ஐ.நா அவையில், காஷ்மீர் பிரச்னை குறித்த பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியின் பேச்சை இந்தியா நிராகரித்ததோடு, `பாகிஸ்தான், உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் மையப்பகுதி’ என்று பதிலடி கொடுத்தது.
உலக அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யப் பல்வேறு நாடுகள் இணைந்து, `ஐக்கிய நாடுகள் சபை’ என்ற அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பு 1945-ம் ஆண்டு, செப்டம்பர் 24-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது.
1945-ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கிய ஐக்கிய நாடுகள் சபை, இந்த ஆண்டுடன் 75 ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இதையொட்டி இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை ஐ.நா அவை நடைபெறுகிறது.
ஐ.நா சபையின் 75-வது ஆண்டு விழாவில், இன்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதிபர்களும், பிரதமர்களும் காணொலி வாயிலாக உரை நிகழ்த்தினர். இதில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, ``ஐ.நா சபை கடந்த 75 ஆண்டுகளில் பலவற்றைச் சாதித்திருந்தாலும், அதன் முக்கிய நோக்கம் இன்றும் பூர்த்தியடையாமலேயே இருக்கிறது. ஐ.நா கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும்'' என்று பேசினார். மேலும், ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கொடுப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்திப் பேசினார்.
ஐ.நா அவையில் காணொலி வாயிலாகப் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, ஐ.நா-வின் சாதனைகளைப் பாராட்டினார், அதேசமயம் ஐ.நா-வின் `தோல்விகள் மற்றும் குறைபாடுகள்' என்றும் சிலவற்றைக் குறிப்பிட்டு பேசத் தொடங்கினார்.ஐ.நா
குரேஷி தன் உரையில்,``ஐ.நா. அமைப்பு அதன் உறுப்பு நாடுகள் விரும்புவதைப்போலவே சிறந்த அமைப்பு. ஜம்மு-காஷ்மீர் மற்றும் பாலஸ்தீன மோதல்கள் இந்த அமைப்பின் மிகவும் வெளிப்படையான மற்றும் நீண்டகால மோதல்கள். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள், தங்களுக்கு சுயநிர்ணய உரிமையை வழங்கி, அவர்களின் உறுதிப்பாட்டை ஐ.நா நிறைவேற்றும் என்று இன்னும் காத்திருக்கிறார்கள்.
ஆனால், `ஐ.நா-வால் பேச மட்டுமே முடியும். செயலில் எதையும் காட்ட முடியாது’ என உலக நாடுகள் கேலி செய்கின்றன. இந்தச் சபையின் தீர்மானங்களும் முடிவுகளும் மீறப்படுகின்றன. சர்வதேச ஒத்துழைப்பு, குறிப்பாக பாதுகாப்பு கவுன்சிலில் மிகக் குறைவு” என்று அவர் கூறினார்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷியின் உரைக்கு `பதிலளிக்கும் உரிமையை’ (Right to reply) பயன்படுத்தி, ஐ.நா-விலுள்ள இந்திய தூதுக்குழு விரைவில் பதிலளித்தது.
அப்போது பேசிய இந்திய வெளியுறவுத்துறை முதன்மைச் செயலாளர் விதிஷா மைத்ரா,``இதுவரை இது போன்ற தளங்களில் பாகிஸ்தான் தலையீடுகளின் முகத்திரை மாறிவிட்டது'' என்றார்.
காஷ்மீர் பிரச்னை குறித்து குரேஷி பேசியதைச் சுட்டிக்காட்டிப் பேசிய விதிஷா, இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடுவதாகக் குற்றம்சாட்டினார்.இம்ரான் கான்
``இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து பாகிஸ்தான் பிரதிநிதி முன்வைத்த அனைத்தும் புனையப்பட்ட கதைகள். இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் ஜம்மு-காஷ்மீர் பகுதிக்குத் தீங்கிழைப்பது குறித்த குரேஷியின் பேச்சை நாங்கள் நிராகரிக்கிறோம்" என்றார் அவர்.
மேலும்,``ஐ.நா-வின் பட்டியலில் முடிக்கப்படாத ஒரு விஷயம் இருந்தால், அது பயங்கரவாதத்தின் வேதனையைச் சமாளிப்பதாகவே இருக்கும். பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மையமாக உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, பயிற்சி வழங்குவதன் மூலம் பாகிஸ்தானே இதை உறுதிப்படுத்தியிருக்கிறது'' என்றார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனை `தியாகி' என்று கூறியதைச் சுட்டிக்காட்டிய விதிஷா, பாகிஸ்தான் இன மற்றும் மதச் சிறுபான்மையினரைத் தொடர்ந்து துன்புறுத்திவருவதாகக் குற்றம்சாட்டினார்.
அதேபோல், ``ஐ.நா என்ற தளத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது பாகிஸ்தான். தமது பிரச்னைகளையும் கவலையையும் போக்கிக்கொள்ள, பாகிஸ்தான் அதன் உள்நாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்துவது நல்லது'' என்றும் விதிஷா மைத்ரா கூறினார்.
http://dlvr.it/Rh7GgD
http://dlvr.it/Rh7GgD