மும்பையில் நேற்று விவசாயிகள் கலந்து கொண்ட பிரமாண்ட பேரணி நடந்தது. இப்பேரணிக்கு பிறகு பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாகனங்களில் வந்து சேர்ந்திருந்தனர். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நடந்த இப்பேரணியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று முன்பே அறிவிக்கப்பட்டது.மும்பையில் விவசாயிகள் பேரணி
ஆனால் நேற்று நடந்த பேரணியில் முதல்வர் உத்தவ் தாக்கரே கலந்து கொள்ளவில்லை. சரத்பவார் , மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாஹேப் தோரட் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் கலந்து கொள்ள சிவசேனா தரப்பில் இளைஞரணி நிர்வாகி என்று கூறப்படும் ராகுல் லோண்டேயை உத்தவ் தாக்கரே அனுப்பி வைத்திருந்தார்.
உத்தவ் தாக்கரே நேற்று தனது வீட்டில் இருந்து கொண்டு கல்யாண் என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். விழா நடைபெறும் இடத்திற்கு தனது மகன் ஆதித்ய தாக்கரேயை அனுப்பி வைத்தார். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ள சிவசேனா, நாசிக்கில் இருந்து மும்பை நோக்கி பேரணியாக வந்த விவசாயிகளுக்கும் ஆதரவு தெரிவித்தது.
Also Read: Live Updates: டிராக்டர்களில் தேசியக் கொடி; கண்காணிப்பு பணியில் ட்ரோன்கள்! - விவசாயிகளின் மெகா பேரணி #TractorRally
ஆனால் கடைசி நேரத்தில் விவசாயிகள் பேரணியில் கலந்து கொள்ளாமல் இருந்து, தான் இன்னும் பா.ஜ.க-வின் விசுவாசிதான் என்பதை மறைமுகமாக காட்டிவிட்டார் உத்தவ் என்கிறார்கள் சில மும்பைவாசிகள். விவசாய சட்டங்கள் மீது நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடந்த போது சிவசேனா வெளி நடப்பு செய்தது. மும்பையில் விவசாயிகள் பேரணியில் சிவசேனா பெரிய தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளாதது குறித்து கருத்து கேட்ட போது அக்கட்சியின் எம்.பி. அர்விந்த் சாவந்த், `நான் மும்பையில் இல்லை’ என்று கூறிவிட்டார். ஆதித்ய தாக்கரேயிடம் கேட்டதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.
``விவசாயிகளுக்கு சிவசேனா முழு ஆதரவு கொடுக்கிறது. கடந்த 60 நாட்களாக போராடும் விவசாயிகள் கோரிக்கையை ஏன் ஏற்கவில்லை என்று மீடியா மத்திய அரசை கேள்வி கேட்கவேண்டும். போராட்டக்களத்திற்கு யார் சென்றார்கள் என்று பார்ப்பதை விட மத்திய அரசு மகாராஷ்டிரா விகாஷ் அகாடியின் கோரிக்கைக்கு செவி சாய்க்கிறதா என்று பார்க்கவேண்டும்” என்று கூறினார். உத்தவ் தாக்கரே
சிவசேனாவின் செய்தித்தொடர்பாளர் இவ்விவகாரத்தில் வாயே திறக்கவில்லை. நேற்றைய மும்பை விவசாயிகள் கூட்டத்தில் பேசிய சரத்பவார், நடிகை கங்கனா ரணாவத்தை சந்திக்க ஆளுநருக்கு நேரம் இருக்கிறது. ஆனால் விவசாயிகளை சந்திக்க மட்டும் நேரம் இல்லை என்று சாடினார். ``விவசாயிகள் பேரணியின் இறுதியில் ஆளுநரை சந்தித்து மனுக்கொடுக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் ஆளுநர் கோவாவிற்கு சென்றுவிட்டதாக என்னிடம் சொல்கிறார்கள். மகாராஷ்டிரா வரலாற்றில் இது போன்ற ஒரு ஆளுநரை நான் பார்த்ததே இல்லை. அவருக்கு நடிகையை சந்திக்க நேரம் இருக்கிறது. ஆனால் விவசாய சகோதரர்களை சந்திக்க நேரம் இல்லை. நாட்டு மக்களுக்கு உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் கோரிக்கையை பெறுவதற்காகவாவது ஆளுநர் இருந்திருக்க வேண்டியது தார்மீக கடமையாகும்” என்று சரத்பவார் சாடினார். நேற்றைய பேரணிக்கு பிறகு பெரும்பாலான விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.
http://dlvr.it/RrMCCp
http://dlvr.it/RrMCCp