சென்னை - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் வேளாண் பாதிப்புகள் குறித்த விவரங்களை கணக்கெடுக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. திருவாரூர், விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்த நிலையில், சம்பா மற்றும் வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்ட விவசாயிகளின் துயர்துடைக்க ஏதுவாக, வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்தார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் முழுவீச்சில் ஆய்வு செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக விளை நிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இழப்புகளை கணக்கிடுதல் குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் டி.ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாடாளூமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, வறட்சி பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
விழுப்புரம் மாவட்டம்:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, காணை ஆகிய ஒன்றியங்களூக்கு உட்பட்ட பெரும்பாக்கம், சோழகனூர் உள்ளிட்ட பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை, அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். இம்மாவட்ட த்தில் வறட்சி பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பதற்காக, வருவாய்த்துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 600-க்கும்மேற்பட்ட அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் :
கடலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் எம்.சி சம்பத் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். இதேபோன்று பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி, வில்லியநல்லூர், மேலமுங்கிலடி உள்ளிட்ட பகுதிகளிலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் :
கன்னியாகுமரி மாவட்டம் நாராயணன் புதூர், பொத்தையடி, கரும்பாட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களை, அமைச்சர் ஆர்.பி .உதயகுமார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வேலூர் மாவட்டம் :
வேலூர் மாவட்டம் மண்டலவாடி, பால்னாங்குப்பம், மல்லகுண்டா உள்ளிட்ட பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை அமைச்சர்கள் கே.சி. வீரமணி, டாக்டர். நிலோஃபர் கபில் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் :
திருவள்ளூர் மாவட்டம் எர்ணாகுப்பம், வடமதுரை, கல்பட்டு, ஆலப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை அமைச்சர்கள் க. பாண்டியராஜன், பெஞ்சமின் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, விவசாயிகளிடம் பாதிப்பு விவரம் குறித்து கேட்டறிந்த அமைச்சர்கள், விரைவில் நிவாரண உதவிகள் கிடைக்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டம்:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள நரிக்குடி, காரியாபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மாவட்ட ஆட்சியர், வேளாண் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
English summary:
Chennai - Tamil Nadu and agricultural impacts of drought in various parts of the specific details of the survey work is going on in full swing. Thiruvarur, Villupuram, in the drought-affected areas, including districts, ministers, officials and others conducting research, the farmers heard the details.