சென்னை: ஜெயலலிதாவின் அரசியல் பயணம் அப்படி ஒன்றும் எளிதான ஒன்றாக இருந்துவிடவில்லை.. ஜெயலலிதாவே சொன்னது போல், எனக்கான அரசியல் பாதையை முட்கள் நிறைந்ததாகத்தான் எம்ஜிஆர் அவர்கள் விட்டு வைத்திருந்தார் என்பது யதார்த்தமானது.
எம்ஜிஆரால் அதிமுகவுக்குள் கொண்டுவரப்பட்டார் ஜெயலலிதா. ஆனால் அதிமுகவில் எம்ஜிஆருக்கு அடுத்ததாக இருந்த 2-ம் கட்ட தலைவர்கள் யாரும் ஜெயலலிதாவை ஏற்கவே இல்லை.
ஜெயலலிதாவை அரசியலில் இருந்து ஒழித்துக்கட்டியாக வேண்டும் என்பதில்தான் அன்றைய 2-ம் கட்ட தலைவர்களான நெடுஞ்செழியன், வீரப்பன், அரங்கநாயகம், காளிமுத்து உள்ளிட்டோர் இருந்தனர். ஜெயலலிதாவுக்கு அதிமுகவின் கொள்கை பரப்பு செயலர் பதவியையும் அடுத்ததாக ராஜ்யசபா தலைவர் பதவியையும் கொடுத்தார் எம்ஜிஆர்.
எம்ஜிஆர்:
விட்டுவிடுவார்களா? போட்டி கோஷ்டிகள்... வரிந்துகட்டிக் கொண்டு எம்ஜிஆருடன் மல்லுக்கட்டினர். ஒருகட்டத்தில் எம்ஜிஆரே நொந்து போய் நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றெல்லாம் கூட அறிவித்தார். அதே நேரத்தில் ஜெயலலிதாவுக்கு தம்முடைய அமைச்சரவையின் மிக முக்கிய அமைச்சர்களையும் தூக்கியடித்தார் எம்ஜிஆர்.
முள்கிசுமந்த ஜெ. ரீடம் :
எம்ஜிஆரைப் பொறுத்தவரை இருதலைக் கொள்ளி எறும்பாக ஜெயலலிதா விவகாரத்தில் இருந்தார். ஜெயலலிதாவோ எம்ஜிஆரின் ஆதரவு முற்று முழுதாக கிடைக்காமலும் எதிர்ப்பாளர்கள் சூழ்ந்த முள்வேலிகளுக்கு நடுவே சிக்கியவராக இருந்தார். என்னதான் கொள்கை பரப்புச் செயலர் பதவி, ராஜ்யசபா எம்பி பதவி என அதிமுகவில் அவருக்கு ஒரு இடம் இருந்தாலும் அது மலர் கிரீடமாக இல்லாமல் முள் கிரீடமாகவே இருந்து வந்தது.
நிராதரவு:
ஜெயலலிதாவின் ஆதரவாளர்களை எம்ஜிஆர் மிரட்டிய கதைகளும் உண்டு... நீக்கிய சம்பவங்களும் நிகழ்ந்தும் உள்ளன. எம்ஜிஆர் மறைவின்போது கிட்டத்தட்ட நிராதரவான நிலையில்தான் ஜெயலலிதா தள்ளிவிடப்பட்டார்...
உலகம் பார்க்க அவமானம்:
உலகமே பார்க்க எம்ஜிஆரின் பூத உடல் ஏற்றப்பட்ட வண்டியில் இருந்து அவர் இறக்கிவிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் பகிரங்கமாக நடந்தது. எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் தலைமை பதவிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே 'எம்ஜிஆர் விசுவாசம்" என்ற பெயரில் எம்ஜிஆர் மனைவி ஜானகி அம்மாயரை ஜெயலலிதாவுக்கு எதிராக முன்னிறுத்தினார்கள் அவரது எதிர்ப்பாளர்கள். இதன் விளைவாக அதிமுக இரண்டாகவே உடைந்து போனது... எம்ஜிஆரின் வெற்றி சின்னம் இரட்டலை இலை முடக்கவும் செய்யப்பட்டது.
அதிமுகவுக்கு தலைமை:
1989-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதுவரை தோல்வியே காணாத அதிமுக தோற்றுப் போனது. வெற்றியே பெறாமல் வனவாசம் போன திமுக ஆட்சியை பிடித்தது. அப்போதுதான் ஜெயலலிதாவின் எதிர்ப்பாளர்கள் இனியும் தாக்குப் பிடிக்க முடியாது என அவரது தலைமையை ஏற்கத் தொடங்கிவிட்டனர். ஒருகட்டத்தில் அண்ணாவால் தம்பி வா தலைமை ஏற்கவா என அழைக்கப்பட்ட நெடுஞ்செழியன் கூட ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றது காலத்தின் கோலம்.
தலைவிரி கோலமும் லாரி விபத்தும்:
அதன் பின்னர் ஆளும் கட்சியாக திமுக கோலோச்சிய சட்டசபையில் ஜெயலலிதா படுமோசமாக அவமானப்படுத்தப்பட்டார். தமிழக அரசியலில் கம்பீரமாக வலம் வந்த ஜெயலலிதா அன்று சட்டசபையில் இருந்து தலைவிரி கோலமாக கிழிந்த சேலை சகிதமாக வந்த காட்சி அதிமுகவினரை அதிர வைத்தது. அதேபோல் ஜெயலலிதா கார் மீது உதயசூரியன் சின்னம் பொறித்த கார் மோதி விபத்துக்குள்ளானதும் அதிமுகவினரை திமுகவின் பரம வைரிகளாக்கிவிட்டது.
ராஜீவ், வாழப்பாடி :
1991-ம் ஆண்டு தேர்தல் களம்... ஒன்றுபட்ட அதிமுகவின் அசைக்க முடியாத தலைவியாக உருவெடுத்த ஜெயலலிதா, எம்ஜிஆர் வகுத்து கொடுத்த பார்முலாபடி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். 1984-களில் இருந்தே ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்தவர் ராஜிவ் காந்தி. இதனால் காங்கிரஸ்- அதிமுக கூட்டணி இயற்கை கூட்டணியாக இருந்தது. இந்த இயற்கைக் கூட்டணிக்கு பக்க பலமாக இருந்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி. இந்த படுதேர்தலில் ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்படுகிறார். தமிழகம் முழுவதும் திமுகவினர் மீதான கோபத்தை அதிமுக- காங்கிரஸ் தொண்டர்கள் இணைந்து காட்டினர்.
விஸ்வரூப வெற்றி:
அத்தேர்தலில் வரலாறு காணாத விஸ்வரூப வெற்றியைப் பெற்றார் ஜெயலலிதா. இந்த வரலாறு காணாத விஸ்வரூப வெற்றிதான் ஜெயலலிதாவை கூடுதலாக இரும்புப் பெண்மணியாக்கியது. இந்த அபார சாதனைக்குப் பின்னர் எம்ஜிஆர் கால தலைவர்கள் படிப்படியாக அதிமுகவில் இருந்து அகற்றப்பட்டனர். தேசிய அரசியலிலும் தம்முடைய கையை ஓங்க வைத்துக் கொண்டார். அவரால் வாஜ்பாயின் ஆட்சியே கவிழ்க்கப்பட்ட வரலாறும் நடந்தேறியது. ஜெயலலிதாவுக்கு கணிசமான ஊடகங்கள் பல காரணங்களால் தொடர்ந்து ஆதரவு கொடுத்தும் வந்தன.
சரித்திரம் படைத்த கடைசி தேர்தல்கள் :
ஜெயலலிதா கடைசியாக எதிர்கொண்ட லோக்சபா தேர்தலும் சட்டசபை தேர்தலும் சரித்திரம் படைத்தவைதான்... ஆம் தமிழகத்தில் 37 லோக்சபா தொகுதிகளில் வென்றது அதிமுக; சட்டசபை தேர்தலிலும் வென்று 1984-ம் ஆண்டுக்குப் பின்னர் 2-வது முறையாக ஆட்சியை தக்க வைத்தது அதிமுக என்ற பொன்னெழுத்தைப் பொறித்தார் ஜெயலலிதா.
அம்மாவாக வாழ்க்கை நிறைவு :
தம்முடைய அரசியல் பயணத்தின் தொடக்கம் என்னதான் மேடு பள்ளங்களாலும் கரடு முரடான பாறைகளாலும் கூரிய முட்களாலும் நிறைந்ததாக இருந்தாலும்... இறுதிக் காலத்தில் சரித்திரங்கள் பல படைத்த தமிழகத்தின் நேசத்துக்குரிய 'அம்மா'வாக தன்னுடைய பயணத்தை நிறைவு செய்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
தீரநெஞ்சம் கொண்ட இரும்புப் பெண்மணி ஜெயலலிதாவுக்கு புகழஞ்சலி!
English summary:
Here the Political Journy of Jayalalithaa.