"பசியோடுள்ள ஒருவன், பசியோடுள்ள ஒருத்தியுடன் சேர்ந்தால்... உலகத்திலே ஒரு பிச்சைக்காரன் பிறக்கிறான்" - இது, துருக்கி நாட்டுப் பொன்மொழி. ஆம், உண்மைதான். பசி ஒன்றுதான் பல பேரைப் பிச்சைக்காரர்களாக்கிக் கொண்டிருக்கிறது. இவர்கள் எல்லா நாடுகளிலும் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பிச்சைக்காரர்கள் தேனி மாவட்டத்திலும் அதிகம். இவர்களை மாற்றி... அவர்களுக்குப் புதிய களம் அமைத்துக்கொடுத்திருக்கிறது இந்த மாவட்டம்.
தேனியில் பழைய பேருந்து நிலையம், புது பேருந்து நிலையம் ஆகிய இரண்டிலும் பிச்சைக்காரர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்துவந்தது. இதுதவிர, மற்ற இடங்களையும் அவர்கள் ஆக்கிரமித்திருந்தனர். இங்குள்ள தேக்கடி, குமுளி போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் இவர்கள் பிச்சை எடுத்துவந்தனர். இது, தேனியில் வாழும் மற்ற மக்களைத் தலைகுனிய வைத்தது. இதைக் கண்ட அந்த மக்கள், ‘‘நம் மாவட்டத்தில், பிச்சைக்காரர்களே இருக்கக் கூடாது’’ என்று எண்ணினர்.
இதற்காக அவர்கள், மனிதநேய காப்பகம், மனதுருக்கம், இமேஜ் ஆகிய தனியார் அமைப்புகள் மூலம் தேனி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து... தங்களது கோரிக்கையை வைத்தனர். அவர்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தேனி மாவட்ட ஆட்சியர், உடனே அதை நடைமுறைப்படுத்தினார். இதற்காக, போலீஸாரின் துணையுடன் களமிறங்கியது ஒரு டீம். இவர்களைக் கண்டதும் பல பிச்சைக்காரர்கள் தெறித்து ஓடினர். அதில் சிலர் எதிர்த்துப் பேசி முரண்பிடித்தனர். ஆனாலும், அவர்களை விடவில்லை. இதனால் இதுவரை சுமார் 200-க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் அவர்களிடம் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இப்படி அடைக்கலமாகும் அவர்களுக்கு முடி வெட்டி, ஷேவ் செய்து, நல்ல துணிமணிகள் கொடுத்து, ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என்று சொல்லும் அளவுக்கு அவர்களை மாற்றிவிடுகின்றனர். அதன்பிறகு, அவர்களுக்கு யாராவது உறவினர்கள் இருக்கிறார்களா எனக் கேட்டு அவர்களிடம் ஒப்படைக்கிறார்கள். அப்படி இல்லாதவர்களை, தங்கள் காப்பகத்திலேயே வைத்துப் பாதுகாத்து வருகின்றனர். ‘‘அவர்களில் சிலர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். ஒவ்வொருவரும் தாங்கள் யார் என்றே தெரியாத நிலையிலேயே இருக்கிறார்கள். இந்தப் பிச்சை எடுத்த பெண்மணிகளில் வயது முதிர்ந்தவர்களும் உண்டு. அவர்கள் அனைவரும் அவர்களுடைய மருமகள்களால் துரத்திவிடப்பட்டவர்கள்’’ என்றனர் காப்பக ஊழியர்கள்.
இதுகுறித்து மனிதநேய காப்பகத்தின் நிறுவனர் பால்பாண்டி, “எங்கள் காப்பகத்தில் இருந்த கார்த்திகா என்ற பெண், தற்போது ரஷ்யாவில் மருத்துவம் படித்து வருகிறார். அவர், பிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோதுதான் எங்கள் காப்பகத்தில் சேர்ந்தார். அவருடைய ஆசை, யாரும் பிச்சை எடுக்கக் கூடாது என்பதுதான். அதனடிப்படையில்தான் இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறோம். இவர்கள் பலர், மது குடிப்பதற்காகத்தான் பிச்சை எடுக்கிறார்கள். அவர்களுக்கு முறையான கவுன்சிலிங் கொடுத்து நடைமுறை வாழ்க்கைக்கு மாற்றியிருக்கிறோம். இந்த மாவட்டத்தில் இதன் பணி முக்கால்வாசி முடிந்துவிட்டது. இதில் 40 சதவிகிதம் பேர் தன்னார்வலர்களாகப் பணிபுரிகின்றனர். NULM (National Urban Livelihood Mission), எல்லா மாவட்டங்களிலும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இதற்காக அரசுத் தரப்பிலிருந்து ஒரு திட்டத்தை அமல்படுத்தினால் தமிழ்நாடு முழுதும் பிச்சைக்காரர்களே இல்லாத மாநிலமாக உருவாக்கலாம்’’ என்றார்.
மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம், "பிச்சைக்காரர்கள் இல்லாத நிலை உருவாக வேண்டும்’ என்று பொதுமக்களும் சில அமைப்புகளும் முன்னெடுத்து அதற்காகப் பணியாற்றி வருவது என்பது மிகவும் சிறப்பானது. இதற்காகக் கடுமையாக உழைக்கும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு துறையின் பங்கு மகத்தானது. இந்த மாவட்டத்தில், பிச்சைக்காரர்கள் இருக்கிறார்களா என்று தொடர்ந்து கண்காணிக்கப்படும். அப்படி இருப்பவர்களைப் பார்ப்பவர்கள், உடனடியாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்துக்குத் தகவல் தெரிவிக்கவும்" என்றார்.
"தேனியை, பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக்க மக்கள் எடுத்திருக்கும் நடவடிக்கை பாராட்டக்கூடியது. சில பிச்சைக்காரர்களை, அவர்களுடைய உறவினரிடம் சேர்த்துள்ளோம். தேனி மக்களுக்கு எந்தவித உதவியாய் இருந்தாலும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்ட காவல் துறை செய்யும்" என்றார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு துறை அதிகாரி ஜெயசீலி, ``இந்த முயற்சி ஒன்றுதான் எங்கள் நோக்கம். இதற்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. விரைவில் தேனி மாவட்டம் பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக உருவெடுக்கும்’’ என்றார், நம்பிக்கையுடன்.
இன்னும் பத்து நாட்கள் கழித்துப் பார்த்தால்... இந்த மாவட்டத்தில் ஒரு பிச்சைக்காரர்களைக்கூடப் பார்க்க முடியாத நிலை நிச்சயம் உருவாகும் என்பது தேனி மாவட்டத்தின் தற்போதைய சூழலைப் பார்க்கும்போதே தெரிகிறது.
பிச்சைக்காரர்களே இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பு.