நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் அருகே உள்ள பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருகின்ற குரூடு ஆயிலை பெட்ரோல், டீசலாக பிரிக்கும் பணி இங்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிபிசிஎல்லை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பனங்குடியை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. இதைதொடர்ந்து மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு சட்டத்தின் படி கையகப்படுத்தபட்ட நிலங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கடந்த 1ம் தேதி போராட்டுக்குழு சிபிசிஎல் நிறுவனத்திற்கு எதிராக தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். விவசாயிகள், பெண்கள் போராட்டம்
குறிப்பாக பெண்கள் இந்த போராட்டத்தில் பெருமளவில் கலந்து கொண்டனர். கடந்த பத்து தினங்களாக நடைபெற்று வந்த இந்த போராட்டம் தீவிரமடைந்து கவனம் ஈர்க்கின்ற வகையில் நடைபெற்றது. இதனால் பனங்குடி பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. நான்கு மாவட்ட எஸ்.பிக்களின் ஆலோசனையில் 11 டி.எஸ்.பிக்கள், 24 இன்ஸ்பெக்டர்கள் சுமார் 800 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நிலம் கையப்படுத்தப்பட்டு ஊன்றப்பட்ட எல்லை கற்களை பெண்கள் பிடுங்கி எரிந்தனர்.
இதைதொடர்ந்து 20க்கும் மேற்பட்ட பெண்களை போலீஸார் இழுத்து சென்று கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து நாகூர் வி.எஸ்.ஏ. தஸ்லீம் என்பவரிடம் பேசினோம், "சிபிசிஎல் நிறுவனம் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு பனங்குடியில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்காக அப்பகுதியினரின் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு நிவாரணமாக வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, நிலத்திற்காக உரிய இழப்பீடு உள்ளிட்ட பலவற்றை செய்து தருவதாக அந்த சமயத்தில் சிபிசிஎல் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து போராட்டம்
ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை முறையாக நிறைவேற்றி தரவில்லை. இழப்பீட்டு தொகை உள்ளிட்டவற்றை நிறைவேற்றி தரக்கோரி அவ்வப்போது போராட்டம் நடத்துவோம். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு சிபிசிஎல் நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்காக மத்திய அரசு ரூ.36,000 கோடி நிதி ஒதுக்கியது. இதைதொடர்ந்து பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் விவசாய நிலம் கையப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது.
சிபிசிஎல் நிறுவனத்தினர் விவசாய நிலங்களை அளவீடு செய்து கையகப்படுத்தி எல்லை கற்கள் பதித்தனர். இந்நிலையில் ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை, அப்போது நிறைவேற்றி தருவதாக சொன்ன வாக்குறுதிகள் இது வரை முழுமையாக நிறைவேற்றவில்லை, உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி தற்போது நிலத்தை கையகப்படுத்தி செய்யப்படுகின்ற விரிவாக்க பணிகளுக்கும், நிலத்தை கையகப்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மூன்று ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், விவசாய கூலிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஒருங்கிணைந்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வந்தோம். வி.எஸ்.ஏ.தஸ்லீம்
இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ஜான் டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் எல்லை கற்களை பிடிங்கி எரிந்து போராட்டம் நடத்திய பெண்களை இழுத்து சென்று கைது செய்தது கொந்தளிக்க வைத்தது. போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களில் நூறு பேர் கைது செய்யப்பட்டனர். இதைதொடர்ந்து எங்கள் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. சிபிசிஎல் நிறுவனம் முறையாக நிலத்திற்கான இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என்பது எங்களுடைய நியாமான கோரிக்கை.
இந்நிலையில் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று இரவு நடைபெற்ற பேச்சு வார்த்தையில் வரும் ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு கணக்கெடுப்பு பணிகள் முடித்து உரிய இழப்பீடு வழங்கப்படும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் படிப்படியாக நீக்கப்படும். கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து 11 நாட்களாக நடத்திய தொடர் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம்" என்றனர்.
http://dlvr.it/T6mMcw
Sunday, 12 May 2024
Home »
» CPCL: நாகை; சிபிசில் நிறுவனத்திற்கு எதிராக 11 நாள்கள் நடைபெற்ற போராட்டம்; பேச்சு வார்த்தையில் வாபஸ்!