ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கான மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்தது. அதற்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின்னர், அந்தப் பகுதியில் நடைபெறும் முதல் தேர்தல் இது என்பதால், அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக இந்தத் தேர்தலில் களமிறங்கிப் பணியாற்றின. இந்தத் தேர்தலில், ஃபரூக் அப்துல்லா தலைமையிலான குப்கர் கூட்டணி 110 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், பா.ஜ.க தனித்துப் போட்டியிட்டு 75 இடங்களைக் கைப்பற்றி `அதிக இடங்களை வென்ற கட்சி'யாக இருக்கிறது.ஃபரூக் அப்துல்லா
மாவட்ட கவுன்சில் தேர்தல்!
ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் முதல் மாவட்ட கவுன்சில் தேர்தல் இதுதான். ஒவ்வொரு மாவட்டத்தின் மேம்பாட்டுக்காகவும், பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த மாதம் 28-ம் தேதி முதல் இந்த மாதம் 19-ம் தேதி வரை எட்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் 20 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத்துக்கு 14 தொகுதிகள் பிரிக்கப்பட்டு, மொத்தம் 280 தொகுதிகளில் மாவட்ட கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தவிர்த்துவிட்டு, வாக்குச்சீட்டு முறைப்படி இந்தத் தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் பங்கேற்ற கட்சிகள்!
கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி, ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லாவின் குப்கர் இல்லத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின்னர், `குப்கர் பிரகடனம்' என்ற தீர்மானம் வெளியிடப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் அடையாளம், சிறப்பு அந்தஸ்து, சுயாட்சி ஆகியவற்றைப் பாதுகாப்பதுதான் குப்கர் பிரகடனத்தின் நோக்கம் என்று கூறப்பட்டது. இதையடுத்து மாவட்ட கவுன்சில் தேர்தலுக்காக குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி உருவானது. தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, கம்யூனிஸ்ட்டுகள் உட்பட ஏழு கட்சிகள் இணைந்து குப்கர் கூட்டணி அமைத்து மாவட்ட கவுன்சில் தேர்தலைச் சந்தித்தன.
தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பா.ஜ.க-வும் தனித்துப் போட்டியிட்டன. பகுஜன் சமாஜ், புதிதாகத் தொடங்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் அப்னி கட்சி, சுயேச்சைகள் என மொத்தம் 2,181 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர்.ஜம்மு-காஷ்மீர் தேர்தல்
Also Read: 1846 முதல் 2019 வரை! - காஷ்மீர் பிரச்னையில் நடந்தது என்ன? #VikatanInfographics
வெற்றி யாருக்கு?
குப்கர் கூட்டணி 110 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றிருக்கிறது. இந்தக் கூட்டணியில் தலைமை வகித்த ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, 66 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. குப்கர் கூட்டணியில் அங்கம்வகித்த மெகபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி 27 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. தனித்துப் போட்டியிட்ட பா.ஜ.க 75 இடங்களில் வெற்றி கண்டிருக்கிறாது. சுயேச்சைகள் 49 இடங்களையும், காங்கிரஸ் 26 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.மோடி
``இது பா.ஜ.கவுக்குக் கிடைத்த வெற்றி. பிரதமர் மோடியின் மீதும் அவரது கொள்கைகள்மீதும் மக்கள் நம்பிக்கைவைத்துள்ளனர். காஷ்மீரில் தேசியவாத சிந்தனைகள் அதிகரித்துக் கொண்டிருப்பதற்கான சான்றுதான் இந்த வெற்றி. 4.8 லட்சம் வாக்குகளையும் 75 இடங்களையும் கைப்பற்றி, காஷ்மீரில் தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க உருவெடுத்திருக்கிறது'' என்று கூறி பா.ஜ.க-வினர் இந்த வெற்றியை வெகுவாகக் கொண்டாடிவருகின்றனர்.உமர் அப்துல்லா
அதேநேரத்தில் குப்கர் கூட்டணியைச் சேர்ந்த உமர் அப்துல்லா, ``ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் தெளிவாகிறது'' என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், உமர் அப்துல்லா''மாவட்ட வளர்ச்சி கவுன்சிலுக்கான தேர்தல் முடிவு எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. காரணம், பல காலம் நாங்கள் சிறையில் வைக்கப்பட்டோம். எங்களுக்கு எதிராக அரசு இயந்திரங்கள், அதிகாரங்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தியபோதும் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம்.''
பா.ஜ.வு-க்கு எழுச்சியா... பின்னடைவா?
இந்தத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க-வுக்குச் சாதகமாக அமைந்துள்ளனவா... இல்லையா என்பது குறித்து அரசியல் நோக்கர்கள் சில கருத்துகளை முன்வைக்கின்றனர். ``ஜம்மு-காஷ்மீரில், பா.ஜ.க 75 இடங்களில் வெற்றிபெற்றிருப்பது சிலருக்கு அதிர்ச்சியளிக்கலாம். ஆனால், பா.ஜ.க வென்றிருக்கும் தொகுதிகளில் பெரும்பாலானவை இந்துக்கள் அதிகம் வாழும் தொகுதிகள்தான். ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு பகுதியில், இந்துக்கள் அதிகம் வாழும் மாவட்டங்களான ஜம்மு, கத்துவா, சம்பா, உதம்பூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள 56 இடங்களில் 49 இடங்களை பா.ஜ.க வென்றிருக்கிறது. பா.ஜ.க 280 இடங்களில் போட்டியிட்டு 4.8 லட்சம் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இரண்டாவது பெரும் கட்சியாகத் திகழும் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 168 இடங்களில் போட்டியிட்டு 2.7 லட்சம் வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
பா.ஜ.க அதிக அளவிலான வாக்குகளைப் பெற்றிருப்பதற்குக் காரணம், பா.ஜ.க வலுவாக இருக்கும் ஜம்மு பகுதியில் மொத்தமாக 70 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. அதே காஷ்மீர் பகுதியில் 35 சதவிகித வாக்குகள்தான் பதிவாகியிருந்தன. எனவே, ஜம்மு பகுதியில் வலுவாக இருக்கும் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றிருப்பது இயற்கையானது. 2014 சட்டமன்றத் தேர்தலில்கூட பா.ஜ.க-தான் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால், மக்கள் ஜனநாயகக் கட்சி அதிக இடங்களை வென்றிருந்தது. தேர்தலில் வாக்குகளைவிட அதிக தொகுதிகளைக் கைப்பற்றுவதுதான் முக்கியம்.பா.ஜ.க கொடி
Also Read: 2020 Rewind: வெளியேறிய இளவரசர்; கிம் ஜாங் உன் வதந்தி; அதிரடி புதின் - உலகை அதிரவைத்த சம்பவங்கள்!
பா.ஜ.க வலுவாக இருக்கும் ஜம்மு பகுதியிலும் அந்தக் கட்சி சரிவைச் சந்தித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த 2014 சட்டமன்றத் தேர்தலில் ஜம்மு பகுதியிலுள்ள 37 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு 25 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது பா.ஜ.க. அதாவது, போட்டியிட்ட தொகுதிகளில் 75 சதவிகித தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது. ஆனால், இந்த மாவட்ட கவுன்சில் தேர்தலில் ஜம்மு பகுதியில் போட்டியிட்ட 140 தொகுதிகளில் 71 இடங்களில் மட்டுமே, அதாவது 50 சதவிகித இடங்களில் மட்டுமே வெற்றி கண்டிருக்கிறது. இது அந்தக் கட்சியின் சரிவு என்றுதான் சொல்ல வேண்டும்'' என்கிறார்கள்.மேலும், ``2014 ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில், குறிப்பாக ஜம்முவிலுள்ள தோடா (Doda), ராம்பன் (Ramban), ரஜோரி (Rajauri) ஆகிய பகுதிகளில் கணிசமான இடங்களைக் கைப்பற்றியிருந்தது பா.ஜ.க. ஆனால், மாவட்ட கவுன்சில் தேர்தலில் இந்த மூன்று பகுதிகளிலுமுள்ள 42 மாவட்ட கவுன்சில் தொகுதிகளில் வெறும் 13 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருப்பது பா.ஜ.க-வுக்கு நிச்சயம் பின்னடைவுதான்'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
http://dlvr.it/RpK4G4
http://dlvr.it/RpK4G4