திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது. யு.ஏ.இ தூதரக பார்சல் மூலமாகத் தங்கம் கடத்தியது கடந்த ஜூலை மாதம், 5-ம் தேதி, திருவனந்தபுரம் விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. தூதரக பார்சலை எடுப்பதற்காகக் கடிதத்துடன் வந்த ஸரித் என்பவர் முதலில் கைது செய்யப்பட்டார். பின்னர் கேரள தலைமைச் செயலகத்தில் ஐடி பிரிவில் தற்காலிகமாகப் பணி செய்துவந்த ஸ்வப்னா சுரேஷ் இதற்குப் பின்புலமாக இருந்ததாகத் தெரியவந்தது.
ஸரித்தும் ஸ்வப்னாவும் இதற்கு முன்னர் யு.ஏ.இ தூதரகத்தில் பணி செய்ததும் தெரியவந்தது. இதற்கிடையில் பெங்களூரில் தலைமறைவாக இருந்த ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரின் நண்பர் சந்தீப் நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஸ்வப்னா சுரேஷுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் அந்தப் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஸ்வப்னாவின் வங்கி லாக்கரிலிருந்து ஒரு கிலோ தங்கம், சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணம் ஆகியவை எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வழக்கில் துபாயிலிருந்து தங்கம் அனுப்பிவைக்கும் பைசல் ஃபரீத் என்பவரை இந்தியா கொண்டுவர முயற்சி நடந்துவருகிறது.ஸ்வப்னா வழக்கு
தங்கக் கடத்தல் வழக்கில் தீவிரவாதிகளுக்குத் தொடர்பு இருப்பதாக கூறி, என்.ஐ.ஏ இந்த வழக்கைத் தீவிரமாக விசாரணை நடத்திவருகிறது. சுங்கத்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்டவையும் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்திவருகின்றன. கேரள தலைமைச் செயலக அலுவலகத்தின் சிசிடிவி கேமரா காட்சிகள் உள்ளிட்டவற்றை விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர். இந்த வழக்கில் சுமார் 20 பேர் கைது செய்யப்படுள்ளனர். நகைகளை விலைக்கு வாங்கிய கோழிக்கோட்டைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் இதில் அடக்கம்.
Also Read: கேரளா: `தூதரக அதிகாரியுடன் இணைந்து ரியல் எஸ்டேட்?’ - ஸ்வப்னா லாக்கரில் சிக்கிய பணம், தங்கம்
கேரள அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது இந்த வழக்கு. இதில் கைது செய்யப்பட்டிருக்கும் ஸ்வப்னா சுரேஷ் திருச்சூர் விய்யூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் திருச்சூர் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். `பெரிய அளவில் பிரச்னை இல்லையென்றாலும், சில நாள்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும்’ என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மருத்துவமனையில் ஐ.சி.யூ-வில் அட்மிட் செய்யப்பட்டிருக்கும் ஸ்வப்னா சுரேஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஸ்வப்னா சுரேஷ்
டாக்டர்கள் நடத்திய எக்கோ பரிசோதனையில் ஸ்வப்னாவுக்கு பெரிய அளவில் பிரச்னை இல்லை எனவும் கூறப்படுகிறது. ஸ்வப்னா சிகிச்சை பெற்றுவரும் வார்டுக்கு வெளிப்பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஸ்வப்னாவுக்கு மருத்துவ சிகிச்சை முடித்த பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னாவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
http://dlvr.it/RgHX7Y
http://dlvr.it/RgHX7Y