கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ``சி.பி.ஐ தன் அதிகார வரம்பை மீறி, அரசியலமைப்புரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது" என்று சமீபத்தில் குற்றம்சாட்டிப் பேசியிருந்தார்.
இனி கேரளாவில் எந்தவொரு வழக்கின் விசாரணையையும் நடத்த மாநில அரசிடம் சி.பி.ஐ முன் அனுமதி பெற வேண்டும் எனவும். சி.பி.ஐ-க்கு வழங்கப்பட்டிருந்த பொது அனுமதியைத் திரும்பப் பெறுவதாகவும் கேரள அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
சி.பி.ஐ-யின் அதிகார வரம்பு, டெல்லி சிறப்பு காவல் நிறுவனச் சட்டத்தின் (Delhi Special Police Eshtablishment - DSPE 1946) மூலம் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் மத்திய ஆட்சிப் பகுதிகளின் காவல்துறைக்கு இருக்கும் அதே அதிகாரங்களையும், பொறுப்புகளையும் சி.பி.ஐ-க்கும் வழங்குகிறது. டெல்லியைத் தவிர, நாட்டில் எந்தவொரு மாநிலத்திலும் சி.பி.ஐ., தனது அதிகாரத்தைப் பயன்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசின் பொது ஒப்புதல் (General Consent) பெற்றிருப்பது அவசியம். சி.பி.ஐ-க்கு பொது ஒப்புதல் மறுக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில்,சி.பி.ஐ வழக்கு விசாரணை செய்ய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்.கேரள முதல்வர் பினராயி விஜயன்
பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களான ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம் ஆகியவை சி.பி.ஐ-க்கு வழங்கியிருந்த பொது ஒப்புதலை ஏற்கெனவே திரும்பப் பெற்றிருக்கின்றன. இதையடுத்து சமீபத்தில், டி.ஆர்.பி மோசடி வழக்கின் முக்கியத் திருப்பமாக மகாராஷ்டிரா மாநிலமும் சி.பி.ஐ பொது ஒப்புதலைத் திரும்பப் பெற்றது.
இந்தநிலையில், சி.பி.ஐ-க்கு வழங்கப்பட்டிருந்த பொது ஒப்புதலை ரத்து செய்யும் மாநிலங்களின் பட்டியலில் தற்போது கேரளாவும் இணைந்திருக்கிறது. கேரளா மாநிலத்தில் விசாரணைகளை நடத்துவதற்காக மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்ட பொது ஒப்புதலை ரத்துசெய்ய கேரள அரசு முடிவு செய்திருக்கிறது.
Also Read: சுஷாந்த் வழக்கு: `உண்மையை நோக்கிய முதல் படி!’ - சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்
இந்த வார தொடக்கத்தில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ``சி.பி.ஐ தன் அதிகார வரம்பை மீறி, அரசியலமைப்புரீதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது" என்று மத்திய புலனாய்வுப் பிரிவைக் குற்றம்சாட்டிப் பேசினார். அப்போதே, சி.பி.ஐ பொது ஒப்புதலை முதல்வர் ரத்து செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மாநில அமைச்சரவையில் அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த செப்டம்பர் மாதம், கேரள அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமான நிலம் அல்லது வீடில்லாத குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் லைஃப் மிஷன் (Life Mission) திட்டத்தில் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறியதாக, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான காங்கிரஸ் எம்.எல்.ஏ அனில் அக்கரா அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது.
இதையடுத்து, லைஃப் மிஷன் தலைமை நிர்வாக அதிகாரி யு.வி.ஜோஸின் மனுவின் அடிப்படையில், கேரள உயர் நீதிமன்றம் இரண்டு மாத காலத்துக்கு விசாரணையை நிறுத்த உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், ஒப்பந்த நிறுவனம் உட்பட பிரச்னையின் பிற அம்சங்களை ஆராய்வதை நீதிமன்றம் தடுக்கவில்லை. சி.பி.ஐ
சி.பி.ஐ பதிவு செய்த இந்த வழக்கு ``மாநில அரசை இழிவுப்படுத்தும் திட்டமிட்ட முயற்சியைக் குறிக்கிறது’’ என்று நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள புலனாய்வு அமைப்புகள் மாநில அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் தலையிடும் சூழ்நிலை எழுந்திருப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியிருக்கிறார்.
சமீபத்தில், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசாங்கமும் இது போன்ற சம்பவத்தில் பொது அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டதையடுத்து, சில நாள்களிலேயே கேரள அரசும் முடிவெடுத்திருக்கிறது.
மேலும், கேரள மாநிலம் தேர்தலைச் சந்திக்க இன்னும் ஆறு மாதங்களே இருக்கும் நிலையில் ஸ்வப்னா சுரேஷ் தங்கக் கடத்தல் விவகாரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் கொடியேறி பாலகிருஷ்ணனின் இளைய மகன் பினீஷ் கொடியேறி போதைப்பொருள் கடத்தல் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளால் தற்போதைய கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு அடுத்த முறை ஆட்சி அமைப்பது சவாலாகிவரும் சூழலில்., இந்த வழக்குகளை விசாரித்துவரும் மத்தியப் புலனாய்வுப் பிரிவின் பொது ஒப்புதலை ஆளும் கம்யூனிஸ்ட் அரசு ரத்து செய்வதாக அமைச்சரவையில் முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/Rl2jF5
http://dlvr.it/Rl2jF5