பேச்சுவார்த்தையை தொடர வேண்டுமானால் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விவசாயிகள் முன்வைத்துள்ளனர். வேளாண்சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் 7-வது நாளை எட்டியுள்ளது. நேற்றைய தினம் மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்று விவசாயிகள் தங்கள் போராட்டங்களை பல இடங்களில் தீவிரப்படுத்தியுள்ளனர். இதையடுத்து மத்திய அரசின் சார்பில் நாளைய தினமும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக இன்றைய தினத்திற்குள் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேச்சுவார்த்தையை தொடர விவசாயிகள் நிபந்தனை விதித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த விவசாய சங்க பிரதிநிதிகள் “3 வேளாண் சட்டங்களையும் அவசர சட்டம் மூலம் ரத்து செய்ய வேண்டும். மூன்று வேளாண் சட்டங்களையும் நிறுத்தி வைக்க 10 நிமிடங்கள் போதும். போராட்டம் தொடர்பாக மத்திய அரசின் சார்பில் ஒருவர் மட்டுமே பேச வேண்டும். பலரும் கருத்து தெரிவிக்கக்கூடாது. தவறினால் பேச்சுவார்த்தையில் ஈடுபட மாட்டோம். பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலதாமதப்படுத்த வேண்டாம். போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பாஜகவினர் பேசுவதை ஏற்க முடியாது” எனத் தெரிவித்துள்ளனர்.
http://dlvr.it/Rmtngl
http://dlvr.it/Rmtngl