நாகை: நாகை, திருவாரூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, கடலூரைச் சேர்ந்த 5 விவசாயிகள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். தண்ணீரின்றி நெற்பயிர் கருகிறால் 5 பேரும் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் அறுபதாம் கட்டையில் விவசாயி தம்புசாமி என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். பயிர்கள் கருகியதால் மனமுடைந்த தம்புசாமி வயலிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். நாகை மாவட்டத்தில் தண்ணீரின்றி பயிர்கள் கருகியதால் மனமுடைந்து விவசாயிகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. நாகை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் 11 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் திருவாரூர் மாவட்டம் கடம்பர வாழ்க்கையை அடுத்த புத்தாநல்லூரில் வடமலை என்னும் விவசாயி மாரடைப்பால் உயிரிழந்தார். 3 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர் கருகியதால் மனமுடைந்த விவசாயி மாரடைப்பால் உயிரிழந்ததாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 12 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளத்தில் விவசாயி அழகர்சாமி மாரடைப்பால் உயிரிழந்தார். நீரின்றி நெற்பயிர் கருகியதால் மனமுடைந்த விவசாயி மாரடைப்பால் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பத்தில் விவசாயி மண்ணு மாரடைப்பால் உயிரிழந்தார். செல்லங்குப்பத்தில் 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்புப்பயிர் தண்ணீர் இன்றி காய்ந்தது. இதனை கண்ட விவசாயி அதிர்ச்சியில் உயிரிழந்தாக கூறப்படுகிறது. மேலும் கடலூர் மாவட்டம் ஆழங்காத்தான் கிராமத்தில் விவசாயி செந்தமிழன் மாரடைப்பால் உயிரிழந்தார். இன்று ஒரே நாளில் 5 விவசாயிகள் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் உயிரிழந்த விவசாயிகள் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை உயிரிழந்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 79-ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக நேற்று 3 விவசாயிகளும், நேற்று முன்தினம் ஒரேநாளில் 11 விவசாயிகளும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சி, தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்தனர். காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நெல், மஞ்சள், உளுந்து, மக்காச்சோளம் போன்றவற்றை பயிரிட்டு இருந்தனர். டெல்டா பாசனத்துக்காக, மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால், தண்ணீர் பற்றாக்குறையால் அணை மூடப்பட்டது.
இதனால், பயிர்கள் கருகி, வயல்களில் வெடிப்பு விழுந்தது. மேலும், பருவ மழை கைவிட்டதாலும், ஆறு, ஏரிகளில் தண்ணீர் வற்றியதாலும் பல மாவட்டங்களில் பயிர்கள் கருகின. இந்த வேதனையை தாங்காமல் அதிர்ச்சியிலும் மாரடைப்பிலும் விவசாயிகள் பரிதாபமாக இறக்கின்றனர். தமிழக அளவில் 74 விவசாயிகள் இறந்தனர். இந்நிலையில் மேலும் 5 விவசாயிகள் இறந்தனர். இதனையடுத்து தமிழகத்தில் உயிரிழந்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 79-ஆக உயர்ந்துள்ளது.
பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்:
சென்னையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளரான பி.ஆர்.பாண்டியன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இதில், தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுவதாகவும், வறட்சியால் விவசாயிகளின் உயிரிழப்பு தொடர்வதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஜனவரி 5ம் தேதி நடைபெற உள்ள போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க ஸ்டாலினை சந்தித்ததாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
English Summary:
Nagapattinam: Nagapattinam, Thiruvarur, Tuticorin, Tiruvannamalai, kadalurai 5 farmers who died of a heart attack. 5 persons were reported killed by destroyed rice without water.