சென்னை: சசிகலா தரப்பினரிடம், நான் கேட்க நினைத்த கேள்விகளையெல்லாம், முன்னாள் அமைச்சர் முனுசாமி கேட்டுள்ளார் என, முதல்வர் பன்னீர்செல்வம், தன் குடும்பத்தினரிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
தஞ்சையில், பொங்கல் விழாவை, வழக்கம் போல இந்தாண்டும் சசிகலாவின் கணவர் நடராஜன் நடத்தினார். அதில் கலந்து கொண்ட சசிகலாவின் சகோதரர் திவாகரன், 1972ல் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில், எஸ்.டி.சோமசுந்தரத்தோடு இணைந்து, நடராஜன் பணியாற்றினார். அதனால்தான் அ.தி.மு.க.,வுக்கு வெற்றி கிடைத்தது. இரட்டை இலை சின்னத்தை வாங்கிக் கொடுத்தது நடராஜன்தான். ஆனால், அ.தி.மு.க.,வை பிளக்க சதி செய்திகின்றனர். அ.தி.மு.க.,வை எங்கள் பிணத்தின் மீதுதான் பிளக்க முடியும் என்றெல்லாம், படு காட்டமாகவும்; ஆவேசமாகவும் பேசினார்.
பாஜ மீது பாய்ந்த நடராஜன்:
மறுநாள் விழாவில் பேசிய நடராஜன், இதற்கு ஒரு படி மேலே சென்று, மத்திய பா.ஜ., அரசும்; தலைவர்களும் சேர்ந்து, அ.தி.மு.க., அரசை கலைக்க சதி செய்கின்றனர்; அ.தி.மு.க.,வை பிளந்து, கட்சியை காவி மயமாக்கத் துடிக்கின்றனர். 36 ஆண்டுகளாக, ஜெயலலிதாவை தோளில் சுமந்தவர் சசிகலா. ஜெயலலிதாவுக்கு நாங்கள்தான் பாதுகாப்பளித்தோம். நாங்கள் குடும்ப அரசியல் செய்வதாக சொல்கின்றனர். அப்படி சொன்னால், அதில் தவறில்லை; நாங்கள் குடும்ப அரசியல்தான் செய்கிறோம்; செய்வோம் என்றெல்லாம், மிகக் கடுமையாகப் பேசினார்.
இந்நிலையில் தான், முன்னாள அமைச்சர் கே.பி.முனுசாமி, திவாகரன் மற்றும் நடராஜனுக்கு எதிராக பொங்கினார். கூடவே, தமிழகத்தில் பன்னீர்செல்வம் தலைமையில் நல்லாட்சி நடக்கிறது. பன்னீர்செல்வம், மிகச் சிறப்பாக செயல்படுகிறார். தமிழகத்துக்கு கிருஷ்ணா நதி நீரை பெற்றுக் கொடுத்திருக்கிறார்; வார்தா புயல் நிவாரண நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் என்றெல்லாம் பாராட்டு பத்திரம் வாசித்தார். இதனால், அவர் மீது கடும் கோபம் அடைந்திருக்கிறது சசிகலா தரப்பு. அதே நேரம், நான் நினைப்பதையெல்லாம் முனுசாமி பேசி இருக்கிறார் என, சந்தோஷத்தில் இருக்கிறாராம் பன்னீர்செல்வம். இதை தன் குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
பன்னீர்செல்வம் உறுதி;
இது குறித்து, பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது: முதல்வர் பன்னீர்செல்வம், தன் பணியில் ஆழ்ந்த கவனம் செலுத்தி செயல்பட முடியாத அளவுக்கு, சசிகலா தரப்பினர் அவருக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர். ஆனாலும், அதையெல்லாம் மீறி, தன்னிச்சையாக செயல்பட்டு, மக்கள் மத்தியில் நல்ல பெயரை ஈட்ட வேண்டும் என்பதில், பன்னீர்செல்வம் உறுதியாக இருக்கிறார். இருந்தபோதும், அவருக்கு கடும் மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், தஞ்சையில் ஆவேசமாக பேசிய திவாகரன் மற்றும் நடராஜனின் பேச்சு பற்றிய தகவல்கள், முதல்வர் பன்னீர்செல்வத்தை அடைந்ததும், அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். உண்மைக்குப் புறம்பாக பேச துவங்கி விட்டனரே என, புலம்பினார்.
இந்நிலையில்தான், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, நடராஜனையும், திவாகரனையும் கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்தார். அது, பன்னீர்செல்வத்துக்கு இதமாக இருக்க, சந்தோஷமாகி விட்டார். நான் கேட்க நினைப்பதையெல்லாம், முனுசாமி, பக்குவமாக கேட்டு விட்டார்; என் மனசாட்சியாகவே பேசியிருக்கிறார் என, மகிழ்ச்சியில், தன் கருத்துக்களை குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
English Summary:
Chennai: Shashikala parties, Every question I wanted to hear, as the former minister asked Munisamy, Chief Panneerselvam, to share the joy with her family, reports from sources close to him have been leaked.