
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, ஆக்கப்பூர்வ அணுசக்தி, பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் உறவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவும், அமெரிக்காவும் மேற்கொண்ட கூட்டு முயற்சிகளில் ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக ஒபாமா குறிப்பிட்டார்.
கடந்த 2015-ம் ஆண்டு குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தபோது தனக்களிக்கப்பட்ட வரவேற்பை நினைவுகூர்ந்து நெகிழ்ந்த ஒபாமா, இந்தியாவின் 68-வது குடியரசு தினத்துக்கான வாழ்த்தை முன்கூட்டியே தெரிவித்ததாகவும் வெள்ளை மாளிகை நேற்று வெளி யிட்ட அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இரு நாடுகளுக்கு இடையே அனைத்து மட்டங் களிலும் வளர்ச்சியோடு கூடிய ஒத்துழைப்பு திருப்திகரமாக அமைந்ததாகக் கூறி பதிலுக்கு பிரதமர் மோடி நன்றி கூறியதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் மோடி பிரதமரானபோது முதலில் வாழ்த்து கூறிய சர்வதேச தலைவர்களில் ஒபாமாவும் ஒருவர். அதன் பிறகு, இதுவரை இல்லாத வகையில் இரு தலைவர்களும் 8 முறை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.