சென்னை: மார்ச் 1 முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா, விழுப்புரத்தில் இன்று மதியம் நிருபர்களிடம் பேசியபோது, பெப்சி, கோககோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனையை மார்ச் 1ம் தேதி முதல் நிறுத்த உள்ளோம். உள்நாட்டு குளிர்பானங்கள் விற்பனையை ஊக்குவிப்போம்.
முன்னதாக பிப்ரவரி மாதம் முதல், வெளிநாட்டு குளிர்பானங்கள் குறித்த விழிப்புணர்வை வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்படுத்துவோம் என்றார் அவர். பீட்டா என்ற அமெரிக்க அமைப்பு தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், வெளி நாட்டு குளிர்பானங்களை குடிக்க மாட்டோம் என ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் கோஷமாக முன் வைத்தனர்.
இதன் விளைவாக மீண்டும் சுதேசி பயணத்தை நோக்கி பயணிக்கிறது தமிழகம். பெப்சி, கோக் உள்ளிட்ட பன்னாட்டு குளிர்பானங்கள் வருகையால், சுமார் 10 வருடங்களுக்கு முன்பு வரை இருந்த பன்னீர் சோடா, கோலி குண்டு சோடா, லவ் - ஓ சோடா என்று பல விதமான சோடாக்கள் இப்போது வழக்கொழிந்து விட்டன. கோலி சோடாவை குடித்து முடிபதற்குள் அந்த கோலி எப்படி உள்ளே சென்றது என்று யோசிக்காதவர்களே இருக்க முடியாது. பன்னீர் சோடா குடித்துவிட்டு மவுத் பிரஷ்னர் இல்லாத அந்த காலத்தில், தாயிடம் சென்று ஊதிக்காட்டி நறுமணம் வருகிறதா என்று கேட்காத பிள்ளைகள் இருந்திருக்க மாட்டார்கள்.
சோடா மற்றும் குளிர்பான உற்பத்தி நிறுவனங்கள் ஆங்காங்குள்ள சிற்றூர்களில் குடிசை தொழில் போல செயல்பட்டது. அதை சைக்கிளில் எடுத்துச் சென்று கடைகளில் சப்ளை செய்து வந்தனர் வியாபாரிகள். இதனால் உள்ளூர் வளம் உள்ளூர் மக்களுக்கே கிடைத்து வந்தது. கறுப்பு கலர், ஆரஞ்சு கலர் என்றெல்லாம் கூல்ட்ரிங்ஸ் என்ற பெயர் பரிட்சையமாகும் முன்பு ஊர்களில் அழைக்கப்பட்டு வந்தவைதான் சுதேசி குளிர்பானங்கள்.
இதில் இரு நிறுவனங்கள் நல்ல பெயர் பெற்றவை. இதில் இரு நிறுவனங்கள் தமிழகமெங்கும் கிளை பரப்பியதால் கோக், பெப்சி ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளே வந்தும் கூட ஓரளவுக்கு தாக்குப்பிடிக்க முடிந்தது. வெளிநாட்டுக் குளிர்பானங்கள் இந்தியாவுக்குள்ள வந்தபோது, அந்தந்த மாநிலங்களில் இருந்த குளிர்பான நிறுவனங்களை, ஃபார்முலா காப்பி ரைட்டோடு மொத்தமாக வாங்கி விட்டார்கள். குறிப்பாக அதிகம் விற்பனையாகிக் கொண்டிருந்த பல நிறுவனங்கள் அவர்கள் குறியாக இருந்தன. இப்படி வாங்கிவிட்டு பின்னர் அவற்றின் உற்பத்தியை நிறுத்திவிட்டு, வெளிநாட்டுக் குளிர்பானங்களையே சந்தைக்குள் குவித்தார்கள்.
வெளிநாட்டுக் குளிர்பான நிறுவனங்கள் கடைக்காரர்களுக்குக் அதிகபட்ச கமிஷன் கொடுத்தன். எம்ஆர்பி விலையில் பாதிக்கே அவர்களால் கடைக்காரர்களுக்கு கொடுக்க முடிந்தது. எனவே, கடைக்காரர்களும் இயல்பாகவே லாபத்திற்கு ஆசைப்பட்டு வெளிநாட்டு குளிர்பானங்களை வாங்கினர். நடிகர், நடிகைகள், கிரிக்கெட் ஸ்டார்கள் மூலம் மக்கள் மத்தியில் வெளிநாட்டு குளிர்பானத்தின் மீதான மதிப்பை அவை ஏற்றிக்கொண்டன. இதனால் சரிவடைந்த உள்ளூர் குளிர்பான விற்பனை வணிகர் சங்கத்தின் அதிரடி முடிவால் கூடுமா மார்ச் மாதம் பார்த்துவிடலாம்.