
புயல் பாதித்த பகுதிகளில் தமிழக மின்சார வாரியம் உடனடியாக காரியத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஊழியர்களுக்கு பாராட்டு:
டிசம்பர் 12 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைத் தாக்கிய வார்தா புயலின் காரணமாக ஏராளமான பாதிப்புகளும் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, மின்சார விநியோகம் இதுவரை கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரத் துறை ஊழியர்களும் நிர்வாகமும் இதுவரையிலும் மிகக் கடுமையாக, அர்ப்பணிப்புணர்வுடன் செயல்பட்டுவருகிறார்கள் என்பது பாராட்டத்தக்கது.
10,000 மின்கம்பங்கள்:
ஆனால், மின் விநியோக பாதிப்புகள் குறித்து தமிழக மின் துறை அமைச்சர் ஊடகங்கள் மூலமாக வெளியிட்டுள்ள செய்திகள், பாதிப்பின் அளவை உணராததாகவும், உண்மைக்குப் புறம்பானதாகவும் உள்ளன. மின் துறை அமைச்சர் 3 ஆயிரம் மின் கம்பங்கள் மட்டுமே பழுதாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் முற்றிலுமாக பாதிப்படைந்த கம்பங்களின் எண்ணிக்கை சுமார் 10 ஆயிரம் இருக்கும். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்தோ, கீழே விழுந்தோ கிடக்கின்றன.
மின்சாரம் பாதிப்பு :
பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததன் காரணமாக, மின் கம்பிகள் அறுந்துகிடக்கின்றன. இதே போன்று வீடுகளுக்கான இணைப்பு மின் கம்பிகளும் பாதிப்படைந்துள்ளன. இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டுமெனில் சென்னையில் உள்ள ஊழியர்கள் மட்டுமோ, மின்துறை அமைச்சர் கூறியிருக்கும், தற்போது வந்துள்ள 2 ஆயிரம் பேர், வரவழைக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஆயிரம் பேர் ஆகியோரால் மட்டுமோ சரி செய்துவிட முடியாது. ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் அளவை வைத்து பார்க்கும்போது இந்த 3 மாவட்டங்களில் உள்ள 350க்கும் மேற்பட்ட பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்சம் 50 ஊழியர்களாவது கூடுதலாகப் பணி புரிந்தால் மட்டுமே ஒரு வார காலத்திற்குள்ளாவது, ஓரளவாவது இயல்பு நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளது.
உடனடி நடவடிக்கை தேவை:
ஊழியர்கள் மட்டுமின்றி, போதுமான அளவிற்கு மேற்பார்வைப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளையும் பிற மாவட்டங்களில் இருந்து உரிய எண்ணிக்கையில் உடனடியாக அழைத்து வரவும், இப்பணிகளில் ஈடுபடுத்தவும் தமிழக மின்சார வாரியம் உடனடியாக காரியத்தில் இறங்கவேண்டுமென, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக மின்சார வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறது.
மேலும், இந்த ஊழியர்களை முழுமையாக ஈடுபடுத்தத் தேவையான அளவில் உபகரணங்களையும், தளவாட சாமான்களையும் குறைவின்றி, உடனடியாக வழங்குவதுடன், கடந்தகால அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு வெளிமாவட்டங்களில் இருந்து வரும் ஊழியர்களுக்கு உணவு, தங்குமிடம், தற்காலிக கழிவறைகள், பாதுகாப்பு சாதனங்கள் ஏற்பாடு செய்திடவும் வேண்டுமென மின்சார வாரியத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கையில் கூறியுள்ளார்.
English Summary:
CPI (M) state secretary G. Ramakrishnan urges state government to Regulated power supply for cyclone affected districts inculding chennai.