அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கடந்த 1948ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதியன்று கர்நாடகத்தில் உள்ள மெலுகோடேவில் பிறந்தார்.
இது மாண்டியா மாவட்டத்தில் உள்ளது. இவரது தாயார் சந்தியா. தந்தை ஜெயராமன். இவரது சகோதரர் ஜெயக்குமார். முதல்வர் ஜெயலலிதா சென்னை சர்ச் பார்க் கான்வென்ட்டில் படித்தவர். அற்புதமான ஆங்கில அறிவை பெற்றவர். 8 மொழிகளில் பேசக்கூடியவர்.
தாயார் சந்தியாவைப்போல, இவரும் கலையுலகில் கொடி கட்டி பறந்தார். இவரது முதல் படம் ஷ்ரீதரின் வெண்ணிற ஆடை. முதல் படத்திலேயே அற்புதமாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் வெற்றிக் கொடி நாட்டிய படமாகும். அடுத்தடுத்து முகராசி, அரசக்கட்டளை, தேர் திருவிழா, கணவன், மாட்டுக்கார வேலன், பட்டி காட்டு பொன்னையா உள்பட எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.
அதேப்போல் நடிகர் திலகர் சிவாஜி கணேசனுடனும் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக எங்கிருந்தோ வந்தாள், சுமதி என் சுந்தரி, சவாலே சமாளி போன்ற படங்கள் இவரது புகழை உச்சிக்கு கொண்டு சென்றன.
நன்கு பாடும் திறமைப்பெற்றவர் முதல்வர் ஜெயலலிதா . அடிமைப் பெண் படத்தில் இவர் பாடிய அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு என்ற பாடல் அனைவரையும் கவர்ந்த ஒரு பாடலாகும். சூரிய காந்தி படத்தில் ஓ மேரி தில் ரூபா என்ற பாடலையும், அதே படத்தில் நான் என்றால் அவளும் நானும் என்ற பாடலையும் ஆங்கிலத்தில் பேசி பாடியிருப்பார். இப்படி கலையுலகில் கொடி கட்டிப்பறந்த ஜெயலலிதா அரசியலிலும் பின்னாளில் கொடி கட்டி பறந்தார்.
1982ம் ஆண்டு இவர் எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.கவில் தன்னை இணைத்து க்கொண்டார். மதுரையில் நடந்த அ.தி.மு.க மாநாட்டில் எம்.ஜி.,ஆருக்கு செங்கோல் பரிசினை ஜெயலலிதா அளித்தார். இவருக்கு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியை அளித்தார். பிறகு, ஜெயலலிதா ராஜ்ய சபை எம்.பி. ஆனார். ராஜ்யசபையில் அண்ணா இருந்த இருக்கை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டது.
பாராளுமன்றத்தில் கொள்கை முழக்கங்களை எழுப்பினார். எம்.ஜி.ஆர் உடல் நலமற்று இருந்த போது தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து, மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வர வழி வகுத்தார். 1991-ம் ஆண்டு ஜெயலலிதா தமிழக முதல்வராக முதன் முறையாக பதவியேற்றார். பின்னர் அவர் மீண்டும் 2001ல் ஆட்சியை பிடித்து முதல்வராக ஆனார். இப்படி தமிழகத்தில் 6 முறை முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. தனது ஆட்சி காலத்தில் இவர் கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம்.
தொட்டில் குழந்தை திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், யானைகள் நல வாழ்வு முகாம், அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், என்று இவர் கொண்டு வந்த திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு பெரிதும் பலனளித்தது. அதன் பிறகு தாலிக்கு தங்கம், இலவச சைக்கிள், இலவச மடிக்கணினி போன்ற திட்டங்களை கொண்டு வந்த ஜெயலலிதா மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பின்னர், இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினார். 2016ம்ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவுடன் சில முத்தான திட்டங்களில் கையெழுத்திட்டார். 100 யூனிட் இலவச மின்சாரத்தை தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி மக்களுக்கு அளித்தார்.
மேலும், பல நல்ல திட்டங்களை அவர் தொடர்ந்து அமல் படுத்தினார். சமீபத்தில் கூட விவசாயிகளுக்கு ரொக்கப்பயிர் கடன் வழங்க ஏற்பாடு செய்தார். அதன் படி 2016-17-ம் நிதியாண்டில் 4லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2376 கோடி பயிர் கடன் வழங்கி இவரது அரசு சாதனை படைத்தது. இப்படி ஏராளமான திட்டங்களை மக்களுக்காக அளித்தவர் முதல்வர் ஜெயலலிதா. காவிரி பிரச்சினை, பெரியாறு அணை பிரச்சினைகளில் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர் முதல்வர். மக்களால் நான். மக்களுக்காகவேநான். என்ற தாரக மந்திரத்தை எப்போதும் உச்சரித்தவர் முதல்வர் ஜெயலலிதா. மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் முதல்வர் ஜெயலலிதா என்றால் அது மிகையாகாது.
''அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே''
என்ற பாரதியார் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் தான் ஜெயலலிதா. அசாத்திய துணிச்சலுடன் சினிமா, அரசியல் என பல துறைகளிலும் தடம் பதித்தார். காலத்தை வென்று காவியம் படைத்த இவர், தமிழக வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்தார். தமிழக முதல்வராக ஆறு முறை பதவி வகித்தவர்; இந்தியாவின் நீண்டகாலம் பதவி வகித்த பெண் முதல்வர்களில் 2வது நபர்;
29 ஆண்டுகளாக அ.தி.மு.க., வின் பொதுச்செயலர்; தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர், சினிமாவிலும் வெற்றிக்கொடி நாட்டியவர்;
ஏழு மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர்;
திருமணமாகாத பெண் தலைவர்;
தைரியமான பெண்மணி;
'அம்மா' என அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுபவர் என பல சாதனைகளை கொண்டிருந்தவர் முதல்வர் ஜெயலலிதா. கர்நாடகாவின் மைசூருவில், 1948 பிப்., 24ல் ஜெயலலிதா பிறந்தார். ஜெயலலிதா இரண்டு வயதிலேயே தன் தந்தை ஜெயராமை இழந்தார். பின் அவரின் அம்மா மற்றும் தாய்வழி தாத்தா--பாட்டி வாழ்ந்த பெங்களூருவுக்குச் சென்றார். இங்கு தங்கியிருந்த குறுகிய காலத்தில், சில ஆண்டுகள், 'பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில்' பயின்றார். ஜெயலலிதா, மூன்று வயதில் இருந்தே பரதநாட்டியத்திலும், கர்நாடக இசையிலும் பயிற்சி பெற்றார். மோகினி ஆட்டம், கதக், மணிபுரி ஆகிய பாரம்பரிய நாட்டியங்களிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர். பரத நாட்டியக் கலையில் நுாற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
வெள்ளித் திரையில் அவரது தாய்க்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால், சென்னை சென்றார். ஜெயலலிதா சென்னையிலுள்ள, 'சர்ச் பார்க் ப்ரேசென்டேஷன் கான்வென்ட்டில்' மெட்ரிக்குலேஷன் படிப்பை நிறைவு செய்தார். பள்ளி இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால், உயர்கல்வி படிக்க மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ஆனால் குடும்ப சூழல் காரணமாக சினிமாத் துறையில் நுழைய நேரிட்டது. 15 வயதிலேயே நடிக்கத் தொடங்கினார். அரசியல் அமர்க்களம் தமிழக முதல்வராக இருந்த, எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதல்படி, 1982ல் அ.தி.மு.க., வின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார். 1983ல் கொள்கை பரப்புச் செயலரானார். 1983ல் நடந்த திருச்செந்துார் இடைத்தேர்தலில், பிரசார பொறுப்பை ஏற்றார். முதல் பணியை வெற்றிகரமாக முடித்து, வேட்பாளரை வெற்றி பெற வைத்தார்.
இதையடுத்து, 1984ல் முதன்முறையாக ராஜ்யசபா எம்.பி., ஆனார். 1989ல் போடி சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று, கடந்த 1987ல் எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், ஜெ., அணி மற்றும் ஜானகி அணி என அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டது. இதன் விளைவாக, தேர்தல் கமிஷனால் 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டது. 1989ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அணி, 'சேவல்' சின்னத்தில் தனித்து போட்டியிட்டது.
27 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. போடி தொகுதியில் வெற்றி பெற்ற ஜெயலலிதா முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார். 1989 பிப்ரவரியில், அ.தி.மு.க., மீண்டும் ஒன்றிணைந்தது. ஜெயலலிதா பொதுச்செயலரானார். 'இரட்டை இலை' சின்னம் மீட்கப்பட்டது. தமிழக சட்டசபைக்கு நடந்த மருங்காபுரி, மதுரை கிழக்கு, பெரணமல்லுார் ஆகிய இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க.,வுக்கு வெற்றி தேடித் தந்தார்.
முதன்முறை முதல்வர்
1991ல் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், அ.தி.மு.க, கூட்டணி, 225 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஜெயலலிதா பர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து முதன்முறையாக தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்ட தமிழத்தின் முதல் பெண் முதல்வர், இளம் முதல்வர், 43, என்ற பெருமையை பெற்றார்.
அதே ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும்,
அ.தி.மு.க., கூட்டணியை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்து சாதனை படைத்தார். 1996 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி அடைந்தது. 168 இடங்களில் போட்டியிட்ட, அ.தி.மு.க., வெறும் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பின், 1998 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றியடைந்தது. இதற்கு ஜெயலலிதா பெரும் பங்கு வகித்தார். 2001ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, 234 தொகுதிகளில், 195 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. ஜெயலலிதா இரண்டாவது முறையாக முதல்வரானார். 2006 தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி 68இட ங்களை மட்டுமே கைப்பற்றியது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றார்.
3வது முறையாக முதல்வர்:
எதிர்க்கட்சியாக இருந்த போது, அப்போதைய தி.மு.க. ஆட்சியை எதிர்த்து தொடர் போராட்டம், ஆர்ப்பாட்டம், அறிக்கைகள் மூலம் ஜெயலலிதா கட்சியை வழி நடத்தினார். கோவை, திருச்சி, மதுரை ஆகிய பிரமாண்ட பொதுக்கூட்டங்களை நடத்தினார். இதன் பின், 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி 203 இடங்களை கைப்பற்றி சரித்திர வெற்றி பெற்றது. அ.தி.மு.க., மட்டும் தனியாக, 150 தொகுதிகளை கைப்பற்றியது. இதையடுத்து, 2011, மே 16ல் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார். இந்த ஆட்சிக் காலத்தில் நடந்த திருச்சி மேற்கு, சங்கரன்கோவில் மற்றும் புதுக்ேகாட்டை, ஏற்காடு, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. 2014 லோக்சபா தேர்தலில் தனியாக போட்டியிட்ட, 39 தொகுதிகளில், 37 இடங்களில் அ.தி.மு.க.,வை வெற்றி பெற வைத்தார். தடைகளை மீறி... கடந்த, 2014 செப்., 27ல் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு, கர்நாடக சிறப்புநீதிமன்றத்தால் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து முதல்வர் பதவியை இழந்தார். 22 நாட்களுக்குப் பின் ஜாமினில் வெளிவந்தார்.தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில்மேல்முறையீடு செய்தார். 2015 மே 11ல் கர்நாடக ஐகோர்ட் இவரை விடுதலை செய்து தீர்ப்புவழங்கியது. இதையடுத்து மே 23ல் முதல்வராக பதவியேற்றார். 2016 சட்டசபை தேர்தலில் 227 இடங்களில்அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டது.இதில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். எம்.ஜி.ஆர்., க்குப்பின் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக
பதவியேற்று சாதித்தார்.
கடந்து வந்த பாதை
1948: மைசூருவில் பிப்., 24ம் தேதி பிறந்தார்.
1961: 'எபிஸில்' என்ற ஆங்கில படம் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்.
1964: கன்னட படத்தில் அறிமுகம்
1965: வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் தமிழ் படங்களில் அறிமுகம்
1965: தெலுங்கு படத்தில் அறிமுகம்
1968: இந்தி படத்தில் அறிமுகம்
1982: எம்.ஜி.ஆர்., துவக்கிய அ.தி.மு.க., வில் உறுப்பினரானார்.
* 'பெண்ணின் பெருமை' என்ற தலைப்பில் முதன்முறையாக கட்சித் கூட்டத்தில் உரை.
1983: திருச்செந்துார் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து முதன்முறையாக
தேர்தல் பிரசாரம்.
1983: கொள்கை பரப்பு செயலராக எம்.ஜி.ஆரால் நியமனம்.
1984 - 89: ராஜ்யசபா எம்.பி.,
1984: சட்டசபை தேர்தலில் எம்.ஜி.ஆர்., வெளிநாட்டில் சிகிச்சை. ஜெ., வின் சூறாவளி சுற்றுப்
பயணத்தால் அ.தி.மு.க., வெற்றி.
1987: எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின் அ.தி.மு.க., இரண்டாக பிரிவு. இரட்டை இலை சின்னம் முடக்கம்.
1989: சட்டசபை தேர்தலில் வெற்றி. முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார்.
* அ.தி.மு.க., மீண்டும் ஒன்றானது. இரட்டை சிலை சின்னம் மீண்டும் ஒதுக்கீடு. ஜெ., பொதுச் செயலர் ஆனார்.
1991: முதல் முறையாக தமிழக முதல்வர். தேர்தல் மூலம் வெற்றி பெற்ற முதல் பெண் முதல்வர், இளம் முதல்வர் என்ற பெருமை பெற்றார்.
1991: லோக்சபா தேர்தலில் இவரது தலைமையிலான கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி.
1996: எதிர்க்கட்சி தலைவர்
2001: 2வது முறையாக தமிழக முதல்வர்.
2002 : 3வது முறையாக தமிழக முதல்வர்.
2006: எதிர்க்கட்சி தலைவர்
2011: 4வது முறையாக தமிழக முதல்வர்.
2014: செப்., : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை.
2015 மே: விடுதலை
2015 மே: 5வது முறையாக தமிழக முதல்வர்.
2016 : 6வது முறையாக தமிழக முதல்வர்.
6 முறை முதல்வர்
1) 1991 ஜூன் 24 முதல் 1996 மே 12 வரை
2) 2001 மே 14 முதல் செப்., 21 வரை
3) 2002 மார்ச் 2 முதல் 2006 மே 12 வரை
4) 2011 மே 16 முதல் 2014 செப்., 27 வரை
5) 2015 மே 23 முதல் - 2016 மே 22
6) 2016 மே 23 முதல் நேற்று வரை
எதிர்க்கட்சித்தலைவர்
1989 பிப்., 9 முதல் டிச., 12 வரை
2006 மே 29 முதல், 2011, மே 13 வரை
ராஜ்யசபா எம்.பி.,
1984 ஏப்., 3 முதல் 1989 ஜன., 28 வரை எம்.எல்.ஏ.,
1) 1989 ஜன., 27 முதல், 1991 ஜன., 30 வரை
2) 1991 ஜூன் 24 முதல், 1996 மே 12 வரை
3) 2002 மார்ச் 2 முதல், 2006 மே 11 வரை
4) 2006 மே 11 முதல், 2011 மே 13 வரை
5) 2011 மே 14 முதல், 2014 செப்., 27 வரை
6) 2015 ஜூன் 27 முதல், 2016 மே 18
7) 2016 மே, 19 முதல்
04.தேர்தல் களத்தில்
ஆண்டு தொகுதி முடிவு வித்தியாசம்
1989 போடி வெற்றி 28,731
1991 பர்கூர் வெற்றி 37,215
1991 காங்கேயம் வெற்றி 33,291
1996 பர்கூர் தோல்வி 8,366
2002 ஆண்டிபட்டி வெற்றி (இடைத்தேர்தல்) 41,201
2006 ஆண்டிபட்டி வெற்றி 25,186
2011 ஸ்ரீரங்கம் வெற்றி 41,848
2015 ஆர்.கே.நகர் வெற்றி (இடைத்தேர்தல்) 1,41,062
2016 ஆர்.கே.நகர்., வெற்றி 39,545
2001 தேர்தலில் நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
2வது இடம் இந்தியாவில் பதவி வகித்த பெண் முதல்வர்களில் நீண்டகாலம் பதவியில் இருந்தவர்களின் பட்டியலில் ௨வது இடத்தில் ஜெயலலிதா உள்ளார். இவர், நேற்றுடன் சேர்த்து 5,௨௪4 நாட்கள் தமிழக முதல்வராக இருந்தார். முதலிடத்தில் டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் (5,504) உள்ளார். ஜெயலலிதா முதலிடம் பெற வாய்ப்பிருந்தது. ஆனால் காலம் கைகொடுக்கவில்லை.
குருவை மிஞ்சினார்: ஜெயலலிதாவின் அரசியல் ஆசான் எம்.ஜி.ஆர்., கூட தனித்து போட்டியிட தயங்கினார். ஆனால், 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டியிடும் என்ற துணிச்சலான முடிவை எடுத்தார் ஜெயலலிதா. புதுச்சேரி சேர்த்து மொத்தம் 40 இடங்களில் போட்டியிட்டு, 37 இடங்களில் வென்ற அ.தி.முக., லோக்சபாவில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது.
நீங்கள் செய்வீர்களா... பிரசாரத்தின் போது மக்களிடம் கேள்வி கேட்டு அவர்களிடம் இருந்தே பதிலை பெறும் புது 'டிரெண்டை' ஜெயலலிதா பிரசாரத்தில் அறிமுகம் செய்தார். 'நீங்கள் செய்வீர்களா' என இவர், கேட்க, மக்களும் 'செய்வோம்' என ஓட்டுகளை தவறாமல் அளிக்க, வெற்றி மேல் வெற்றி பெற்றார்.
English Summary : Chief Minister Jayalalithaa - Biography.