கலை கதிரவன்
கலை கதிரவன், மருத்துவரணி மாநிலத் துணைச் செயலாளர், தி.மு.க
“நீட் தேர்வு, சமூக நீதிக்கு எதிரானது. இதைத்தான் அன்று முதல் இன்றுவரை நாங்கள் சொல்லிக்கொண்டேயிருக்கிறோம். வினாத்தாள் கசிவு, குறிப்பிட்ட சில தேர்வு மையத்திலிருந்து மட்டும் அதிக மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது, கருணை மதிப்பெண் என்று சொல்வது உட்பட நீட் தேர்வு தொடர்பாகச் சமீபத்தில் வெளியாகிவரும் செய்திகள் பல குழப்பங்களையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றன. ஒரு முறை தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக இருந்ததால், கருணை மதிப்பெண் கோரப்பட்டது. ஆனால், அப்போது தேசிய தேர்வாணையம் ‘இவ்வாறு மதிப்பெண் அளித்தால் தரவரிசைப் பட்டியலில் குழப்பம் ஏற்படும்’ என்று சொல்லி, தமிழ் மாணவர்களின் கனவைச் சிதைத்தது. ஆனால், இப்போது கருணை மதிப்பெண் வழங்குகிறது. இதன் மூலம், நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. தி.மு.க ஆட்சி அமைத்த நாள் முதலாக சட்ட மசோதா நிறைவேற்றி, தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப் போராட்டம் நடத்திவருகிறது. `தமிழகத்துக்கு நீட் தேர்வு வேண்டவே வேண்டாம்’ என்ற கொள்கையில் நாங்கள் எப்போதும் உறுதியாக நிற்கிறோம். இதை இப்போது மற்ற மாநிலங்களும் உணர ஆரம்பித்துவிட்டன. பா.ஜ.க அங்கம் வகிக்கும் மகாராஷ்டிரா அரசே நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்திருப்பதன் மூலம் இது தெரியவருகிறது. இனி மற்ற மாநிலங்களிலும் நீட்டுக்கு எதிரான குரல்கள் வலுவாக எழும். எங்கள் கழகத் தலைவர் சொன்னதுபோல், நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை. அவை கூட்டாட்சியியலைச் சிறுமைப்படுத்துபவை. சமூக நீதிக்கு எதிரானவை. நீட் தேர்வை ஒழித்துக்கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.”நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க
“மகாராஷ்டிர அமைச்சர் சொன்ன கருத்து ஏற்புடையதல்ல. அதற்கு தேசிய தேர்வு முகமை விரிவான விளக்கம் கொடுத்திருக்கிறது. அதேபோல தமிழகத்தில் தி.மு.க அரசு, ‘மாநில மொழியில் தேர்வு வினாத்தாள் இல்லை. அதனால் அரசு, கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெற முடியவில்லை. தனியார் பயிற்சி மையங்கள் அதிக கட்டணம் வசூல் செய்கின்றன, இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படுகிறது’ என்று இல்லாத எத்தனையோ காரணங்களைச் சொல்லிக்கொண்டிருந்தது. இவர்கள் சொன்னது பொய்யான குற்றச்சாட்டுகள் என்பதால், நீட் தேர்வைத் தொடர அனுமதியளித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம். இப்போது சொல்வதற்கு எதுவும் இல்லாததால், வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், தேர்வில் முறைகேடு என்று மீண்டும் பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தேர்வில் முறைகேடு நடந்ததற்கு எந்தவோர் ஆதாரமும் இல்லை. ‘தாங்கள் பாதிக்கப்பட்டதாக’ சம்பந்தப்பட்ட மையங்களில் தேர்வெழுதிய எந்த மாணவரும் இதுவரை புகார் சொல்லவில்லை. தேசிய தேர்வு மையம் ‘வினாத்தாள் கசியவில்லை’ என்று ஆதாரபூர்வமாக விளக்கம் சொல்லியிருக்கிறது. கருணை மதிப்பெண், நீதிமன்ற வழிகாட்டுதல்படியே வழங்கப்பட்டிருப்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். இருந்தபோதிலும், மகாராஷ்டிர அமைச்சர் இப்படிக் குற்றச்சாட்டை வைப்பது ஏற்புடையதல்ல. நீட் தேர்வு என்பது ஏழை மாணவர்களுக்கு மிகவும் பயனுடையது என்பதே உண்மை. நீட் தேர்வு எதிர்ப்பு என்று சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது தி.மு.க!”
http://dlvr.it/T88vsN
Wednesday, 12 June 2024
Home »
» ஒன் பை டூ: `நீட் தேர்வு உடனடியாக ரத்துசெய்யப்பட வேண்டும்' என்ற மகாராஷ்டிர அமைச்சரின் கருத்து?