்ளது. வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை ரெய்டுகளின் மூலமாக அச்சுறுத்தப்பட்ட கார்ப்பரேட்டுகளிடமிருந்து 6000 கோடியை பா.ஜ.க. அரசு பெற்றிருக்கிறது.பவ்யா
ஐ.டி., இ.டி. ரெய்டு நடத்தி நன்கொடை பெறுவதன் மூலம் இந்த அரசு எதை மறைக்க நினைக்கிறது. ஆகவே பா.ஜ.க. தேர்தல் பத்திர ஊழல், ரபேல் ஊழல் குறித்தும் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் விசாரணை நடத்தப்படும். கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு செய்த தவறுகளையும், ஊழல்களையும் மக்களுக்கு அம்பலப்படுத்தும் விதமாக காங்கிரஸ் அரசு செயல்படும். சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகிய துறைகளை சுதந்திரமாக செயல்பட விடாமல் அரசியல் நோக்கத்துக்காக தவறாக பயன்படுத்துவதை காங்கிரஸ் கட்சி தடுத்து நிறுத்தும். காங்கிரஸ் ஆட்சியில் அந்த துறைகள் யாவும் அதற்குரிய தனித்துவத்தோடு தனித்து இயங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சமீபத்தில் 17,000 ஏக்கர் பரப்பளவு நிலத்தை எல்லை ஒப்பந்தத்தின் அடிப்படையில் பங்களாதேஷ் நாட்டுக்கு நரேந்திர மோடி அரசு வழங்கியது. இதற்கு பதிலாக வெறும் 7000 கோடி ரூபாயை மட்டுமே அந்நாட்டு அரசு பா.ஜ.க. அரசுக்கு திருப்பி அளித்துள்ளது. ஆனால் கச்சத்தீவு விவகாரம் அப்படியல்ல. கச்சத்தீவு விவகாரமானது இருநாட்டு நல்லுறவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
கச்சத்தீவிற்கு பதிலாக, 6 லட்சம் மீனவர்களின் வாழ்க்கையையும், கடல் வள மிகுந்த பகுதிகளையும் அந்நாடு நமக்கு திருப்பி அளித்துள்ளது. ஆகவே தமிழ் மீனவர்களின் உணர்வுகளோடு மோடி அரசு விளையாடக்கூடாது. ஆகவே நடந்த உண்மையில் பாதியை மறைத்து மீதியை சொல்லி வெறுப்பு அரசியலை திணித்து அதில் ஆதாயம் தேட நினைக்கும் பா.ஜ.க.வின் எண்ணம் பலிக்காது. தமிழக மீனவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். தேர்தலைப் பொறுத்தவரையில் மணிப்பூர் உள்பட பா.ஜ.க.வின் கோரமுகத்தை பார்த்த எந்த மாநிலத்திலும் அந்த கட்சி ஒரு எம்.பி. சீட் கூட வெல்லப்போவதில்லை. தென்னிந்தியா முழுவதுமே பா.ஜ.க.வுக்கு எதிரான மன நிலையில் தான் உள்ளது. ஆகவே இந்த முறை இந்தியா கூட்டணி அநேக இடங்களில் வெற்றி பெறும். வடமாநிலங்களில் கூட, நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் பா.ஜ.க.எவ்விதத்திலும் உதவாது என்பதை இளைஞர்கள் புரிந்து வைத்துள்ளனர்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWYமகாராஷ்டிரா: லாரி மோதியதில் நொறுங்கிய நானா பட்டோலே கார்; கொலை முயற்சி என காங்கிரஸ் புகார்!
http://dlvr.it/T5PKpm
Friday, 12 April 2024
Home »
» "பாஜக செய்த அனைத்து ஊழல் குறித்தும் காங்கிரஸ் விசாரிக்கும்"- தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் பவ்யா