மும்பை: இந்திய கிரிக்கெட்டில் புதிய அத்தியாயம் ஆரம்பமாகிறது. ஒருநாள் மற்றும் 'டுவென்டி-20' தொடருக்கான கேப்டனாக விராத் கோஹ்லி நியமிக்கப்பட்டார். யுவராஜ் சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டது.
இந்தியா வரவுள்ள இங்கிலாந்து அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது.முதல் ஒருநாள் போட்டி வரும் 15ம் தேதி, புனேயில் நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணித் தேர்வு இன்று நடந்தது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சீர்திருத்தம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக, அணியை தேர்வு செய்வதில் பெரும் குழப்பம் காணப்பட்டது. வரும் ஜன. 19 வரை பி.சி.சி,ஐ., தலைவர், செயலருக்கு உள்ள அதிகாரம், தலைமை அதிகாரி ராகுல் ஜோரிக்கு தரப்பட்டுள்ளது. இவர் தலைமையில் மதியம் 12:30 மணிக்கு தேர்வுக்குழு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பதவி விலகிய பி.சி.சி.ஐ., 'சீனியர்' நிர்வாகிகள், இந்த தேர்வுக்குழு கூட்டம் அங்கீகாரம் இல்லாதது என, கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது. இதனால், அணித் தேர்வு தாமதம் ஆனது.
பின் ஒருவழியாக, ராகுல் ஜோரி தலைமையில் தேர்வுக்குழு கூட்டம் மாலை 3:00 மணிக்கு துவங்கியது. முடிவில், தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் அணியை அறிவித்தார். எதிர்பார்த்தபடியே டெஸ்ட் அணியை தொடர்ந்து ஒருநாள், 'டுவென்டி-20' அணிகளுக்கு கேப்டனாக கோஹ்லி நியமிக்கப்பட்டார். மிக நீண்ட காலமாக அணியை வழிநடத்திய தோனி, இம்முறை விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேனாக இடம் பெற்றார். 'சீனியர்' வீரர் யுவராஜ் சிங், மூன்று ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒருநாள் அணியில் இடம் பிடித்தார்.
ஒருநாள் போட்டிக்கான அணி:
கோஹ்லி (கேப்டன்), லோகேஷ் ராகுல், தவான், தோனி (விக்கெட் கீப்பர்), மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், யுவராஜ் சிங், ரகானே, ஹர்திக் பாண்ட்யா, அஷ்வின், ஜடேஜா, அமித் மிஸ்ரா, பும்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்.
'டுவென்டி-20' அணி:
கோஹ்லி (கேப்டன்), லோகேஷ் ராகுல், மன்தீப் சிங், தோனி (விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன்), யுவராஜ் சிங், ரெய்னா, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, அஷ்வின், ஜடேஜா, சாகல், மணிஷ் பாண்டே, பும்ரா, புவனேஷ்வர் குமார், நெஹ்ரா.
English summary:
Mumbai: The Indian cricket begins a new chapter. One day, and 'T20' Virat Kohli was appointed as captain for the series. Yuvraj Singh was given the opportunity again.