
கிராமத்தில் இந்தியா...:
குஜராத் மாநிலம் காந்திநகரில் தூய்மைப்பணியில் சிறந்து விளங்கிய பெண் பஞ்சாயத்து தலைவர்களுக்கு பிரதமர் மோடி பரிசு வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: அரசியல் சுதந்திரத்தை விட, நாட்டில் தூய்மை நிலவ வேண்டும் என மகாத்மா காந்தி வலியுறுத்தினார். இதன் மூலம் தூய்மைக்காக அவர் உறுதிபூண்டதை நாம் பார்க்கலாம். வரும் 2019 ல் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை நாம் கொண்டாடுகிறோம். இந்தியா எப்போதும் கிராமத்தில் தான் வாழ்கிறது என காந்தி கூறியுள்ளார்.
நேர்மறையான மாற்றம்:
இன்று விருது வாங்கி பெருமைப்பட்டுள்ள பெண்கள் பல தடைகளையும், மூட நம்பிக்கைகளையும் தகர்த்து எறிந்தவர்கள். அவர்கள் கிராமப்புற இந்தியாவில் நேர்மறையான மாற்றம் ஏற்படுவதற்கான வழி காட்டியுள்ளனர். பெண் சிசுக்கொலையை இனி அனுமதிக்க முடியாது. இதனை முடிவுக்கு கொண்டு வர பெண் பஞ்சாயத்து தலைவர்கள் முன்னின்று பணியாற்ற வேண்டும். கல்வி பெறுவதில், ஆண்கள், பெண்கள் சம வாய்ப்பு பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.