கர்நாடகாவில் இந்தாண்டு தீபாவளிக்கு பட்டாசு விற்க, வெடிக்க தடை விதிப்பதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா நேற்று (06.11.2020) காலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதனால், பொதுமக்களிடையே எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக தற்பொழுது பசுமைப் பட்டாசுகளை மட்டும் விற்க, வெடிக்க அனுமதி அளிப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு, கொரோனா பரவல் காரணமாக வழக்கத்தைவிட தீபாவளிப் பண்டிகை பொழிவிழந்து காணப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், பல கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் சிவகாசியில் தேங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு ராஜஸ்தான், ஒடிசா மாநில முதல்வர்களுக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். பட்டாசு
இந்தநிலையில், ``பட்டாசுகளின் மூலம் வெளிப்படும் புகை வளிமண்டலைத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, பொதுமக்களின் உடல்நலனையும் பாதிக்கும். குறிப்பாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், குணமடைந்தவர்களுக்கும் இவை மூச்சுத்திணறல் போன்ற பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் என்பதால், இந்தாண்டு கர்நாடகாவில் தீபாவளிக்கு பட்டாசுகளை விற்க, வெடிக்கத் தடை விதிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்’’ என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று காலை தெரிவித்தார்.
இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. சமூக வலைதளங்களில், எடியூரப்பாவுக்கும், பா.ஜ.க. அரசுக்கும் கண்டனங்கள் குவியத் தொடங்கின. இதையடுத்து, கர்நாடக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ``தீபாவளியையொட்டி பட்டாசுகளுக்குத் தடை விதிக்கும் திட்டமில்லை. பொதுமக்கள் அனைவரும் தீபாவளியன்று, பசுமைப் பட்டாசுகளை வெடித்து சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read: சிவகாசி: `ராஜாஸ்தான், ஒடிசாவில் பட்டாசு வெடிக்கத் தடை!’ - ரூ.150 கோடி விற்பனை பாதிக்கும் அபாயம்
கர்நாடக முதல்வர் எடியூரப்பா இதுகுறித்து பேசுகையில், ``இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகளை விற்க, வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்த பின்னரே, அதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. எனினும், முழுமையாகத் தடை விதிக்கும் எண்ணமில்லை என்பதால், மக்கள் அனைவரும் பசுமைப் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
``கொரோனா பரவல் அதிகரித்துவரும் காரணத்தால் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவினரின் வழிகாட்டுதலின்படி பட்டாசுகளுக்குத் தடை விதிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், கொரோனா பரவலைக் கடுப்படுத்தும் பணியில் அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது’’ என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே. சுதாகர் தெரிவித்தார்.பட்டாசு
பசுமை பட்டாசுகள்
`பசுமை பட்டாசுகள்’ அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் குழு மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் வழிகாட்டுதலின்கீழ் தயாரிக்கப்படும் பட்டாசுகள் ஆகும். `இவற்றில், வழக்கமாக பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் லித்தியம், ஆர்சனிக், காரியம், பேரியம் போன்ற மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படமாட்டாது. இவை வழக்கமாக பட்டாசுகள் வெளிப்படுத்தும் காற்று மாசைவிட 40 சதவிதம் குறைவான காற்று மாசையே ஏற்படுத்தும்’ என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தீபாவளியையொட்டி பட்டாசுகளை விற்க, வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/RlBcqs