சென்னை, 2016 - 2017-ம் ஆண்டு நிதியாண்டில், 4 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2376 கோடி பயிர்க்கடன் வழங்கி தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. மேலும் நவ. 23 முதல் டிச. 2 வரை வரை, 40,892 விவசாயிகளுக்கு ரூ.148.22 கோடி பயிர்க்கடன் ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
இந்திய ரிசர்வ் வங்கி, புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள், 9.11.2016 முதல் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, செல்லத்தக்கவை அல்ல என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை, 30.12.2016 வரை வங்கிக் கணக்குகளில் செலுத்தும் முறை பற்றியும் மேலும் அவற்றை மாற்றிக் கொள்வது குறித்தும் உரிய வழிகாட்டுதல்களை அறிவித்தது.
பழைய நோட்டுகளை பெற இயலாத நிலை
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன்படி, வங்கிகள் என பட்டியலிடப்பட்ட நிறுவனங்களும் மற்றும் அதில் குறிப்பாக சொல்லப்பட்ட நிறுவனங்களும், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இத்திட்டத்தை செயல்படுத்தும் என்று இந்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை 9.11.2016 அன்று அறிவிப்பு வெளியிட்டது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், வங்கி என்ற வரன்முறைக்குள் வரவில்லை. இதனால் செல்லத்தக்கதல்ல என அறிவிக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் விவசாயிகளிடமிருந்து பெற இயலாத நிலை ஏற்பட்டது.
கடன் வழங்க முடியாத நிலை
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் கணக்கு வைத்திருப்பதால் இச்சங்கங்கள் வாடிக்கையாளராகவே கருதப்படுகின்றன. இதன் காரணமாக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களும் ஒரு வாரத்திற்கு 24,000 ரூபாய் மட்டுமே ரொக்கமாக பெற இயலும் நிலை ஏற்பட்டது. எனவே, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க இயலாத நிலை ஏற்பட்டு, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டது.
மாற்றம் செய்யவும் தடை
9.11.2016 முதல் செல்லத்தக்கதல்ல என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள், தங்களது வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்று வந்த நிலையில், 14.11.2016 அன்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின் மூலம், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில், செல்லத்தக்கதல்ல என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்று அவர்களது கணக்கிற்கு வரவு வைக்க இயலவில்லை. மேலும், செல்லத்தக்கதல்ல என அறிவிக்கப்பட்ட நோட்டுகளை மத்தியக் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக மாற்றம் செய்வதும் தடை செய்யப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளினால், தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் 30.12.2016 வரை செல்லத்தக்கதல்ல என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை அவர்களது கணக்குகளில் செலுத்த அனுமதியிருந்தும், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களும் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும், இந்த ரூபாய் நோட்டுகளைச் செலுத்த இயலவில்லை.
பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை
விவசாயிகளுக்கு தொடர்ந்து தடையின்றி பயிர்கடன் வழங்க ஏதுவாக அரசாணை எண். 132, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, நாள்.22.11.2016-ன் படி 22.11.2016 முதல் கீழ்க்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆணையிடப்பட்டு, நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
1.தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் தற்போதுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி விவசாய உறுப்பினர்களுக்குத் தொடர்ந்து பயிர்க்கடன்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
2.விவசாயிகளுக்கு விவசாயக் கடனின் ரொக்கப் பகுதியினை வழங்க ஏதுவாக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் இணைக்கப்பட்டுள்ள மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளையில் பயிர்க்கடன் பெறும் விவசாய உறுப்பினர்களின் பெயரில் “உங்கள் வாடிக்கையாளரை அறிதல்” விதிமுறைகளைக் கடைபிடித்து கணக்குகள், பயிர்க் கடன் பெறும் ஒவ்வொரு கடன்தாரருக்கும் கட்டணம் ஏதும் வசூலிக்காமல், துவக்கப்பட்டு வருகிறது.
3.இப்பணி தொடர்பாக ஏற்படும் பணிப்பளுவினைச் சமாளிக்க ஏதுவாக மத்தியக் கூட்டுறவு வங்கிகள் ஓய்வு பெற்ற பணியாளர்களை தற்காலிகமாக ஈடுபடுத்தி வருகின்றனர்.
4.தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க்கடன் அனுமதிக்கப்பட்ட உடன் கடன் தொகையின் ரொக்கப் பகுதியை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளைகளில் துவக்கப்பட்டுள்ள விவசாய உறுப்பினர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க ஏதுவாக தொடர்புடைய மத்திய கூட்டுறவு வங்கிக்கு பற்றுச் சீட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்டு விவசாயிகள் தொடர்புடைய மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையில் விவசாய உறுப்பினர் கணக்கில் வரவு வைக்கப்பட்ட கடன் தொகையில், விவசாயி ஒரு வாரத்திற்கு 25,000 ரூபாய் ரொக்கமாக வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை பெற்று வருகின்றனர்.
5.விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்களான உரம், விதைகள் ஆகியவைக்கான தொகையை ரொக்கமாக செலுத்த வலியுறுத்தாமல், அவர்களுக்கு பயிர்க் கடன் வழங்கும்போது அக்கணக்கில் பற்று வைத்து, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் வழங்கி வருகின்றன. அதாவது, ரொக்கமாகப் பணம் செலுத்தாமலேயே விவசாயிகள் இடுபொருட்களைப் பெற இயலும்.
6.பயிர்க்காப்பீட்டுத் தொகையினை விவசாயிகளின் பயிர்க்கடன் கணக்கில் பற்று வைத்து, தொடர்புடைய காப்பீடு நிறுவனத்திற்கு மத்தியக் கூட்டுறவு வங்கிகள் 5.12.2016 க்கு முன்னர் செலுத்தும்.
7.தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க் கடன் பெறாத விவசாயிகள், வரைவோலை அல்லது ரொக்கமாக செலுத்தி தங்களுக்குத் தேவையான உரம், இடுபொருட்கள் மற்றும் விவசாயப் பணிகளுக்குத் தேவையான வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பயிர்க்கடன் வழங்கி அரசு சாதனை
2015-16ம் நிதியாண்டில் 30.11.2015 வரை 7,42,629 விவசாயிகளுக்கு ரூ.4061.14 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. 2016-17ம் ஆண்டில், 30.11.2016 வரை 4,07,387 விவசாயிகளுக்கு ரூ.2376.83 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. 23.11.2016 முதல் 02.12.2016 வரை மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளில் 76,440 விவசாய உறுப்பினர்களுக்கு கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது. இதில் 40,892 விவசாயிகளுக்கு ரூ.148.22 கோடி பயிர்க்கடன் ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது. 32,430 விவசாயிகளுக்கு ரூ.23.99 கோடி அளவிற்கு ரொக்கமாகப் பணம் செலுத்தாமலேயே விவசாயிகள் இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 19,250 விவசாயிகளுக்கு ரூ.1.78 கோடி பயிர்க்காப்பீட்டுத் தொகையினை விவசாயிகளின் பயிர்க்கடன் கணக்கில் பற்று வைத்து தொடர்புடைய காப்பீடு நிறுவனத்திற்கு 02.12.2016 வரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 23.11.2016 முதல் 02.12.2016 வரை கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெறாத 2,64,967 விவசாயிகளிடமிருந்து ரூ.18.6 கோடி பயிர்காப்பீட்டுத்தொகை வசூலிக்கப்பட்டு தொடர்புடைய காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
English Summary :2016 - 2017 fiscal year .2376 crore and Rs 4 lakh farmers a government record crop.2016 - 2017 fiscal year, and 4 million farmers Rs .2376 crore a government record crop. More Nov. Dec. 23. Up to 2, 40.892 cash crop farmers have been granted Rs .148.22 crore.RBI, 500 and 1000 banknotes in circulation, 9.11.2016, announced that the first legally invalid. Following this, declared null and void banknotes, up to 30.12.2016 in the accounts of the payment system, and announced them to change the relevant guidelines.