1976-ம் ஆண்டு 42-வது சட்டதிருத்தத்தின்படி இந்திய குடிமகனின் கடமைகளில் ஒன்று சுற்றுச்சூழலை பாதுகாப்பது. `இந்திய குடிமக்கள் அனைவரும் காடுகள், ஏரிகள், கடல்கள், ஆறுகள், வனவிலங்குகள் போன்ற இயற்கை சூழலைப் பாதுகாக்க வேண்டும்' என்பது தலையாய கடமையாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், எத்தனை பேர் இயற்கை வளத்தைப் பாதுகாத்து வருகிறார்கள் என்பது முதல் கேள்வி. சிலர் மட்டுமே இயற்கை வளத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.ஆணி பிடுங்கும் பணியில்
மரம் ஒரு உயிருக்குச் சமம். மனிதனை ஒரு சிறிய ஊக்கைக் கொண்டு குத்தினால் வலிக்கும். அதேபோலதான் மரமும். ஒரு மரம் ஒரு மனிதருக்குச் சமம். கேட்பதற்கு யாரும் இல்லை என்று நினைத்துக்கொண்டு, விளம்பரத் தட்டிகளுக்காக மரங்களில் அறையும் ஆணிகளை உயிர் நேயத்தோடு அகற்றி சேவை செய்கிறார், பெங்களூரைச் சேர்ந்த வினோத் கர்தவ்யா. இவர் பிடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணிகள்தான்!
``நான் பெங்களூரில் உள்ள டி.ஆர்.டி.ஓ எனப்படும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் உதவி விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறேன். கடந்த நவம்பர் மாதம், நான் போன் பேசிக்கொண்டே வீட்டிலிருந்து வெளியே வந்தேன். அங்கிருந்த மரத்தில் சாய்ந்தபோது, என்னுடைய தலையில் பலமாக ஒரு ஆணி குத்தியது. அப்போது, மரத்தில் இருக்கும் ஆணிகளை ஆராய்ச்சி செய்து அதைப் பிடுங்க முடிவு செய்தேன். இதனால், மற்றவர்களுக்கும் ஆபத்து வரக் கூடாது. மேலும், மரங்களையும் பாதுகாப்போம் வேண்டும் என முடிவு செய்தேன். இதுகுறித்து, விசாரித்தபோது ஆணிகள் அடிப்பது குற்றம் என மூன்று சட்டங்களே உள்ளன, ஆனால், இவற்றை யாரும் கடைப்பிடிப்பதில்லை என்று தெரியவந்தது. விளம்பரத் தட்டிகள் அகற்றும் பணி
முதலில் நான் தனியாகச் சென்று என்னுடைய பகுதியில் உள்ள மரத்தில் அடிக்கப்பட்ட ஆணிகளைப் பிடுங்கி வந்தேன். பின்னர், என் நண்பர்களுடன் இணைந்து பெங்களூரில் உள்ள மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகள், ஸ்டேபிள் பின்களைப் பிடுங்கி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தேன். என்னுடைய நண்பர்கள் என் பணிகளைக் குறித்து, சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். அதையடுத்து பலருக்கும் இது குறித்து தெரிய வந்தது. தொடர்ந்து, ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த வேலையில் ஈடுபட்டு வந்தேன்.
மரத்தில் ஆணி அடித்திருப்பதைப் பார்த்தபோது என் தலையில் அடித்ததைப் போல இருந்தது. இதனால்தான் அதை எடுக்க ஆரம்பித்தேன். பின்னர், அதை வாரம்தோறும் பழக்கமாக்கிக் கொண்டேன். நான் வசித்து வரும் சம்பங்கிராம் நகர் பகுதியில் உள்ள மரங்களை ஆணியிலிருந்து விடுவிக்கும் நடவடிக்கையில் இறங்கினேன். அதன் பின்னர், என் நண்பர்களும் இணைந்தனர். சனி, ஞாயிற்றுக்கிழமைதோறும் சில மணி நேரங்களை இதற்காகச் செலவிடுகிறோம். இந்தச் சேவையைக் கண்டு பிரபலங்களும் எங்களைப் பாராட்டி சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். குழுவினர்
ஒரே மரத்தில் மட்டும் 250 ஆணிகளையும், 2000 ஸ்டேபிள் பின்களையும் கண்டறிந்து அகற்றியிருக்கிறோம். கே.ஜி.ரோடு பகுதியில் உள்ள மரம் அது. மிகப் பெரிய சவாலாக இருந்தது அதுதான். தற்போது, நிறைய பேர் தாங்களாக முன்வந்து எங்கள் குழுவில் சேர்ந்து கொள்கின்றனர். பலர் எங்களுக்கு போன் செய்து அவர்களுடய பகுதியில் வந்து ஆணிகளைப் பிடுங்கச் சொல்லிக் கேட்கிறார்கள்'' என்கிறார் சமூக ஆர்வலர் வினோத்.
``நன்கு வளர்ந்த ஒரு மரம் வருடத்துக்கு 260 பவுண்ட் ஆக்சிஜனை வளி மண்டலத்துக்குத் தருகிறது. இந்த அளவு ஆக்சிஜன் ஒரு குடும்பத்தில் உள்ள நான்கு பேருக்குப் போதுமானது. அவ்வாறு பயன்தரக்கூடிய மரங்களைக் காயப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மரங்களில் ஆணி அடிப்பதால் அவற்றுக்கு தொற்று ஏற்பட்டு வளர்ச்சி பாதிக்கப்பட்டு, பின்னர் அவை பட்டுவிடும். எனவே, சாலைகள் ஓரம் உள்ள மரங்களில் யாரும் ஆணி அடிக்கக் கூடாது எனப் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்" எனத் தெரிவித்தார்.- ஆனந்தி ஜெயராமன்
http://dlvr.it/RqGWLZ
http://dlvr.it/RqGWLZ