நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு தொகுதி துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் இன்று காலை வல்லபாய் சாலை பகுதியில் வாக்கிங் சென்றபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக, மதுரை தல்லாகுளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.பாலசுப்பிரமணியன் - நாம் தமிழர் கட்சி
இந்த நிலையில், தனது கட்சி நிர்வாகியின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான், இது தமிழ்நாடா, உத்தரப்பிரதேசமா என கேள்வியெழுப்பியிருக்கிறார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் சீமான், ``நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணைச்செயலாளர் பாலசுப்பிரமணியன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தேன். ஈவிரக்கமற்ற இக்கொடுஞ்செயலை நிகழ்த்திட்டவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஈடுசெய்ய முடியாதப் பேரிழப்பைச் சந்தித்திருக்கும் தம்பியின் குடும்பத்தாரை எவ்வாறு ஆற்றுப்படுத்துவதென்று தெரியாது கலங்கி நிற்கிறேன். இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது, மனது கனக்கிறது.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு பாலசுப்ரமணியனின் படுகொலையும் ஒரு கொடும் சாட்சியாகும். எவரையும் கூலிப்படையினரைக் கொண்டு எளிதாக வெட்டிச் சாய்த்து விடலாமென்றால், எங்கு இருக்கிறது சட்டம் ஒழுங்கு... என்ன செய்கிறது காவல்துறையும், உளவுத்துறையும்... இதுதான் மாநிலத்தைக் கட்டிக் காக்கும் லட்சணமா... இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொடுக்கப் போகிறோம்... இறந்தவர்களின் உடலுக்குப் பூ போடுவதற்கா காவல்துறை.சீமான்
அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்குமே பாதுகாப்பு இல்லையென்றால், எளிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கப்போகிறது... இதென்ன தமிழ்நாடா, இல்லை உத்தரப்பிரதேசமா... எங்குப் பார்த்தாலும் வன்முறைத் தாக்குதல்கள், கொலைகள், சாதிய மோதல்கள், போதைப்பொருள்களின் புழக்கம், ரௌடிகளின் அட்டூழியம், கூலிப்படை கலாசாரம், கள்ளச்சாராய விற்பனை என தமிழ்நாட்டின் நிலை மிக மிக மோசமாக இருக்கிறது.
குற்றங்கள் நடந்தேறியப் பிறகு, கண்துடைப்பு நடவடிக்கைகளை எடுப்பதும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத்தொகை வழங்குவதுமா அரசின் வேலை? குற்றங்களே நிகழாத ஒரு சமூகத்தைப் படைத்து, சட்டத்தின் ஆட்சியை முழுமையாக நிலைநிறுத்துவதுதானே அரசின் தலையாயக் கடமையும், பொறுப்பும். அதனைச் செய்ய தவறிய அரசு, இருந்தாலென்ன? இல்லாவிட்டாலென்ன? ஏற்கனவே, கன்னியாகுமரியில் சேவியர்குமாரை இதேபோல ஒரு படுகொலையால் இழந்தேன். இப்போது பாலசுப்ரமணியனையும் இழந்து நிற்கிறேன்.சீமான் - ஸ்டாலின்
பாலசுப்ரமணியனைப் படுகொலை செய்திட்ட கொலையாளிகளையும், அதன் பின்புலத்தில் இருந்து இயக்கியவர்களையுமென மொத்தக் குற்றவாளிகளையும் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்பாகவே, விரைந்து கைதுசெய்ய வேண்டும். கைதுசெய்து, கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறினால், மாநிலம் முழுமைக்கும் போராட்டம் வெடிக்குமென எச்சரிக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளின் போதெல்லாம், அதிகாரிகள் மாற்றம்தான் திமுக அரசின் ஒற்றைத் தீர்வா?!
http://dlvr.it/T9g78G
Tuesday 16 July 2024
Home »
» `இதென்ன தமிழ்நாடா, இல்லை உத்தரப்பிரதேசமா?' - நா.த.க நிர்வாகி படுகொலையில் சீமான் கேள்வி!